நிலப்பிரபுத்துக் கொடுமைகளுக்கெதிரான வீரஞ்செறிந்த தெலுங்கானா கிளர்ச்சி 1949 - 51-இல் குமுறி வெடித்தது.

Indian girl1948 செப்டம்பரில் நிஜாம் மன்னரின் நிலங்களில் உழுபடை நடத்திய குடியானவர்களிடம் கொழுந்து விட்டெரிந்த துயர நெருப்பு ஆயுதப் படை நடத்தும் வெகு ஜனப் புரட்சியாய் மூண்டெழுந்தது. நசுக்கப்பட்ட மக்களின் விடுதலை இயக்கமான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பெற்ற இந்த மகத்தான போராட்டம், 30 லட்சம் மக்களை விடுதலை செய்து 3000 கிராமங்களை, 16 ஆயிரம் சதுர மைல் பரப்பைச் சகலவிதமான ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை செய்து, மக்கள் உடமையாக்கியது. இந்தச் செம்பரப்பில் நிலங்களைச் சிறைப்படுத்தி மனித உழைப்பைத் தின்று கொண்டிருந்த பண்ணை எஜமானர்கள் விரட்டி அடிக்கப்பட்டு, நிலங்கள் குடியானவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டன. அவர்களின் ஊதியமும் வசதியும் உயர்த்தப்பட்டன.

செங்கொடியின் கீழ் புதிதாய் அரும்பிய அந்தப் பிரதேசம் - வட்டிக்கடை நடத்திய ஷைலக்குகளும், குடியானவர்களை வாட்டி வதைத்த கொடுமைகளும், அடிமைத்தனமும், அதிகார வெறித்தனமும், முறியடிக்கப்பட்டு குடியானவர்களின் புரட்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்பட்டது. இந்த ஆயுதப் புரட்சியின்போது, பேராற்றல் மிக்க வெகுஜனப்படையும் உருவானது. இந்தப் படையின் 10 ஆயிரம் பேர் கிராமங்களைப் பாதுகாத்தார்கள், 2 ஆயிரம் பேர் எதிரிகளை முறியடிக்கும் கொரிலாக்களாகயிருந்தனர்.

இந்த ஆயுதப் புரட்சி, ஏழைக் குடியானவர்களின் போராற்றலையும், மகத்தான தியாகங்களையும், அவர்களுடைய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குள்ள மாண்பையும் மகத்துவத்தையும் கோடிக் கணக்கான இந்தியமக்களின் இதயத்திலே எழுதிய வரலாராகும். 4 ஆயிரம் கம்யூனிஸ்டுகளும் மக்கள் படையினரும் இந்தப் புரட்சியில் உயிரிழந்தார்கள். 10 ஆயிரத்துக்கும் அதிகமான கம்யூனிஸ்டுகளும் குடியானவர்களும் சிறைகளில் கொடுமைப்படுத்தப்பட்டனர். 50 ஆயிரம் மக்கள், போலீசாராலும் ராணுவத்தாலும் துவம்சிக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கானவர்களின் சொந்த பந்தங்கள் சூறையாடப்பட்டன. பட்டப் பகலில் நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

தெலுங்கானா கிளர்ச்சியில், அதிகார வர்க்கத்தின், சுரண்டும் வர்க்கத்தின் சுயரூபம் நிர்வாணமாய்க் காட்சியளித்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தையும், போராட்ட உணர்ச்சியையும் அது பிரகடனப் படுத்தியது. சகலவிதமான விடுதலையையும் கோரிய அந்த முதல் வர்க்கப் புரட்சி, போலீஸ், ராணுவம், நிலப்பிரபுத் துவம், முதலாளித்துவம் ஆகிய அனைத்தையும் எதிர்த்துப் போராடி தடுத்து நிறுத்தியது. இலக்கியத்திலும் அதன் பாதிப்புக்கள் பதிந்தன. புரட்சிக் கவிஞர் ஹரீந்ரநாத் சட்டோபாத்யாயா எழுதிய இந்த வீரகாவியம், பாட்டாளி, வர்க்கத்தின் இதயத்தில், என்றென்றும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

நெஞ்சரிக்கும் இந்தத் துயரக் கதைகளை நீங்கள் கேட்க வேண்டும்.

அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட சோகத்தை நீங்கள் அறிய வேண்டும்.

தெலுங்கானா....
நீங்கள் கேட்டதுண்டா?
உலகம் கேட்டது; வியந்தது.
அது -
வரலாற்றின் மறு பெயர் !
வருங்காலத்தின் இருண்ட தாழ்வாரங்களில்
அது எதிரொலிக்கும்;
திரும்ப திரும்ப அது எதிரொலிக்கும்.

அச்சம் பேட் கிராமத்தை நீங்கள் அறிவீர்களா?
அந்த தேஷ்முக்குகளும் அவர்களது அடியாட்களும் என்னென்ன கொடுமைகளைச் செய்தார்கள் !
அவர்களின் ஆதிக்க நுகத்தடிகளும்,
அக்கிரமச் சாட்டைகளும்
இந்த ஏழை விவசாயிகளை
எப்படியெல்லாம் வதைத்தன !

