திராட்சைக் கண் கிழவி செத்து விட்டது. ஊரே கூடி நின்றிருந்தது.

எதிர் வீட்டு சரவணன் வீட்டில் நண்பர்கள் சூழ... பவளத்தை காதலோடு ரகசிய பார்வை பார்த்தபடியே நின்றான் தங்கா.

விட்டது தொல்லை இல்லையா - முனகினான்.

சாவு வீட்டுக்கு வந்தவர்களுக்கு பக்கத்துக்கு வீடுகளில் இருந்து போவது போல சரவணன் வீட்டில் இருந்தும் தேநீர் சப்ளை போய் கொண்டிருந்தது.

ஊர் மக்கள் வருவதும் போவதுமாக இருக்க... கிழவி வீட்டு வாசலில் கூட்டம்.

"யார் மீது ஆசை கூடிப்போக..... தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான.... சேதி அறிவாயோ
யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ..."

கண்களில் தீவிரம் காதலால் ஜொலிக்கிறது. எதிரே இருக்கும் சாவு வீட்டில் நடக்க வேண்டியது அது பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது. பாடலை சின்ன ஸ்பீக்கரில் சரவணன் கசிய விட்டுக் கொண்டே தேநீர் தயாரிப்பில் இருந்தான்.

காதலர்களுக்கும்... நண்பர்களுக்கும் சரவணன் வீடு சரணாலயம். கதவோரத்தில் சாவு வீட்டை பார்த்தபடியும் நின்று ஆனால் கவனம் முழுக்க பவளம் மீது படர விட்டுக்கொண்டிருந்தான் தங்கா. பாட்டு தங்களையே இசைத்துக் கொண்டிருப்பதாக இருவருக்கும் நினைப்பு. புன்னகை பூக்கள் இருவர் முகத்திலும். காதலின் ரகசியம் அத்தனை சுவாரஸ்யம்.

"குறையிது குறையிது இடைவெளி குறையிது
நிறையிது நிறையிது சுகம்
இணையிது இணையிது இரு உடல் இணையிது
கவிதைகள் எழுதுது நகம்"

வாயை பாட்டுக்கு தகுந்தாற் போல அசைத்தான். அவள் கண்களை சிமிட்டி சிமிட்டி பின்னணி இசையால் விசிறினாள்.

"நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..."

இப்போது அவள் அருகே காஃபி ஊற்றுவது போல சென்று விட்டான். அவள் டேய் எல்லாரும் இருக்காங்க என நாக்கு கடித்து பொய் தீபம் ஏற்றினாள்.

அவன் கையை காஃபிக்கு நீட்ட அதில் பதிந்திருந்த பற்கள் அவள் கண்களில் சிமிட்ட.... ஐயோ என்ன இது என்றாள். ஜாடைக்கு மொழியின் அளாவல் போதாது.

அய்யடா... ஒன்னும் தெரியாத பாப்பா நைட் 11.30 க்கு சுட்டாளாம் ஆப்பம்.

கண்களில் குறும்பு. அவள் கை பற்றிய உரிமை. நண்பர்கள் காணாத நொடியில் இழுத்து அவள் கன்னத்தில் இச்சென்றான். சாவு வீட்டு வாசலில் அமர்ந்திருப்பவர்களுக்கு தேநீர் தந்து விட்டு உள்ளே வந்த சரவணன் எதையும் பாக்கல என்று கேலி செய்தான். வெட்க சிரிப்பு அவனுக்கும்.

*
அந்தக் கண்களில் சூனியம் திராட்சை நிறத்தில் ஒளிர்ந்தது. சிமிட்டாத கண்களில் உருளாத விழிகள்.... பகலிலேயே பதட்டப்படுத்தும் என்றால் இரவில் புரட்டி எடுக்கும்.

'wait' என்று வந்த குறுஞ்செய்தியோடு கடைசி வீட்டு கிச்சன் பக்கம் இருக்கும் தண்ணீர் டிரம்-க்கு பின் ஒளிந்திருந்தான் தங்கா. பவளேஸ்வரி தன் வீட்டு கிச்சன் பக்கம் பாத்திரம் கழுவுவது போல நோட்டம் விட்டாள். திராட்சைக் கண் கிழவி பெரும் பற்களில் பேச்சு எதிரொலித்தது.

