எழுத்தாளர் கோமல் அன்பரசன் எழுதி விகடன் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் 'கொலை கொலையாம்... காரணமாம்...' எனும் நூலுக்கு எழுத்தாளர் வா.மண்கண்டன் எழுதிய விமர்சனம் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டை உலுக்கிய 25 வழக்குகளை அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறார். சரித்திரத்தின் ரத்தம் படிந்த பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது மனதளவில் பாதிப்பும் ஒரு சில நாட்கள் உறக்கமும் பறிபோகிறது. தென் மாவட்டங்களில் அரசு 144 தடை விதிக்கும் இமானுவேல் சேகரன் கொலை வழக்கு, திமுகவின் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கபட்டபோது நடந்த தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு, திருவான்மியூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனராக இருந்து கள்ளச்சாராயம் கடத்தி, விற்று, விபச்சாரம் நடத்தி அதன் மூலம் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஐந்து பேரை கொடூரமாக கொலை செய்த ஆட்டோ சங்கர் வழக்கு,

Kolai kolaiyam Karanamamஒரே ஒரு மேடைப் பேச்சுக்காக நாற்பது ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா அவர்களின் தூத்துக்குடி சதி வழக்கு. ஆயிரக்கணக்கானோர் வழியனுப்ப சிறைக்குப்போன வ.உ.சி நன்னடத்தையால் விடுதலையானபோது ஒரே ஒருவர் மட்டுமே வரவேற்கப் போனார்; அவர்தான் அவருடைய நண்பர் சுப்ரமணிய சிவா என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆரை கொலை செய்ய முயன்ற வழக்கு, வைஜெயந்திமாலா கார்டியன் வழக்கு என சினிமா தொடர்பான பிரபலங்கள் சிக்கிக் கொண்ட வழக்குகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

18 பெண்கள் வாச்சாத்தியில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட வழக்கைப் பற்றி படிக்கும் போது அதிர்ச்சியே மிஞ்சுகிறது.

எரியும் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்து விழுகிறது ஒரு குழந்தை! தான் செத்தாலும் பரவாயில்லை தனது பிள்ளையாவது பிழைக்கட்டும் என்று வெளியே தூக்கி எறிந்திருக்கிறாள் ஒரு தாய்! ஆனால் இந்த மிருகங்களோ அந்தக் குழந்தையையும் வெட்டி மீண்டும் எரியும் நெருப்பில் வீசுகிறார்கள்! தலித் விவசாயத் தொழிலார்கள் அரை படி நெல் கூலி உயர்வு கேட்டதற்காக 42 பேரை குடிசைக்குள் வைத்து கொளுத்திய தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள வெண்மணி கொலை வழக்கு.

வேதனையும் வியப்பும் என்னவென்றால் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள பூண்டி என்ற ஊரில் நடந்த தனம் என்பவரின் கொலையை யார் செய்தார்கள் என்ற கேள்விக்கு கடைசிவரை விடையே இல்லாமல் முடிந்து போகிறது பூண்டி கொலை வழக்கு. இப்படி இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கும் பல வழக்குகளில் குற்றவாளி யார் என்று கடைசிவரை தெரியவில்லை.

இந்திய சுதந்திர நாட்டின் நீதித்துறை புடம் போட்ட தங்கம் இல்லை என்றாலும் கொலை செய்தவர் யார் என்றே தெரியாமல் போவது சில சமயங்களில் கொலைகாரர்களை விடக் கொடியவராக காவல் துறையும் அரசும் செயல்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. மிக அருமையான நடை, குற்றவாளிகள் சாட்சிகள் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் என தொகுத்திருப்பது மிக மிக அருமை. சிறிய விசயங்களையும் தெளிவாக ஆராய்ந்து எழுதியமைக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள். கண்டிப்பாக ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். இந்த புத்தகத்தின் இரண்டாம் பாகம் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி இருக்கிறது.

- தங்க.சத்தியமுர்த்தி

Pin It