துயரப்பட்ட இவர்களுக்கு-
சூரியன் சிவந்த காயமாக தெரிந்தது.

நிலவு, சீழ் ஒழுகும் புண்ணாகத் தெரிந்தது.
பழைய தத்துவங்கள் இவர்களை அடிமைத்தனத்தின்
புதை மணலில் மறைத்தன.

இப்பொழுது?...

தம்மை மனிதர்கள் என்று உணர்ந்து கொண்டார்கள்
அவர்களின் ஒரே ஆயுதம்,
அவர்களின் ஒரே பசிதான்.

ஜாதி இல்லை; நிற பேதமில்லை.
அவர்களின் ஒரே விருப்பம் - ``வெற்றி!’’

ஒரு முறை வென்றால்,
இவர்கள் நிரந்தரமாக வென்றவராகிறார்கள்.
இந்த மாவீரர்கள்,
மரணத்தைக் காட்டிலும் நிச்சயமானவர்கள்.
வாழ்வைக் காட்டிலும் அற்புதமானவர்கள்.

மரணம்.....

வாழ்வு.....

இவற்றின் சிருஷ்டிகர்த்தாக்கள் கூட இவர்களேதான்,
இவர்கள் விரல் பட்டதும்,
காலத்தின் இரத்தக் குமிழ்கள்
உடைப்பட்டுப் போகும்

இவர்களுக்கு இந்த நிலப்பிரபுக்கள்
எந்தக் கொடுமையைத்தான்
செய்யாமல் விட்டார்கள்?

குடிசைச் சுவர்கள், வீதி ஒரத்து மரங்கள்,
ரத்தம் கொதிக்க வைக்கும் கதைகளைச் சொல்லுகின்றன.

வழக்கு மன்றங்களில் பொய்கள் உண்மையாயின.

நீதிபதிகளா அவர்கள்?
நீதியின் பெயராலேயே நீதியைக் காட்டிக் கொடுப்பவர்களை
நீதிபதிகள் என்று எப்படி அழைப்பது?

மக்கள் சமுத்திரத்தில் இந்த விவசாயிகளே பேரலைகள்!
புதிது புதிதாக உதிக்கிற சூரியன்கள்,
புதிது புதிதாக எழுகிற சந்திரன்கள்,
இவற்றில் பரவசப்பட்டு இவர்கள் கைதட்டி
ஆரவாரிக்கிறார்கள்;

“உலகம் நமது; நாமே உலகம்’’

புரட்சி, எரிமலையைப் போன்றது.
திடீரென வெடிப்பதில்லை.
உறங்கிக் கொண்டே இருக்கிறது.
ஒரு நாள்.....
ஒரு நாள்....
வரலாற்று எரிமலையின், பசியில்
தகித்த வெற்று வயிறு குமுறுகிறது.
இயற்கையின் திறம் மிக்க கரங்கள்,
நேர் கோடுகளையும், வட்டங்களையும்,
சதுரங்களையும் போட்டுச் செல்கின்றன.

இந்த `ஜியாமெட்ரி’ கணித யாத்திரை
யுக யுகங்களாய் நடைபெறுகிறது.

இயற்கையின் சட்டங்களை முறிப்பவர்கள்.
அதே முறிபட்ட சட்டங்களாலேயே
முறிக்கப் படுவார்கள்.
மனிதர்களே முக்கிய மானவர்கள்!
அதுவும் -
உழைக்கின்ற, கனவு காண்கிற
மனிதர்கள் மிக மிக முக்கியமானவர்கள்!

இந்த மண்ணின் மெய்யான சக்ராதிபதிகள் அவர்களே!

அச்சம்போட் கிராமத்தின் லக்ஷ்மம்மா இவள்தான்.
மற்றவர்களைப் போல் இவள் சாதாரணப் பெண் அல்ல.
துயருற்ற விவசாய வர்க்கத்தின் முழு வரலாறு இவள்.
அதன் கனவுகள், நம்பிக்கைகள் இவற்றின் உருவம்!

இவள் உடலில் உள்ள சுருக்கங்கள்,
சூறைக் காற்றால் உருவாக்கப்பட்ட சமுத்திர அலைகளே!
அவை - சக்தியின் சின்னம்!
பலவீனத்தின் குறியீடல்ல.

இவளின் குடிசையில்...
மாலை மங்கி, இருள் திரை விரித்ததும்,
ஆறு இளம் கம்யூனிஸ்டுகள்
ஒவ்வொரு நாளும் வருவார்கள்.
புகை கக்கும் பழைய காடா விளக்கின்
அருகில் இருந்து கொண்டு
அவர்கள் ஒவ்வொருவரும்
ஒரு கதையைச் சொன்னார்கள்.
வீரமும், வெறுப்பும் கலந்த அந்தக் கதைகள்

(தொடரும்)

-தமிழில் என்.ஆர். தாஸன்

(தமிழ்ச் சான்றோர் பேரவை செய்திமடல் - ஆகஸ்ட் இதழிலிருந்து)

Pin It