"என்ன பவளா... இன்னும் தூங்கலயா..." என்றபடியே அந்த வீட்டை ஊடுருவி பார்த்தாள்.

"என்ன உங்கப்பனுக்கு நைட் சிப்டா.... உங்க அம்மா ஊருக்கு போயிருக்காப்ல இருக்கு.. " என்றவள் பவளேஸ்வரி வீட்டு தண்ணீர் டிரம் பக்கம் எட்டி பார்த்தாள். லைன் வீட்டில் சர்ரென பாய்ந்த அவள் கண்கள் இருக்கும் சந்து பொந்துகளையெல்லாம் அலசின. ஒவ்வொரு ஜன்னலிலும் அவளின் பெரும் பற்கள் பளபளவென இரவைக் கிழித்தன.

"சூனியக்கார கிழவி... எப்பிடி நோட்டம் விடுது பாரு... இதே வேலையா போச்சு. எப்பிடி தான் மூக்கு வேக்குமோ. நான் என்ன பண்ணினா இந்த கிழடுக்கு என்ன.. பொறாமை கிறுக்கி.." விலக்கிய குழம்பு சட்டியை தூக்கியபடியே கதவை சாத்துகிறவள் போல பாவனை செய்தபடி..... யாரு என்று குரல் கொடுத்து பெரிய வீட்டின் முன் கதவுக்கு போவது போல காட்டிக் கொண்டாள்.

திராட்சைக் கண் கிழவி குடுகுடுவென ஓடி 7 வீடுகள் கொண்ட லைன் வீட்டின் முன் பக்கம் ஓடி வந்து அதற்கு எதிரே இருக்கும் தோட்டத்துள் பதுங்கிக் கொண்டாள். முன் கதவு பக்கம் யார் வருகிறார் என்று தெரியாவிட்டால் அவளுக்கு தலையே வெடித்து விடும். கியூரியாசிட்டி மாதிரி இது குரூரஸிட்டி. நெற்றியில் மூச்சு வாங்க சுருங்கிய முகத்தில் பூனைக்கு வெறி பிடித்த சிமிட்டா கண்களில் வெறித்தாள். பெரும் பதற்றம் அது. இரவின் இறுக்கம் அங்கே குவிந்து கொண்டிருந்தது.

பழத்தை அப்படி தூக்கி வீசி குரங்கை திசை திருப்புவது போல... அவள் அப்படி ஓடிய நொடிகளில் குடுகுடுவுக்கும் வேகமாய் ஓடி வந்த தங்கா... நொடிக்கும் குறைவான நேரத்தில் கிச்சனுக்குள் புகுந்து கொள்ள.... கதவு அடைக்கப்பட்டது. அலைந்து கொண்டிருந்த இரவுக் காற்று கப்சிப்.

தாவி அணைத்த நொடியே முத்த மழை தான். கன்னம் கடித்து கழுத்து கடித்து நெற்றி முட்டி இதழ் சுவைத்து கைகள் கோர்த்து ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கம் வரை சுவர் எல்லாம் சித்திரம் ஆனார்கள். இரவு 11.30 க்கு கன்னம் ஈசிக்கொண்டது போல. சிதற சிதற சேரும் சிறகுகளில் உடைகள் எங்கே. கிழித்து எறியப்படும் வேகத்தில் அவிழ்ப்பு சிவந்து விட்டது. கண்களில் ஏறிய வெறி காடுகளின் ஒளியாக பாய்ந்தன. கட்டில் சரிப்பட்டு வராது. தரையோ சில்லென சில்லென ஜீவன் வாங்கியது. புரளும் பாக்கியம் கொண்ட புணர்தலுக்கு புது புது விதிகள் சேர்கின்றன. அர்த்தமற்ற ஒலிகளின் வழியே ஆதி கொண்ட தவம் கலைக்கும் உடல்கள்.

அந்தக் கிழவிக்கு என்ன வேணுமா. இதே வேலையா பண்ணுது. அப்பிடி என்ன தெரிஞ்சு என்ன பண்ண போகுதாம்...

