ஸ்பெயின் தேசத்தில் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் சோம்பேரி மடங்களுக்கும் ஏமாற்றுக் கூட்டத்திற்கும் யோக்கியக் கூட்டத்திற்கும் சரியான ஆபத்துகள் வந்திருக்கின்றதை பத்திரிக்கை சேதிகளில் காணலாம். அதாவது ஸ்பெயின் தலைநகராகிய மேட்ரிட் நகரில் இருந்து கிருஸ்த்துவ கோயில்கள் என்னும் சோம்பேரி மடங்கள் இடிக்கப்பட்டும் கன்யாமாடங்கள் என்னும் ஏமாற்றுக் கூட்டத்தாரின் மடங்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டும் பணக்காரர்கள் என்னும் அயோக்கியக் கூட்டம் உயிரோடு ஒரு கட்டிடத்திற்குள் அடைந்து நெருப்பு வைத்துக் கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டும் வருவதாக அறிவிக்கப்படுகின்றது.periyar annaaகோயில்களில் கடவுள் இருப்பதாகவோ அல்லது அவைகள் கடவுள் பிரார்த்தனைக்காக ஏற்பட்டவைகளாகவோ இருக்குமானால் – கன்னிகாஸ்திரீகள் கடவுள் சேவை செய்பவர்களாகவோ அல்லது கடவுளுக்கு ஆக ஒழுக்கமுள்ளவர்களாக நடப்பவர்களாகவோ இருப்பார்களானால் - பணக்காரர்கள் தங்கள் முன் ஜன்மத்தில் செய்த நற்கருமங்களால் செல்வம் பெற்றவர்களாகவோ அல்லது கடவுளின் திருச்சித்தால் செல்வம் அடைந்தவர்களாகவோ இருப்பார்களேயானால் இவைகள் முறையே இடிபடவும் நெருப்பு வைத்து எரிக்கவும், உயிருடன் அடைந்து கொள்ளி வைத்துக் கொளுத்தவும் ஆன நிலைமை ஏன் ஏற்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

உண்மையிலேயே கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கூறுகின்றவர்கள் இச்செய்கையை கண்டபின் கோயில்கள் கன்யாமாடங்கள் பணக்காரர்கள் ஆகியவை உலகில் இருப்பதற்கு கடவுளுக்கு இஷ்டமில்லை. ஆதலால் அவைகள் கொளுத்தப்படுகின்றன என்று எண்ண வேண்டும். அல்லது புரட்சிகாரர்கள் கடவுளைவிட சக்தியுடையவர்கள் அதனால்தான் இவைகளை கொளுத்த நினைத்தார்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் தொட்டதற்கெல்லாம் இது வேத விரோதம், இந்து மத விரோதம் என்கின்ற பூச்சாண்டிகள் இனி பலிக்காது.

('சித்திரபுத்திரன்', புரட்சி - செய்தி விளக்கக் குறிப்பு - 17.12.1933)

Pin It