மணி (எ) சுப்பிரமணி
10.10.1985 - சவாரி ஆரம்பித்தது
30.12.2018 - சவாரி முடிந்தது

இறந்தவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை எப்போதும் ரகசியம் சுமந்து கொண்டிருப்பவை. அது இரவில் இடைவிடாத மௌனத்தில் ஒளி நீண்டு துருத்திக் கிடக்கும் காலத்தின் கழிவுகளைக் கொண்டிருப்பவை.

வீதியின் முகப்பில் புன்னகை-க்கும் பதற்றத்துக்கும் இடையே பொதுவாக பார்த்தபடி ஆட்டோ ட்ரைவர் மணி வீற்றிருக்கிறான்.

இரவில் மினுங்கும் கண்ணீர் அஞ்சலி பதாகைக்குள் இனம் புரியாத துக்கம் கவிந்திருக்கிறது. அவன் நண்பர்களின் ஆட்டோமேட்டிக் கிரியேட்டிவிட்டி தான் மேற்கண்ட பதாகை சொல்லாடல்.

வினயன் உள்ளூர உருளும் பயத்தின் நிறத்தை பற்றிக் கொண்டு அந்தப் பதாகையை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மணி இறந்த இந்த பத்து நாட்களில் தினமும் அவன் இப்படித்தான் ஏதோ தானே செத்தது போல நடந்து கொள்கிறான். யாருமறியாமல் அந்தப் பதாகையையும் மணியின் கருங்கல் வீட்டையும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறான். ரகசியங்களால் கண்டிப்பாக தூங்க முடியாது என்பது தான் பதாகையில் சொட்டும் கண்ணீர் அஞ்சலி துளிகளின் வாயிலாக நாம் அறியும் செய்தி.

சவாரி முடிவதற்கு மூன்று நாட்களுக்கு முன்
**************************************************************
அதே வாசம்.. . அதே நெடி.... அதே வெப்பம்.... அந்தகாரத்திலிருந்து தட்பவெப்பம் மாற்றி பூமிக்குள் நுழைந்து விட்ட மணி, ராஜ நடையில் தள்ளாடி தள்ளாடி வினயனைக் கடந்து வீதிக்குள் நடக்கையில்.... விருட்டென்று முன்னமே தான் ஒளிந்து கொண்டதை ஒருமுறை நினைத்துக் கொண்டான் வினயன். மறுமுறை நினைக்க நேரம் இல்லை. எழுந்து பின் தொடர்ந்தான். வீதி நாய்கள் ஈ என சிரித்து வழி விட.. . மணி அசைந்து அசைந்து பூமியில் இசைந்து இசைந்து இருள்மொழி தின்று குரல் மொழி அற்று தன் பாழடைந்த வீட்டுக்குள் சென்றான். பின்னால், நடுக்கம் கொண்ட வினயன் ஒரு பிசாசின் குறுகிய உடலோடு பட்டும் பாடாமல்..... . .நிறமற்ற பூனை ஒன்றின் லாவகத்தோடு சென்று வீட்டின் பக்கவாட்டிலிருக்கும் துருப்பிடித்த ஜன்னலின் கடைசி சந்தில் கண்கள் சிக்க குனிந்து கொண்டான்.

ரகசியக் கோடுகள் தன்னை விடுவித்துக் கொள்ளுமா என்பதில் தான் இருக்கிறது இந்த ராத்திரியின் அர்த்தம்.

வீட்டுக்குள் சென்றவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்த கோட்டர் பாட்டிலை கழுத்தை திருகி அப்படியே வாயில் கவிழ்த்தினான். கவிழ்த்தி முடிக்கையில் கண்கள் கலங்கி தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது. ஏதோ புலம்பினான். ஏதேதோ முக பாவனைகள்.

உடல் மொழியில் இயலாமை நடுங்கியது. நொடியில் வெறி கொண்ட மிருகத்தை அந்த அறை உணர்ந்தது. கொடியில் தூக்கிட்டுக் கிடந்த லுங்கியை எடுத்து பர பரவென எப்படி எப்படியோ கிழித்து கயிறு போல செய்து மின்விசிறியின் மூன்று கழுத்திலும் நுழைத்து மாட்டி மறுமுனையை கீழே விட்டு தன் நான்காம் கழுத்தில் கச்சிதமாக மாட்டி சுருக்கிட்டு..... ... ஏறி நின்ற ஸ்டூலை தள்ளி விட்டு..... .... காற்றில் குதித்தான். எல்லாமே மரண அவஸ்தை தான் போல. கால்கள் காற்றில் இறங்க இறங்க கழுத்தில் சுருக்கு கரகரவென இறுக்கியது.

