உலக நாடுகளில் வெற்றி அடைந்த புரட்சிகளை கொண்டாடுவ‌துதான் இயல்பான மனித உணர்வாக இருக்கிறது. அப்படித்தான் ஏராளமான சோவியத் இலக்கியங்கள், கோட்பாட்டு புத்தகங்கள் தமிழில் வெளியிடப்பட்ட பலருக்கு உத்வேகத்தை அளித்தன. இவை அவசியம் தான்! அதே நேரத்தில் தோல்வி அடைந்த புரட்சிகள், சமூக மாற்றத்திற்கான வீரமிக்கப் போராட்டங்கள் பல நாடுகளில் நடந்துள்ளன. அவை பற்றிய சிறந்த படைப்புகளும், கோட்பாட்டு அரசியல் நூல்களும் பல வந்துள்ளன. காரல் மார்க்ஸ் கூட அமெரிக்காவில் முன்னேறிய தொழிலாளி வர்க்கம் இருப்பதால் அங்குதான் முதலில் புரட்சி வரும் என்று முன்கணித்தார். ஆனால் அமெரிக்காவில் புரட்சி வெற்றி பெறவில்லை. அமெரிக்காவில் தொழிலாளர்கள், போராட்டங்கள் சில குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டாலும், அங்கு புரட்சிகர மாற்றம் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது, திசை மாற்றப்பட்டது, காயடிக்கப்பட்டது அமெரிக்க ஆளும் வர்க்கம் திறம்பட இதைச் செய்தது. இதைப் பற்றி பல படைப்புகள் வந்துள்ளன. அதில் முக்கியமானது ஜாக் லண்டனின் 'இரும்புக் குதிகால்' நாவல்!

irumpu kuthikaal'இரும்புக் குதிகால்' ஆசிரியர் ஜாக் லண்டன் மாமேதை லெனினுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.

ஜாக் லண்டன் அமெரிக்க சோஷலிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். அவர் ஒரு திருமணமாகாத தாயின் குழந்தை. சான் ஃபிரான்சிஸ்கோவின் குடிசைப் பகுதிகளில் வளர்ந்தவர். அவர் செய்தித் தாள்கள் விநியோகிக்கும் பையனாக பணியாற்றியவர். உணவுப் பொருட்களை தகர டப்பாக்களில் அடுக்கும் வேலை செய்தவர். ஒரு மாலுமியாக, ஒரு மீன்பிடி தொழிலாளியாக வேலை செய்தவர். ஒரு சணல் ஆலையிலும், சலவை தொழிலாளியாகவும் வேலை செய்தவர். கிழக்கு கடற்கரையில் ரயில்பாதை கம்பெனியின் நாடோடி தொழிலாளியாக வாழ்ந்தவர். நியூயார்க் தெருக்களில் ஒரு போலீஸ்காரரால் தடியடிபட்டவர். நாடோடியாக சுற்றி திரிந்ததற்காக நயாகாரா நீர்வீழ்ச்சியில் கைது செய்யப்பட்டவர். சிறையில் மக்கள், அடித்து சித்ரவதை செய்யப்படுவதைக் கண்டவர். சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் சிப்பிகளைக் கொள்ளையடிப்பவராக வேலை செய்தவர்.

ஃப்ளாபெர்ட, டால்ஸ்டாய், மெல்வில்லி ஆகியோர் படைப்புகளை வாசித்தார். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசித்து, 1896 ஆம் ஆண்டுகளில் சோஷலிசம் பற்றி போதிக்கத் துவங்கினார். பேரிங் கடல் வழியாக 2000 மைல் கப்பலில் திரும்பி வந்தார். பின்பு அவர் சாகச புத்தக எழுத்தாளராக உலகில் பிரபலமானார். 1976 முதல் 1916 வரை வாழ்ந்த ஜாக் லண்டன் 200க்கும் மேல் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள், கவிதைப் புத்தகங்களை எழுதினார். அவரின் சிறந்த நாவல்களில் ஒன்று இரும்புக் குதிகால் (THE IRON HEEL) ஆகும்.

