கவிதை நவீனமாக இருக்க வேண்டும் என்பர் சிலர், கவிதை பூடகமாக எழுத வேண்டும் என்பர் சிலர்.

கவிதை அடர்த்தியாகவும், இறுக்கமாகவும் இருக்க வேண்டும் என்பர் சிலர், கவிதைகள் வாசகனின் மனதில் உணர்வில் உறைய வேண்டும் என்பர் இன்னும் சிலர்,

கவிதைகளில் நவீனம் பற்றிய கேள்விகள் நிறைய உண்டு. நவீனம் என்பது சொல்லிலா? வடிவத்திலா? பாடுபொருளிலா? படைப்புகள் பற்றிய அனுமானம் என் பார்வையில், உணர்ந்தவன் உணர்ந்தவற்றை எழுதினால் எழுத்து தன்னை வடிவமைத்துக் கொள்ளும். படைப்புக்கும் படைப்பாளனுக்கும் இடைவெளி இருக்கக் கூடாது. ஒரு அணுக்கம் இருக்க வேண்டும்.

தோழர் தாய்நதி பகட்டில்லாத எளிய வெள்ளந்தி குணம் கொண்டவர். அவருடைய எழுத்தும் பாசாங்கற்று, எவ்வித அலங்காரத்தையும் எதிர் நோக்காமல், எளிமையும், சொற்சிக்கனமும், சொற்கட்டும் கொண்டு நேர்த்தியாக விளங்குகிறது.

படைப்பாளர்கள் சிலர் அழகியல் , புனைவு காதல் என்றெல்லாம் எழுதுவர். சிலர் சமூக அக்கறை கொண்டு கருத்துக்களை படைப்புகளாக்கிவிட்டு அத்தோடு தன் கடமை முடிந்து விட்டதாக கருதிக் கொள்வர். ஆனால் ஒரு சிலர் மட்டுமே சமூகத்தின மீது கொண்ட அக்கறையில் எழுதவும் செய்வர், அதிகார வல்லூறுகளின் மீது சொற்களையும், கற்களையும் வீசி போராட்டக் களத்திலும் நேர்மையாக நிற்பர்.

தோழர் தாய்நதி இதில் மூன்றாம் வகையினன் என்பதைக் கூறவே பெருமை கொள்கிறது நெஞ்சம். நொடிகள் தோறும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறபோது பெண்கள் ஆடை, வளர்ச்சூழல், பயண நேரம் - இப்படி விவாதங்களில மீண்டும் கொடூரமாய் குதறப்படுவார்கள்.

பெண் உடை அணிந்த பொம்மைகளைக் கூட பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இச்சமூகக் கட்டமைப்பில் பெண்களுக்கான நீதி கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான் .

யாகாவாராயினும்
குறிக்காக்க
காவாக்கால்
அறுத்தெறிவர்
எம் பெண்டிர்

ஆறு சீர்களில் புதுக்குறள் தந்த பொய்யாமொழி தோழர் தாய்நதி வலிமையான தீர்ப்பை வழங்குகிறார்.

எதைப் பற்றியும் அக்கறை கொள்ளாது , தாயெனக் காத்து நின்றவளை துரோகத்தால் கொன்று, வீசியெறியப்பட்ட பதவித் துண்டுகளைக் கவ்வியபடியேத் திரியும் இவைகளை "நாய்களுடன்" ஒப்பிட்டு நாய்களை இழிவுபடுத்தியதற்கு வருத்தத்தைத் தெரிவித்து. இப்படிப்பட்ட அராஜகத்தை தோளுரித்துக் காட்ட தின்று வீசப்படும்

எலும்புத் துண்டுகளுக்கு
வளர்க்கப்படும்
இப்பெருநாய்கள்
பெரும்பாலும்
விரும்புவதேயில்லை
வேட்டைகளை

என்று வாழைப்பழத்தில் ஊசியேற்றும் லாவகத்துடன் கூறியிருப்பதற்கு வாழ்த்துகள் தோழா.

வல்லரசின் கனவில் ஒரே கட்சி , ஒரே ஆட்சி, ஒரே தேசம் , ஒரே மதம் என்ற முரண்பாட்டுக் கொள்கையில் அதிகாரத்தின் பீடத்தில் நின்றபடி தொப்புள் கொடி உறவுகளைத் தனிமைப்படுத்தத் துடிக்கும் நிலமற்ற தேசமற்ற இவ்வல்லூறுகள் தயாரிக்கும் ஒவ்வொரு ஆணியும் நம் சவப்பெட்டிக்குப் பொருந்தி வருவதைத் தெளிந்து உரைக்கிறார்.

வல்லரசின் மணம் கமழும்
பெரு நாடொன்றில்
அத்தனை ஆணிகளும்
எங்களின் சவப்பெட்டிகளுக்கு
பொருத்தமானதாகவே
தயாரிக்கப் படுகின்றன

இந்திய வல்லாதிக்கம் தயாரித்த ஆணிகள் இபிஎஸ் , ஓபிஎஸ், நீட், ஜிஎஸ்டி , குடியுரிமைத் திருத்தச் சட்டம் இன்னும் இன்னும்...

ஒவ்வொரு முறை அண்ணலின் சிலை உடைக்கப்படும் போதெல்லாம் வலியால் துடித்தவன் நான், வாதையால் அழுதும் இருக்கிறேன். இந்த வரிகளே ஒத்தடமிடுகின்றன.

நீ
சிலையுடைத்த பின்புதான்
ஞாபகத்திற்கு வருகின்றன
உன்
கடவுள் வாங்கிய
செருப்படிகள்.

சுட்டிக்காட்ட எத்தனையோ வரிகள் இருந்தாலும் , மற்றுமொரு ஆறுதல் வரிகளோடு

நாங்கள்
பகுத்தறிவை
கற்றுத் திரும்பிய போழ்தில்
உன்
கடவுள்கள்
நாடோடிகளாயினர்.

வாழ்த்துகள் தோழா,
யாழ் பதிப்பகம்
விலை 80/

- சிவ.விஜயபாரதி

Pin It