வினயன் மூச்சு விட சிரமப்பட்டு உடல் விரிய தொங்குபவனைப் பார்த்தான்.

ஐயோ என்பது போல கண்கள் விரிந்து நிற்க, சுலபத்தில் கீழே விழுந்து கால் நோக அமர்ந்திருந்தான் மணி.

பழைய லுங்கி. பழைய மின் விசிறி. பழைய கட்டடம். மனமும் நைந்த பழைய மனம் தான்.

நெடி கொண்ட துயரில்.. .பாழ்மனம் விசும்ப தற்கொலைக்கு தான் பொருந்தாதது குறித்து வெறித்த பார்வையில் தன்னை நிகழ்த்திக் கொண்டிருத்தவனுக்கு..... .... யாரோ தன்னை பார்ப்பது உள்ளணர்வில் சுட..... ... பட்டென்று ஜன்னல் பக்கம் பார்வையைத் திருப்பினான். பழுப்பு நிறக் கண்களில் ஆட்டோ மணி வெறித்து நோக்க..... . .அடுத்த கணம் ஜன்னலில் இருந்து எட்டிக் குதித்த பூனை ஒன்றின் வால் பிடித்து நான்கு வீடு தள்ளி இருக்கும் தன் வீட்டுக்குள் நுழைந்து தன் கட்டிலுக்கடியே தன்னை நுழைத்துக் கொண்டான் வினயன்.

 

மணி (எ) சுப்பிரமணி
10.10.1985 - சவாரி ஆரம்பித்தது
30.12.2018 - சவாரி முடிந்தது

இறந்தவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை எப்போதும் ஆங்காரம் கொண்டிருப்பவை.

மீண்டும் பதாகை அவனை சுரண்டிக் கொண்டே இருந்தது.

ஏன் இறந்தான். எதுவோ சரி இல்லை. அவனை தொடர்ந்து கண்காணிக்கும் இடத்தில் தான் இருப்பதை நினைத்து உள்ளூர அச்சப்பட்டான். அவன் எதையும் உளறி விடக்கூடாது என்பதற்காகவே இப்படி அவன் பின்னால் அலைவது குறித்த அச்சம் மிகப்பெரிய சுழலை தனக்குள் நிகழ்த்திக் கொண்டிருப்பதை ஒற்றை ஆளாக தானே நம்புவது ஆன்ம சுரண்டலாக இருந்தது. எல்லாரும் அவன் தானாக செத்து விட்டான் என்றுதான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். குடித்து சாவதெல்லாம் போகிற போக்கில் நடக்கும் விஷயம் தான். ஆனாலும் அது அப்படித்தானா என்ற சந்தேகம் வினயனை அழுத்தியது.

சவாரி முடிவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்
******************************************************************
அதே பிண வாசம்..... . வெப்ப சலனத்தின் நூல் பிடித்து அவனைக் கடந்து போக, ராஜ நடையில்..... ... வீதியில்..... ... தனித்த நல் ஓசையில்..... . நடந்து கொண்டிருந்தான் மணி. நேற்றைப் போலவே இன்றும் வேட்டைக்கு செல்லும் நாயின் கண்களோடு பின் தொடர்ந்தான் வினயன். அவன் பின்னால் செல்வதே பிரமிப்பு நிறைந்த பிதற்றலை பூசி இருந்தது. எல்லாக் காரணங்களுக்கும் காரியம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. காரியங்களின் நீட்சியாக காரணங்கள் ராஜ நடை நடக்கலாம்.

மணி, கையில் கூமாச்சிய எமனை போத்தலில் நிறைத்திருந்தான். நடக்க நடக்கவே குடித்துக் கொண்டான். குடிக்க குடிக்கவே நடந்து கொண்டான். வானத்தின் மிக சிறிய நட்சத்திரம் அவன் முகத்தை வீதி விளக்கின் வெளிச்சத்தில் எதிரொலித்தது.