இரு இரு என்று எழுந்தவள் மெல்ல ஒரு நிர்வாண பூனையாக ஊர்ந்து சென்றாள். பின்னாலயே ஒரு நிர்வாண யானையாய் நகர்ந்தவன்.... அவள் கழுத்தோரம் சரிந்து நின்றவாறே அவள் பார்க்கும் ஜன்னல் வழியே அவனும் பார்த்தான்.

கண்கள் திரள அந்த ஜன்னலில் கைகளைக் குவித்து அந்த திராட்சைக் கண்களும் உள்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தன.

திக்கென்று தூக்கி போட... ஐயோ என்று குரல் வராத நடுக்கத்தில் எகிறி பின் பக்கம் வந்தார்கள். இரவைத் தூண்டிலிடும் வானம்... கிழவி தலையருகே தொங்குவது போல தெரிந்தது. அலை அலையாய் சுழலும் காற்றின் சப்தம் தூரத்தில் எங்கோ கேட்டது. நினைப்பும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று இணைய ஒருவரையொருவர் பார்த்தபடியே திகைத்து நின்றார்கள்.

நல்லவேளை இந்த கண்ணாடி உள்ளே இருந்து பார்த்தால் வெளியே தெரியும். வெளியே இருந்து பார்த்தால் உள்ளே தெரியாது. புன்னகைத்துக் கொண்டார்கள். ஸ்க்ரீன்- ஐ இழுத்து விட்டு முன்பிருந்த அறைக்கு குறுகுறுவென உருண்டு விட்டார்கள். கிழடு கொஞ்ச நேரம் அங்கேயே நின்னுட்டு போயிரும். அதுக்காக இந்த இரவை பலி கொடுக்க முடியுமா.

வழக்கம் போல குளியல் நடந்தது. சூடாக இட்லி அவித்தாள். முந்திரி போட்ட பருப்பு சாம்பார். ஒரு பகல் வாழ்வை அந்த இரவில் நடத்தினார்கள். இது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிகழும் சம்பவங்கள் தான். அதிகாலை 4 மணிக்கு பனிக்குள் உலாவும் பிசாசு போல லுங்கியை தலையோடு கவிழ்த்து கொண்டு ஓடி விடுவான். 6 மணிக்கு டான்னு ஷிப்ட் முடிந்து அப்பா வந்து விடுவார். பவளம் தூக்க கலக்கத்தில் கதவைத் திறப்பாள். ஒரு முழு இரவை ரகசியமாய் முழுங்கி இருப்பாள்.

ஒரு முறை அசந்து தூங்கி விட்டார்கள். அப்பா 6 மணிக்கு வந்து விட அப்போதிருந்து அன்று மதியம் அப்பா வெளியே செல்லும் வரை அட்டாலியில் ஒளிய வேண்டியதாகி விட்டது தங்கா.

சிரித்துக் கொள்ளும் நினைவுகள். டீ நேரத்துக்கு டீ. சோறு நேரத்துக்கு சோறு... என்று அட்டாலி அவன் அறை ஆனது. வீட்டுக்குள் பூனை குட்டியாய் அவள் அலைந்தாள்.

*

தங்கா கண்களில் நேற்று நடந்த எல்லாமும் ஒரு நொடி வந்து போனது.

என்ன இது புதுசா கடியெல்லாம்... வெட்கம் கூட புதுசா இருக்கே... வேகம் கூட புதுசுதான்.... வேர்வை கூட புதுசுதான்.

திராட்சைக் கிழவி காடு செல்லும் நேரம். கூட்டம் முன்னும் பின்னுமாக சென்று கொண்டிருந்தது. அவன் நினைவை கலைத்தது.

"சும்மா சொல்லக் கூடாது பவளா... நேத்து அசத்தினடி " வெட்கம் சூழ..." சரி.. நானும் காட்டுக்கு போயிட்டு வந்தறேன்... சாயந்திரம் பேசு" என்றபடியே வேகமாய் ஓடிச்சென்று கிழவியின் நல்லடக்க கூட்டத்தோடு சேர்ந்து கொண்டான்.