கி.பி.2600 ஆம் ஆண்டு (மனித சமத்துவ ஆண்டு 409) யில் வெளியிட்டப்பட்ட சுயசரிதை நாவலாக இது தொடங்குகிறது. ஆனால் இந்த நாவல் ஜாக் லண்டனால் 1908ஆம் எழுதப்பட்டது. அமெரிக்க சமூகத்தின் கொந்தளிப்பான இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப 20 ஆண்டு வரலாற்றை, சோசலிசத்திற்கான போராட்டங்களை, அவை இரத்த சேற்றில் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றை விவரிக்கின்றது.

இந்த நாவல் சிறந்த கற்பனை( Utopia), மோசமான கற்பனை (Dytopia) என்று இரண்டு தளங்களாக எழுதப்பட்டது. இரண்டு தளங்களில் பயணப்பட்டாலும் அதில் மிகச் சிறந்த நிகழ்வுகளில் காட்சிகளாக நம்மை நிலை நிறுத்த முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறது.

மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையிலான உறவை, அதனால் மனித உறவுகளின் விளைவிக்கப்படும் போராட்ட வாழ்வை மிகச் சிறப்பாக நாவலின் ஆரம்ப 200 பக்கங்களில் விரிவாக அறிவியல் ரீதியிலான பகுத்தறிவு தர்க்கப்பூர்வமாக ஆணித்தரமாக விளக்குகிறது. படைப்பிலக்கியத்தில் இப்படியான மார்க்சின் மூலதனம் நூலின் சாரத்தை, மையத்தை தர்க்கப்பூர்வமாக விளக்கிய நாவல் இதுவாக இருக்க முடியும். அதை சுவையாக யாவருக்கும் புரியும்படி சொல்வதற்காகவே இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும்.

அடித்துச் சொல்ல வேண்டும் என்பார்களே அப்படியானதொரு தர்க்கப்பூர்வ மொழிநடை எடுத்துக்காட்டாக…

“அனைத்து அறிவியலும் மிக விரிவானது தத்துவவியல். அனைத்து அறிவியல்களுக்கும் அடிப்படையான, ஆராயும் முறையிலேயே அதுவும் இயங்குகிறது. தத்துவவியல் தனது ஊக்குவிப்பான விசாரணை முறையில் அனைத்து அறிவியல்களையும் ஒரு மாபெரும் இயலாக இணைக்கிறது. அதாவது அறிவியலின் எந்தவொரு கண்டுபிடிப்பும் பகுதிகளாக இருந்து ஒன்றிணைக்கப்பட்ட ‘அறிவின்’ வெளிப்பாடே எனலாம். ஆக எல்லா அறிவியல் துறைகளும் கண்டுபிடித்து வழங்கும் ‘அறிவை’ தத்துவவியல் ஒன்றிணைக்கின்றது. எனவே, தத்துவவியலை அறிவியலுக்கெல்லாம் அறிவியல் என்றும் அழைக்கலாம். இதுதான் தத்துவியலுக்கான வரையறை. எப்படி இருக்கிறது எனது வரையறை” என்றும்

“மூலதனத்தின் இலாபம், உழைப்பின் கூலியை பங்குப் பிரிவினையில் சுயந‌லமான முதலாளி தன்னால் எவ்வளவு சுருட்ட முடியுமோ, அவ்வளவை எடுத்துக் கொள்ளப் பார்க்கிறார். தொழிலாளியும் அதேபோல் தன்னால் முடிந்த அளவிற்கு எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார். பங்கிடப்பட வேண்டிய மொத்தம் ஒன்றாக இருக்கிறது. அதில் அவரவருக்கு எட்டியதைப் பிடுங்கிக் கொள்ள இருவரும் முயற்சிக்கும் பொழுதே நலன்களில் ‘முரண்’ தோன்றுகிறது. இது தீர்வு காணத்தக்கது அல்ல. தொழிலாளிகள், முதலாளிகள் என்று இரு பிரிவுகள் இருக்கும் வரை பங்கு பிரிவினையில் மோதிக்கொண்டே இருப்பார்கள்” என்றும் நாவலின் நாயகன் எர்னெஸ்ட் பொது அவையில் வாதிடும் பொழுது சபாஷ் போடத் தோன்றுகிறது