உள்ளே சென்று அந்த பழங்காலத்து கதவை அடைத்தமர்ந்து வேகமாய் கையிலிருந்த பாட்டிலைத் திறந்து மடக் மடக்கென்று குடித்து காலி செய்தான். குடித்து முடித்த காலி பாட்டிலை சுவற்றில் அடித்து உடைத்தான். கைப்பிடி கச்சிதமாக கையில் அமர்ந்திருக்க..... . .உடைந்த இடத்தை சுற்றி குதறிய கழுத்தோடு பற்கள் காட்டிய பாட்டிலை தன் கழுத்தில் வைத்து குத்தி கிழித்து விட முயன்றான். குத்துவதற்கு லாவகமாக கழுத்தை நன்றாக தூக்கிக் கொடுத்தான்.

கைகள் நடுங்கிக் கொண்டே கழுத்தை நெருங்குகிறது. கழுத்து நடுங்கி கொண்டே பின்னால் நகருகிறது.

உடல் நடுங்க கழுத்தை நெருக்கி வைத்து வைத்து மூச்சை இழுத்து பட்டென்று விட்டு விடும் படபடப்பில் கையை கழுத்து பக்கம் கொண்டு செல்வதும் வெளியே காற்றுப்பக்கம் எடுப்பதுமாக இருந்தான்.

"வைத்து கிழி" என்றது விதி..... "எடுத்து தப்பி" என்றது ஞானம்.

"ஆக்.... காக்..... ஆக..... காக்கக்..... " என்று ஒவ்வொரு முறை கழுத்தில் வைக்கும் போதும் ஈனக் குரலில் முனகினான்.

"அயோ அறுக்க முடிய்யலயே..... . பயமா இருக்கே..... . எல்லாமே தப்பாகிடுச்சு..... சரி பண்ணவே முடியாத தப்பாகிடுச்சே.. . மானம் போய் மரியாதை போய்..... . சாகணுமா..... ... அதுக்கு இப்பவே அறுத்துட்டு செத்தரனும்.... அறு..... . மணி.... "

அவனாகவே வாய் விட்டு கதறியபடி கை நடுங்க..... . .தொண்டையிலிருந்த பாட்டில் இடது பக்க கழுத்தில் லேசாக கீறிக் கொண்டு கையிலிருந்து தவற.... அவனும் இது தான் சரி என்று கீழே சரிந்தான். போதை இன்றைய தற்கொலை முயற்சியை சரித்து விட்டிருந்தது. விழுந்தவன் அடுத்த கணம் வலி தாங்காமல் 'ஹீஈஈஈ..... . ' என்று எழுந்தமர்ந்தான். அவன் கண்கள் ஜன்னலில் ஒளிந்து வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த வினயன் கண்களை..... . .பளிச்சிட்ட ஒளியின் தொன்மத்தில் பார்த்தன. அடுத்த கணம் ஒரு கருப்பு நாயின் உடல் மொழியோடு வெற்றிடம் உதறிவிட்டு படுவேகமாய் ஓடிச்சென்று தன் வீடு நுழைந்து தரையில் ஊர்ந்தவாறே கட்டிலுக்கடியில் தன்னை பொருத்திக் கொண்டான் வினயன்.

வினயனின் பெருமூச்சு அந்த அறை முழுக்க ஓர் அதிகார வெளிச்சத்தின் கீற்றைப் போல ஜொலி ஜொலித்தது. தானாக தொண்டைக்குள் கசியும் அணத்தலில்..... தீரா பாவம் சொட்டியது.

 

மணி (எ) சுப்பிரமணி
10.10.1985 - சவாரி ஆரம்பித்தது
30.12.2018 - சவாரி முடிந்தது

இறந்தவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை எப்போதும் தன்னை மறந்து கொண்டிருப்பவை. எதையோ மறைத்துக் கொண்டிருப்பவை.

சவாரி முடிவதற்கு முந்தைய நாள்
***************************************************
அதே நெடியில்.... அதே நடையில்,..... மணி. அதே ஒளிந்த கருந்துளையின் வாயோடு முசுமுசுவென தேடித் திரியும் வினயன் அவன் பின்னால்.

மணி, வீட்டுக்குள் யாரிடமோ பேசினான்.

