"நான் இந்தியாவின் சர்வாதிகாரியாக இருந்தால், பகவத்கீதையையும், மகாபாரதத்தையும் முதலாம் வகுப்பு பாடத்தில் சேர்த்து விடுவேன்" என்று கடந்த 2015 ஜனவரி மாதம், குஜராத்தில் நடந்த உலகளாவிய கருத்தரங்கில் பேசினார் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அணில் ஆர். தவே. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையில் இயங்கிகொண்டிருக்கும் நாட்டில் அது சாத்தியமல்ல என்று தைரியமாகப் பேசிய ஒரே நீதிபதி ஹரி பரந்தாமன். உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல என்பது நீதித்துறையோடு பரிச்சயம் உள்ளவர்களுக்கு எளிதில் விளங்கும்.

hariparanthaman bookநீதிபதி ஹரி பரந்தாமன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பு வகித்து கடந்த மார்ச் மாதத்தில் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வு பெற்ற பிறகு, சமூக நீதி சார்ந்த அவரது பல்வேறு தீர்ப்புகளில், எட்டு தீர்ப்புகளை மட்டும் தொகுத்து, "People's Judge D.Hariparanthaman's Judgments on Social Justice" என்ற புத்தகத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டுள்ளது மதுரையிலுள்ள சோகோ அறக்கட்டளை.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வைத்து வழங்கியவைகளில் ஐந்தும், மதுரை கிளையில் வைத்து வழங்கியவைகளில் மூன்று தீர்ப்புகளும், அவர் நீதிபதியாக பொறுப்பேற்கும் போதும், பணி ஓய்வின்போதும் ஆற்றிய உரைகளும் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. எட்டு தீர்ப்புகளும் எட்டு விதமானவை. அவைகளுக்குள் இருக்கும் ஒரே தொடர்பு அவைகள் அனைத்தும் சமூக நீதி அடிப்படையில் வழங்கப்பட்டவை என்பது மட்டுமே.

பிற்படுத்தப்பட்ட நாடார் சாதியைச் சேர்ந்த விசாலாட்சி இஸ்லாம் மதத்திற்கு மாறுகிறார். தனது பெயரை ஆரிஃபா என மாற்றிக்கொள்கிறார். அதன்பிறகு அரசு பணிக்கு விண்ணப்பிக்கிறார். மதம் மாறிவிட்டதால் அவர் முற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக கருதப்படுவார் என்று அதிகாரிகள் கூறியதால், அவருக்கு பணியில் சேர வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அது தொடர்பான வழக்கில், பிற்படுத்தப்பட்ட ஒருவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகும் அவர் பிற்படுத்தப்பட்டவராகவே தொடர்வார் என்று தீர்ப்பளிக்கிறார்.

மாட்டுக்கறிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடை விதிக்கப்பட்டிருந்த நேரம். டாக்டர் அம்பேத்கர் அவர்களது 125வது பிறந்த நாளை மையப்படுத்தி, சென்னை பெரியார் திடலில், 2015 ஏப்ரல் மாதம் 14ம் நாளில், திராவிடர் கழகம், "தானாக மனமுவந்து தாலியை அகற்றும் விழா" நடத்தத் திட்டமிட்டு, அதனைத்தொடர்ந்து மாட்டுக்கறி விருந்தும் ஏற்பாடு செய்தது. அதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இவ்வழக்கில், முன்னர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை சுட்டிக் காட்டி, தனியார் இடத்தில் நடத்தப்படும் நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுக்க முடியாது என்று தீர்ப்பளிக்கிறார்.

ஓய்வூதியம் வழங்கிட, 01.04.2003க்கு முன்பு தினக்கூலியாக பணியாற்றிய காலத்தில் பாதியை, பணிநிரந்தரம் செய்யப்பட்ட காலத்துடன் சேர்த்து கணக்கிட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 42 விழுக்காடு மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளதால் பட்டியலின மாணவர் மாறன் என்பவருக்கு சென்னை, திருவிதாங்கூர் வங்கியால் கல்விக் கடன் உதவித்தொகை மறுக்கப்படுகிறது. குறைந்தபட்ச மதிப்பெண் குறித்து எங்கும் சொல்லப்படவில்லை. ஆகவே, தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது என்று கூறி அவருக்கு கல்விக் கடன் உதவி வழங்கிட உத்தரவிடுகிறார்.

க்ளோரிபாய் என்பவர், சாலை விபத்தில் இறந்து போன தனது திருமணமான மகளை இழந்தமைக்காக இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கில், திருமணம் செய்து கொடுத்த பிறகும் ஒரு பெண்ணின் பெற்றோர் அவரது இறப்புக்காக இழப்பீடு பெற முடியும் என்று உத்தரவு இட்டுள்ளார்.

திருமணமான கோவிந்தம்மாள் தனது தந்தையின் மறைவிற்கு பிறகு, கருணை அடிப்படையில் பணி கோருகிறார். திருமணம் ஆகிவிட்டது என்று கூறி அவருக்கு பணி மறுக்கப்படுகிறது. திருமணமான பெண்ணும் கருணை அடிப்படையில் பணி கோரலாம் என்றும் அதற்குத் தடையாக இருந்த அரசாணையில் மாற்றம் கொண்டுவரவும் தீர்ப்பிட்டுள்ளார்.