எர்னெஸ்ட், அவருடைய காதலி, இணையரான எவிஸ் எர்னெஸ்ட் நாவலின் முக்கிய கதை மாந்தர்கள். பாட்டாளி வர்க்கத் தலைமை என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக எர்னெஸ்ட் பண்புகள், வாழ்க்கை, போராட்டங்கள் இருப்பதை அவரது நடவடிக்கைகள் மூலமாக விவரிக்கப்படுகிறது. ஒவ்வொரு வர்க்க மாந்தர்களின் செயல்பாடுகளை சமூக நிகழ்வுகளுடன் இணைந்து முன்கூட்டியே ஆராய்ந்து வழிகாட்டும் தன்மை கதைப் போக்கில் காட்சிப்படுத்துவது கம்யுனிஸ்ட் கட்சி உறுப்பினர், தலைமை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

எவிஸ் எர்னெஸ்ட் நடுத்தர வர்க்க அறிவுஜீவியாக அறிமுகமாகிறார். "நீங்கள் அணிந்திருக்கும் ஆடையில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. நீங்கள் உண்பது இரத்தச் சோறு, பால்மறவாத குழந்தைகளின், வயதானவர்களின் இரத்தம் உங்கள் வீட்டுக் கூரைகளில் இருந்து சொட்டுச் சொட்டாக சொட்டுகிறது” என்ற எர்னெஸ்ட்டின் குற்றச்சாட்டிற்கு விடை தேடி புறப்படுகிறார். அறிவுரீதியான விவாதங்கள், கள ஆய்வுகள், சமூக யதார்த்தங்கள் மூலம் எப்படி படிப்படியாக சோசலிஸ்டாக உருமாறுகிறாள் என்பது விவரிக்கப்படுகிறது. இவரின் நாட்குறிப்புகளாகத்தான் நாவல் கட்டியமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நாவல் ஏன் அவசியம் வாசிக்கப்பட வேண்டுமெனில், இந்த நாவலில் விவரிக்கப்படும் புரட்சிகர தயாரிப்புக்கான பணிகளும், எதிர் புரட்சிகர ஒடுக்குமுறை தந்திரங்களும், ஒவ்வொரு வர்க்கமும் புரட்சியின் பொழுது மாற்றம் கொள்ளும் நிகழ்வுப் போக்குகளும் இன்று வரை நிதர்சனமாக நடைமுறை வாழ்வில் நடைபெறுகிறது, நடைபெறப் போகின்றது என்ற ஓங்கி அறையும் உண்மைதான்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விச ஆலைக்கு எதிரான மக்கள்திரள் போராட்டம் இரத்தக் களரியாக காவல்துறையினரால் (இரும்பு குதிகாலால்) எப்படி ஒடுக்கப்பட்டது என்பதை இந்த நாவலில் விவரிக்கப்படும் காட்சிகள் நினைவூட்டுவதாக உள்ளன. தொழிலாளர்களில் ஒரு பகுதிக்கு சலுகை அளித்து பெரும்பாலான தொழிலாளர்கள் கடுமையாக‌ சுரண்டப்படுகிறார்கள் என்று துல்லியமாக கூறுகிறது.

முதலாளித்துவ சனநாயகம் எப்படி சிலரது ஆட்சியாக சுருக்கப்பட்டு, சில கார்ப்பரேட் நலன்களுக்காக இருப்புக்குதிகால் ஏவப்படும் என்பதை விளக்குவதுதான் இந்த நாவலின் ஒற்றை வரி மையக் கதை சுருக்கம்! சோஷலிசக் கருத்தியலின் மனித சகோத‌ரத்துவத்தை விளக்கும் இந்த நாவல், அதன் கதாபாத்திரங்களின் விவாதப் போக்கில், அவர்களது சமூக அமைப்பை குற்றவாளியாக்குகின்றது

பாசிசம், நாசிசமும் இந்த நாவலுக்குப் பின் - 1930களுக்குப் பின்பு - வரலாற்றில் நிகழ்கிறது. அதை இந்த நாவல் முன்கூட்டியே சொல்வதுதான் ஆச்சரியம்!