"என்னால முடியல.... மண்டைக்குள்ள என்னமோ ஓடுது.... பெரிய தப்பு பண்ணிட்டேன்..... என்ன தப்புன்னு எல்லாம் சொல்ல முடியாது..... நீ இந்த பாட்டில் பொடியை இந்த சரக்குக்குள்ள போடு..... உன் கையாள நான் சாகனும்.... அது தான் என் பாவத்தின் சம்பளம்.... "

ஆமா.... பெரிய தப்பு தான்.... சரி பண்ணவே முடியாத தப்பு. எல்லாம் இந்த குடியால் வந்த தப்பு.... "

"முடியாதா.... முடியாதா.... முடியாதா..... . இத்தனை வருசமா காதலிச்சிட்டிருக்க. உயிருக்குயிரா காதலிக்கறவ உயிர கூட உன்னால எடுக்க முடியலன்னா.. . அப்புறம் என்னடி மயிறு காதல்.... உன் கல்யாணத்துக்கு அப்பறமும் உன்ன காதலிக்கிறேன் பாரு..... என்ன ஆட்டோ ஏத்தியே கொல்லனும்.... பரிதாபமெல்லாம் படாத..... எல்லாத்துக்கும் காரணம் இருக்குடி..... உன் கையாள சாகனும் நான்.. ஏன் முடியாது.... ஏன்டி முடியாது..... .... "

"தயவு செஞ்சு இந்தப் பொடியை இந்த டம்ளர்ல கொட்டிட்டு போ..... .... என் ராசாத்தியே..... " என்று தலையை கீழே தரையில் போட்டு மட் மட் என்று அடித்துக் கொண்டு அழுகையில்....

அதே கருப்பு பூனை கன்னம் கீற..... . ." ஆ..... . ஹ்.... " என்று கத்திய வினயன் மணியின் கண்களை இம்முறை மிகத் தீவிரமாக தன் பக்கம் இழுத்து விட்டான். அதே நேரம் உள்ளே இருந்து ஒரு கொலுசொலி வேக வேகமாய் ஓடி மறைந்தது. அதே வேகத்தோடு தன் வீடு நுழைந்த வினயன் கன்னம் பிராண்டிய பூனையின் கால்களின் நினைப்பை கடித்து மென்று கொண்டிருந்தான். திக் திக் திக் ..... . இரவு அது.

 

மணி (எ) சுப்பிரமணி
10.10.1985 - சவாரி ஆரம்பித்தது
30.12.2018 - சவாரி முடிந்தது

இறந்தவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை எப்போதும் இறந்தவனுக்கு காத்திருக்கிறது. கொஞ்சம் இருப்பவனுக்கு காத்திருக்கிறது.

சவாரி முடிந்த அந்த நாள் இரவு
*******************************************
இப்போதும் காத்திருக்கும் கண்களில் இன்று மாலை வீசி எறிந்த பூக்களில் ஒன்று ஒட்டி இருக்கிறது, விடாது சாபமென்று. விட்டாலும் சாபம் தான் என்று.

"கண்டிப்பாக மணி தற்கொலை செஞ்சிருக்க மாட்டான். அவ்ளோ தைரியம் இல்லை அவனுக்கு. இருந்திருந்தா..... . கழுத்தறுத்துகிட்டு செத்துருப்பான். மறுபடியும் தூக்குல தொங்கிருப்பான். அந்தப் பொடியை அவனே கலந்து குடிச்சிருப்பான். அப்பறம் எப்டி செத்தான். யாரோ ஒருத்திகிட்ட என்ன கொன்னுடுனு ஏன் கெஞ்சனும்..... . அந்த யாரோ ஒருத்தி யாரு.. . ஒருவேளை அவகிட்ட எல்லாத்தையும் சொல்லியிருந்தா..... . சரி அவ யாரு.... இந்த ஊர்ல தனக்கு தெரியாமல் அது யாரு.... இத்தன வருஷ காதல்ங்கிறான்..... அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுங்கறான்.... யாரா இருக்கும்.. . மூணு நாளா தொடர்ந்து குடிச்சதுனால தான் செத்தான்னு போலீஸ் சொல்லுது.. .செத்து ரெண்டு நாள் கழிச்சு நாத்தம் வந்தப்புறம் தான் அவன் செத்ததே வீதிக்குள்ள தெரிஞ்சுது.... அவன் சாவுல ஒரு பிரச்னையும் இல்ல..... . ஆனா அவகிட்ட சொல்லியிருந்தா..... விஷயம் வெளிய வந்தா..... . .என்ன பண்ண..... கட்டலுக்கடியில் ஓடி ஒளிஞ்சாலும்.... சட்டம் தன் கடமையை செய்யுமே..... பேப்பர்ல போட்டு.... எப் பில கிழிச்சு தொங்க விட்டு கொடூரமா சாகடிப்பானுங்களே.... எப்படியாவது இதுலேருந்து தப்பிக்கணும்..... .... என்ன பண்ண.... என்ன பண்ணலாம்.. ."

