மேல்நிலைப் படிப்பு முடிந்ததும், திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள தூய சவேரியார் கல்லூரியில் இளங்கலை பொருளாதார பிரிவில் மூன்று மாதங்கள் படித்தேன். அப்போது தேர்வு மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்காகவும் அக்கல்லூரியில் உள்ள கௌசானல் அரங்கிற்கு சென்றிருக்கிறேன்.

rakesh sandhiya bookபின்னர் சட்டப்படிப்பிற்காக மதுரை வர நேர்ந்தது. அப்போது, மக்கள் கண்காணிப்பகத்தின் வாயிலாக அறிமுகமான அண்ணன் ஆண்ட்ரூஸ் அவர்களின் பரிந்துரையின் பேரில், பாளையங்கோட்டையில் இருந்த அருட்சகோதரர் அகஸ்டின் அவர்கள் 1999,2000,2001 ஆகிய மூன்று ஆண்டுகளும் எனக்கு அருட்தந்தை கௌசானல் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கினார். அப்போது மாணவனாக இருந்த எனக்கும், தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாகயிருந்த எனது குடும்பத்திற்கும் அது பெரிய உதவியாக இருந்தது.

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் கௌசானல்புரம் என்ற ஊரினை அடிக்கடி கடந்து போயிருக்கிறேன். அப்போதெல்லாம் எனக்கு அருட்தந்தை கௌசானல் குறித்து எதுவும் தெரியாது.

இரண்டு மாதங்களுக்கு முன்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞரும், சகோதரருமான வான்முகில் ம.ஆ.பிரிட்டோ அவர்கள், ரா.பி. சகேஷ் சந்தியா அவர்கள் எழுதிய, "சமூக நீதிப்போராளி அதிரியான் கௌசானல்'' என்ற நூலைக் கொடுத்தார். அந்த புத்தகத்தின் வாயிலாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அதிரியான் கௌசானல் (1850-1930) குறித்து அறிந்து கொள்ள முடிந்தது.

இந்தியாவிற்கு 1888ல் வந்த அவர், 1890 தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் வாழ்ந்துள்ளார். அவர் இதர பல்வேறு அருட்தந்தைகளைப் போல அல்லாமல், ஆலயத்துக்குள் நிலவிய சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும், அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவாகவே கடைசி வரையிலும் செயல்பட்டுள்ளார்.

கணியன் பழங்குடியினர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்துள்ளார்.

அரசு, காவல்துறை, இரயில்வே துறை உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நான் உள்பட பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணவர்கள் மிகச் சிறந்த கல்வியைப் பெற்ற  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரிக்கான சுற்றுச் சுவரை ஒரே இரவில் எழுப்பி அக்கல்லூரி அமைந்திட காரணமாகயிருந்துள்ளார்.

சமய சுதந்திரத்திற்கு எதிராக செயல்பட்ட ஆங்கிலேய அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளர்.

Historical Notes on Tirunelveli District என்ற 487 பக்க கையெழுத்துப் பிரதியை தயாரித்துள்ளார். அதில் மீனவர் மற்றும் மறவர் சமூகம் குறித்து அநேக தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

வழக்கறிஞராக இல்லாத போதிலும், இரண்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்திட காரணமாக இருந்துள்ளார்.

களிம்பு தயாரித்து இலவசமாக வழங்கி எளிய மக்களை நோய்களிலிருந்து மீட்டுள்ளார்.

இப்படியாக நுற்றாண்டைக் கடந்தும் தனது ஏராளமான பணிகளின் வாயிலாக வாழ்ந்து கொண்டிருக்கும் கௌசானல் குறித்து, அநேக தரவுகளைத் திரட்டி சிறப்பான புத்தகமாக உருவாக்கியுள்ள அருட்திரு. ரா.பி. சகேஷ் சந்தியா நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவர்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It