ஜாக் லண்டன் இந்த நாவலில் பாராளுமன்றத்தில் ஆளும் வர்க்கத்தினர் தாங்களே குண்டு வைத்து விட்டு சோசலிஸ்டு கட்சியைத் தடை செய்வது, அதைக் காரணம் காட்டி சோசலிஸ்டுகளை இரும்புக்குதிகால் வேட்டையாடுவதாக விவரிக்கப்படுகிறது. 1940களில் ரீச்ஸ்டாக்கில் உள்ள ஜெர்மன் பாராளுமன்றத்திற்கு தீ வைத்ததாக பொய் வழக்கில் பல்கேரிய கம்யுனிஸ்ட் கட்சித் தலைவர் ஜார்ஜ் டிமிட்ரோவ் ஜெர்மன் பாசிஸ்டுகளால் கைது செய்யப்பட்டு நடந்த புகழ்பெற்ற வழக்கை நினைவூட்டுவதாக இந்த நாவல் நிகழ்வுகள் செல்கின்றன. தொடர்ந்து சிக்காகோ கம்யூனில் மக்கள்திரள் கொடூரப் படுகொலை விவரிப்புகள் இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் செய்த படுகொலைகளையும், 2009 ஆம் ஆண்டின் முள்ளிவாய்க்கால் பேரழிவு இனப்படுகொலையையும், அமெரிக்கா வல்லரசு தனது மேலாதிக்க நலன்களுக்காக பகுதி யுத்தங்களை நடத்தி பல கோடி மக்கள் வாழ்வை சிதைத்து பிணமாக்குவதை நினைவூட்டும் இரத்த சாட்சிகளாக நாவலின் கடைசி அத்தியாயங்கள் விரிவடைகின்றன.

முதலாளியம் ஏகாதிபத்தியமாக, நாடு கடந்த கார்ப்பரேட் முதலாளியமாகும் பொழுது சிறு-நடுத்தர வணிக குழுமங்களும், குட்டி முதலாளியமும் எப்படி சிதறடிக்கப்படும் என்பதை விவரிக்கும் பக்கங்கள் இன்று இந்தியாவில் கார்ப்பரேட் ஆதரவு மோடி ஆட்சியின் அவலங்களை இங்குள்ள தேசிய வணிக நிறுவனங்கள் எப்படி சீரழிக்கும் என்பதை இந்த நாவல் கோட்பாட்டு ரீதியில் நிகழ்வுகளாக விவரிக்கிறது.

ஓட்டுக் கட்சிகள், சமூக மாற்றத்திற்க்கான சிறிய இயக்கங்கள் எப்படி நசுக்கும் என்று அமெரிக்க சூழலில் நடந்தவைகளை வரிசைப்படுத்துகிறது

விவசாயத்தை சீரழித்து விவசாயிகளை கிராமங்களில் இருந்து ஏகபோக நிறுவனங்கள் என்ன தகிடுதத்த சூழ்ச்சிகளை செய்து அவர்களை ஓட்டாண்டியாக்கும் என்பதை விரிவாக விளக்குவது தமிழ்நாட்டில், இந்தியாவில் கண்கூடாக அன்றாட போராட்டங்களாக‌ உள்ளதை நாம் அறிவோம்.