வினயனுக்கு தலை வெடித்து விட்டது போல இருந்தது..

 

மணி (எ) சுப்பிரமணி
10.10.1985 - சவாரி ஆரம்பித்தது
30.12.2018 - சவாரி முடிந்தது

இறந்தவனின் கண்ணீர் அஞ்சலி பதாகை தேங்கிய காலத்தில் சாயம் போன ஒரு பழக்கமாகி இருந்தது. அதில் எவன் இறப்பும் ஒரு சம்பவம் மட்டும் தான்....

சவாரி முடிந்த 15 நாட்களுக்கு பின்
************************************************
"எப்படி அவளை கண்டு பிடிப்பது.. . சமீபத்துல கல்யாணம் ஆனவங்க யாரு.... மணி வயசொத்த பொம்பளைங்க யாரு.... யாரு அவனை உத்து உத்து பார்த்தது.... அவன் வீட்டு வழியா யாரெல்லாம் அடிக்கடி போனது.... தண்ணி பிடிக்கற சாக்குல யாரு அவன்கிட்ட பேசினது.. . அவன், யார் கூடவெல்லாம் வீதில நின்னு பேசுவான்.... ?"

கண்களை மூடி இறந்த காலத்துக்குள் ஓர் அரூபத்தின் நாவடக்கத்தோடு அங்கும் இங்கும் அலைந்தான். அப்படி இப்படி என்று வடிகட்டி ஒரு நான்கு பேரில் வந்து நின்றான். இவர்களில் ஒருத்தி தான்.... அவன் காதலியாக இருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகையில்.... மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நால்வரில் யாராக இருந்தாலும்..... அது யாரும் நம்ப முடியாததாகத்தான் இருக்கும். எப்படி இப்படி ஒரு உறவு இவர்களுக்குள் உருவானது. நல்ல காதலோ நொள்ள காதலோ அது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வரும். இடம் பொருள் ஏவல் பார்க்காத காதலுக்கு அதன் பொருளே வேறு. எந்த கட்டமைப்புக்குள்ளும் அடங்காத ஆங்காரம் நிறைந்தது காதல்.

கிட்ட த்தட்ட இந்த பதினைந்து நாட்களாக அலைந்து திரியும் இரவுக்கு வினயனின் கண்களும்.... கால்களும் தான். இடைவிடாத நெருப்புக் குமிழோடு அலைபவனுக்கு துளி துளியாய் வலிகள் சேர்ந்து கொண்டே இருந்தன. மணியின் வீடு புகுந்து அவனாடைகள் அணிந்து இருபது நாட்களாக எடுக்காத தாடியும்..... சீவாத சிக்கு பிடித்த தலை மயிருமாக..... குளிக்காத உடல் பிழையுமாக ஊர் குறுக்கு சந்துகளில்.. . கைவிடப்பட்ட ஆன்மாவாக அலைந்து கொண்டிருக்கும் வினயனுக்கு வாழ்வின் எல்லை பயத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும்.... மணி செத்ததில் ஒரு வகை அமைதி உள்ளூர ஓடுவதில் சுகமே. அதுவும்.. . அவன் குடித்து தான் செத்தான் என்று ஊர் நம்புவதில்.. . சுகமோ சுகம்.. . பீர் பாட்டிலை வாயால் கடித்து திறக்க முயற்சிக்கையில் பாட்டில் கழுத்தில் பல் பட்டு கீறி விரிசல் விட்டு உடைந்த சிறு சிறு பீஸ்கள் வயிற்றுக்குள் சென்றதிலும் சாவு கூடுதலாக நிகழ்ந்திருக்கும் என்றபோது அது வரையில் அது சரி. ஆனால்.. . அது அப்படி இல்லை என்றால் அந்த அவளை கண்டு பிடித்தால் தான் சரி.

நால்வரில் ஒருத்தியின் வீட்டு கொல்லைப்புறத்தில் வெறித்த கண்களில் நிழலாடி நிற்கையில்.... "பேய்..... . பே..... . ய்..... . " என்று முனங்கி மயங்கி சரிகையில்.. . நான்கில் ஒருத்தி இல்லை என்றானது.