"என்ன சொல்லிட்டு போறான்...?" என்று திடும்மென யோசித்தவள் அவன் கையில் இருந்த பல் பதிவு போலவே அவன் கழுத்திலும் லேசாக பல் பதிந்து இருந்ததை இப்போது தான் கவனித்தாள். தங்கா நில்லு..... நில்லு என்று கை காட்ட காட்டவே அவன் கூட்டத்தோடு கலந்து விட்டான். என்ன சொல்றான்... நேத்து நைட்.. நான் தான் இங்கயே இல்லயே... நினைவு வந்தவளாக மொபைலை எடுத்து வேகமாய் வாட்சப்பை பார்த்தாள்.

today do come என்றிருந்தது. அது don't ஆச்சே.. ஸ்பெல்லிங் மிஸ்டேக். அப்படியே இருந்தாலும்... நான் இல்லாதப்ப இங்க வந்து... நான்தான் கடிச்சேன்னு சொல்றான்... என்ன இது...குழப்பம்...

*

திகிலடித்து நின்றவள் கண்களில் நேற்றிரவு சாம்பல் நிறத்தில் சுழன்றது. இன்று தங்காவை வீட்டுக்கு அழைப்பதாகத் தான் திட்டம்.

சரவணனின் திராட்சைத் தோட்டத்தில் இந்த நேரத்தில் இந்த சூனியக் கிழவி சிக்குவாள் என்று யோசிக்கவே இல்லை. வீடு கிடைக்கும் போதெல்லாம் இந்தக் கிழவியின் தொல்லை தாங்க முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்தக் கிழவிக்கு எல்லாம் தெரிந்து விட்டது. தங்கா வருகையில் எல்லாம் குரைக்கும் எலிசபெத் வீட்டு நாயை விஷம் வைத்து கொன்று சரவணன் தோட்டத்து பாழ் கிணற்றில் கல்லைக் கட்டி போட்டது உள்பட.

நாய் பிணம் மேலே வந்துருக்குமோ என்று பார்க்க செல்கையில் தான்.. அடித்தது கிழவி லாட்டரி.

ஒரு கணம் அந்த நாயின் இறுதி குரைப்பு உடுக்கை அடித்தது. தோட்டத்துள் திகிலடித்து சுழன்றது காற்று. இது தான் வாய்ப்பு. கொத்து திராட்சையை கிழவியின் வாய்க்குள் திணித்தாள். வாயை மூடி மூக்கையும் இறுக்கி பிடிக்க முதிர்ந்த கட்டை முக்கால் துளிகளில் முடிந்து விட்டது. திராட்சை தோட்டத்தில் வீல் என கத்திக் கொண்டே கிளம்பிய கிழக்குருவி ஒரு நொடி காட்டையே அச்சப்படுத்தியது. அப்படியே படுக்க விட்டு... வெளியேறி வேகமாய் வீட்டுக்குள் சென்று விட்டாள்.

பிறகு புறப்பட்டு அம்மாவோடு பாட்டி வீட்டுக்கு பக்கத்து ஊருக்கு சென்றாயிற்று. கொலையை செய்து விட்டு அங்கேயே எப்படி இருக்க முடியும். பதற்றம் தணிக்கும் திட்டம்.

காலையில் ஊருக்குள் சாவு என்று அம்மாவோடு திரும்ப வந்து பார்க்கையில்... திராட்சை திருடி தின்கையில் கிழவி மூச்சு திணறி செத்த கதையை ஊர் சொல்லிக் கொண்டிருந்தது. அப்பாடா என்று அமைதியாக சாவில் கலந்து கொண்டாள்.

ஆனா நேற்றிரவு தன்னோடு இருந்ததாக தங்கா சொல்றானே... எப்படி...? யோசித்துக் கொண்டே வீடொட்டி வலது பக்கம் விரிந்து கிடந்த திராட்சை தோட்டத்தைப் பார்த்தாள். அந்தக் கிழக்குருவி பயங்கரமாக கத்தியபடியே சுழன்று கொண்டிருந்தது. அதற்கு கண்களில் சிமிட்டல் இல்லை. ஆனால் பற்கள் நீண்டிருந்தது.

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.