தன்னை விமர்சனம் செய்யும் அறிவுஜீவியை முதலாளிய சிலராட்சி என்ன செய்யும் என்பதை இயற்பியல் பேராசிரியரான எவிஸ் எர்னெஸ்ட் தந்தையின் ஒட்டுமொத்த சொத்தையும் அபகரித்து, அவரைப் பணியில் இருந்து நீக்கி, தெருவில் விடச் செய்கிறது. இதை இன்றும் நாம் பார்க்க முடியும். கிறித்துவ‌ மதக்குருமாரான பிஷப் மூர்ஹெளஸ்ஸ்க்கு நேர்மையாக, உண்மையான சமூக யதார்த்தங்களை பிரச்சாரம் செய்ததற்காக பைத்தியக்கார பட்டம் சூட்டி மனநல மருத்துவமனையில் அடைத்து சித்ரவதை செய்கிறது

இதே போல் முக்கியமான பாத்திரங்களாக கர்னல் இங்க்ராம், விக்சன், ப்டென்பெக், ஜான் கன்னிங்ஹாம், ஹார்ட்மென், ஜான் கார்ச்சன், கார்த் ஒயிட், சிகப்புகன்னி ராயல்ஸ்டன்.. இவர்களின் பின்னணி, வர்க்கச் சூழல், அவர்களின் புரட்சிகர பணிகள், எதிர்புரட்சிகர செயல்கள் ஒரு துப்பறியும் நாவலுக்குரிய சுவராசியத்துடன் இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இப்படி புரட்சிகள் தோற்கடிக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் அவை எழுவது சமூக யதார்த்தம் என்பதை தர்க்கப்பூர்வமாக கூறி இறுதியில் மனித சமுத்துவம் மலரும், வர்க்கங்கள் அற்ற சமூகம் தவிர்க்க இயலாது என்பதை அதன் பண்புகள் எப்படி இருக்குமென்று மெல்லிய ஒளிக்கீற்றுகளாக சித்தரிக்கப்படுகின்றது.

இன்றைய தமிழகச் சூழலில் போராட்டங்களில் ஆட்சியாளர்களின், காவல்துறையினரின், கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சிகளை தமிழக மக்கள் புரிந்து கொள்ள மாற்று சக்திகள், நண்பர்கள் இந்த நாவலை அவசியம் படிக்க வேண்டும்.

'தாய்' நாவலுக்கு சமகாலத்து படைப்பு மட்டுமல்ல... 'தாய்' நாவலுக்கு இணையானதும் கூட... 100 ஆண்டுகளுக்குப் பின்பு இப்பொழுதுதான் முதன்முறையாக தமிழுக்கு வருகிறது.

இறுதியாக இந்த நாவலின் மொழிபெயர்ப்பை குறிப்பாக சுட்டிக் காட்டாமல் இந்த விமர்சனத்தை முடிக்க இயலாது. மொழிபெயர்ப்பு நாவல் என்பது தெரியாத அளவிற்கு தமிழிலேயே எழுதப்பட்ட புதினம் போன்று தோழர் விஜிதரன் மொழி ஆக்கம் செய்து படைத்துள்ளார். இலக்கியத்தை மொழியாக்கம் செய்வது மிகவும் சிரமம். அதை மிகவும் நேர்த்தியாக செய்துள்ள மொழிபெயர்ப்பாளரை அவசியம் பாராட்ட வேண்டும்.

“The function of man is to live, not to exist.
I shall not waste my days in trying to prolong them.
I shall use my time

மனிதனின் செயல் என்பது இருப்பதல்ல… வாழ்வதாகும்.
எனது வாழ்நாட்களை நீடிக்க முயன்று வீணாக்க மாட்டேன்
எனது நேரத்தை சரியாகப் பயன்படுத்துவேன்”

என்பார் ஜாக் லண்டன்.

மாற்று சக்திகள், நண்பர்கள் காலத்தை சரியாகப் பயன்படுத்தி வாழ்வதற்கு அவசியம் இரும்புக் குதிகால் நாவலை வாங்கிப் படிக்க வேண்டும்.

நூல் வெளியீடு:சிந்தன் புக்ஸ் . விலை ரூ300 பக்கங்கள் 384. புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு 9445 123 164

- கி.நடராசன்

Pin It