தான் பணிபுரியும் பாரத ஸ்டேட் வங்கியில் டாக்டர் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதால் பணிநீக்கம் செய்யப்படுகிறார் கடைநிலை ஊழியரான கௌரிசங்கர். அவரது பணிநீக்க உத்தரவினை ரத்து செய்து இரு நீதிபதிகள் அடங்கிய ஆயத்தில் உத்தரவிடுகிறார்.

பட்டியலினத்தைச் சேர்ந்த சுதா என்பவது சகோதரர் முத்துகுமார் பட்டியலினம் சாராத நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அது தொடர்பான வழக்கில், பட்டியலின மக்களை, பட்டியலினம் சாராதவர்கள் கொலை செய்யும் பட்சத்தில், சட்டத்தில் வரையறுத்துள்ள படி பாதிக்கப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என தீர்ப்பிட்டுள்ளார்.

இதுபோன்று அரசியலமைப்பு சாசனத்தின் படியான சிறுபான்மையினர் உரிமை, பெண்ணுரிமை, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமையை தொடர்ந்து உறுதிபடுத்தியுள்ளார். அண்ணல் அம்பேத்கர் அவர்களை எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனது தீர்ப்புகளில் சுட்டிக்காட்டி, அவரது கருத்துகளை பரவலாக்க வழிவகுத்துள்ளார்..

பொதுவாக அவ்வப்போது வெளிவரும் சிறுகதை, கவிதை, கட்டுரை, பின்னர் தொகுக்கப்பட்டு ஒரு தொகுப்பாக வெளிவரும் போது அது புதிய உணர்வுகளை தரும். அப்போது அதன் மொத்த பரிணாமத்தையும் ஒருசேர உணர முடியும். நான் வழக்குரைஞராக இருப்பதால் இதில் இடம்பெற்றுள்ள தீர்ப்புகளை முன்னரே அறிந்திருந்த போதிலும், இப்படி மொத்தமாக ஒரே தொகுப்பாக பார்க்கும் போது இந்த தீர்ப்புகளின் வீச்சு அதிகமாக இருப்பதாக உணர்கிறேன்.

விதிவிலக்கான சூழல்கள் தவிர்த்து, பொதுவாக மனுதாரர்களுக்காக வழக்குரைஞர்கள் தாக்கல் செய்து தன் முன்பாக வரும் வழக்குகளை மட்டுமே ஒரு நீதிபதி விசாரித்து அது குறித்து தீர்ப்பு கூற முடியும். வழக்கறிஞர்களுக்கு, தாங்கள் முன்னெடுக்கும் வழக்குகளைத் தேர்வு செய்வதில் உள்ள வாய்ப்பு, அவ்வளவாக நீதிபதிகளுக்கு இருப்பதில்லை. இருப்பினும், தன் முன் வந்த வழக்கின் பிரமாண பத்திரத்திற்குள் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல், தன்னளவில் விரிவாக விவரித்து தீர்ப்பிட்டுள்ளார். அவைகள் அனைத்தும் சமூக நீதி பார்வையில் அமைந்துள்ளது என்பது தான் இங்கு கவனிக்கத்தக்கது. அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பான கருத்துகளை வெளிப்படுத்திய அணில் ஆர் தவே மற்றும் இட ஒதுக்கீட்டை ஊழலுக்கு இணையாக ஒப்பிட்ட நீதிபதிகள் இருக்கும் இதே நாட்டில் தான், இவரால் இப்படிப்பட்ட தீர்ப்புகளை தைரியமாக தர முடிகிறது.

மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து, ஆசிரியர் ஆவதை விருப்பமாகக் கொண்டு பின்பு நண்பர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞராகி, அதன் பின்பு உயர் நீதிமன்ற நீதிபதியானதை தனது பதவி ஏற்ப்பு நிகழ்வின்போது பெருமையுடன் நினைவு கூர்ந்துள்ளார். பணி ஓய்வு பெறும்போது, அநியாயமாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாடு வழக்கறிஞர்களுக்காக குரல் கொடுத்துள்ளார். இப்படியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு ஓங்கி ஒலித்துள்ளது இவரது குரல்.

தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்திற்கு வேட்டி கட்டிச் சென்று, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேட்டி கட்டி செல்லலாம் என சட்டம் வருவதற்குக் காரணமாக இருந்தவர். உயர் நீதித்துறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவேண்டும் என வெளிப்படையாக பல்வேறு கருத்தரங்குகளில், நீதிபதியாக பொறுப்பில் இருக்கும் பொழுதே, பேசி வந்தவர். காந்தி பிறந்த நாளில், கோட்சேவிற்கு சிலை அமைக்க வேண்டுமென்ற இந்து மகா சபையின் கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர். மதுவிலக்கிற்கு ஆதரவாகவும், மாட்டுகறி உண்பதற்கான தடைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர். இப்படியாக, தீர்ப்புகளில் மட்டுமல்லாது தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது வாழ்விலும் வாழ்ந்து காட்டுகிறார்.

இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தீர்ப்பிற்கும் முன்பாக, தமிழில் சிறிய முன்னுரை வழங்கியதை, முழுமையாக்கி முழுவதுமாகவோ அல்லது தீர்ப்புகளின் சாராம்சத்தை மட்டுமாகவோ தொகுத்து தமிழில் வெளியிட்டிருந்தால் ஆங்கில மொழியில் புலமை இல்லாத சாமானியர்களையும் இந்த தீர்ப்புகள் சென்றடைய வாய்ப்பு கிட்டியிருக்கும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It