அன்றே இன்னொருத்தி வீட்டு ஜன்னலில் நிழலாட நிற்க..... " செத்துட்டா போய்டணும்..... . திரும்ப வந்து தொந்தரவு பண்றது நியாயமே இல்லை" -கை எடுத்து கும்பிட்டவள் கண்டிப்பா அவளாக இருக்க முடியாது. உள்ளுணர்வு ஜன்னல் தாண்டி நிழல் அசைக்க அன்றே அடுத்தவள் மொட்டைமாடியில் அசையும் துணியோடு நின்றசைய, ஜன்னலில் முகம் புதைத்திருந்தவளிடமிருந்து விசும்பல் கேவி கேவி வந்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் காணாமல் போனான் வினயன்.

நினைத்தது சரியாக இருந்தது குறித்து அவனுள் மகிழ்ச்சி.

"இவளா அது..... . ! அடுத்த நாள் அலைபேசியில் கிசுகிசுத்தான்.

"ஆட்டோ மணிக்கும் உங்களுக்கும் இருந்த எல்லாமே எனக்குத் தெரியும். எனக்கு உங்க கூட கொஞ்சம் சமாதானம் பேசணும். நொய்யல் ஆத்துப் பாலத்து பக்கம் இருக்குற ஒத்தப்பனைக்கு இன்னைக்கு ராத்திரி 11 மணிக்கு வரணும். ஒரு நிமிஷம் லேட்டானா கூட உன் ஆளு மணி, பிரேம் போட்டு வெச்சிருந்த சன்னி லியோன் அம்மணமா நிக்கற உன் ஊதா நிற ஜட்டிய உன் புருசனுக்கு அனுப்பிருவேன். உன் புருஷன் அதை கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு தத்தி இல்லன்னு நினைக்கறேன்..... " அவன் பேச பேசவே.... மறுமுனையில்....

"அயோ..... வந்தர்றேன்..... . வந்தர்றேன்.... வெளிய யார் கிட்டயும் எதுவும் சொல்லிடாத.. பேசிக்கலாம்.... பிளீஸ்ஸ்ஸ்..... "

கிட்டத்தட்ட அழுகையோடு கலந்த தவிப்பு, குரலில்.

காத்திருந்த இரவு கழுத்தில் கத்தி வைத்தலைவது போல உள்ளூர நடு நடுங்கி நொய்யல் கரையோரம் அமர்ந்திருந்தான் வினயன். கையில் பிரேம் போட்ட சன்னி லியோன்.

அவள் வந்ததும் காலில் விழுந்து, " எதையும் வெளிய சொல்லிடாத.. என் எதிர்காலமே அதுல தான் இருக்கு. ஆட்டோ மணி ஏதாவது எங்களப்பத்தி சொல்லி இருந்தா அத இங்கயே போட்டு மூடிடு. நானும் உங்க ரகசியத்தை இங்கயே போட்டு மூடிர்றேன். அதுக்கு இது சரியா போச்சு.... "- எப்படி பேச வேண்டும்.. . என்று மனதுக்குள் ஒத்திகை நடந்து கொண்டிருக்கும் போதே புளிய மரம் வெலவெலக்க வெண் ராத்திரிக்கு கொஞ்சம் தெறிக்கும் நிறம் சிவப்பு என்பது போல முதுகில் படாரென விழுந்த உதை வினயனை நிலை குலைய வைத்து ஆற்றில் விழ வைத்தது. அதே கரை புரண்டோடும் காட்டு வெள்ளம். திக்கி திணறி.. மூச்சு விட்டு.. நீர்..... குடித்து.... என்ன ஏது என்பதற்குள் பாதி உயிர் போயிருந்தது. மீதி உயிரோடு நீரோடு காணாமல் போனான் வினயன்.

ஆற்றுக்குள் உதைத்து விட்ட உடல்மொழியோடு வெறிக்க பார்த்துக் கொண்டிருந்த டேவிட்க்கு நா நடுங்கியது.

"மன்னிச்சிரு மச்சா.. . திருடப் போனாக் கூடா தனியா போன்னு சொல்வாங்க.... கூட்டா செஞ்ச தப்பு எப்படியும் வெளிய வந்துரும்.... அதும் குடிச்சிட்டு பண்ணின தப்பு கண்டிப்பா வெளிய வந்திரும்.. .எனக்கு வேற வழி இல்ல.. . மன்னிச்சிரு மச்சான்.... ஆட்டோக்காரன தான் முதல்ல போட நினைச்சேன்.... அவன் அவனே குடிச்சு செத்துட்டான்.. . இப்போ நீ தான்..... . .இது எல்லாத்துக்கும் ஒரே சாட்சி.. . இப்போ நீயும் இல்ல.. . நீ சொன்ன அதே டெக்னிக்தான்டா..... . .காட்டாத்துல தவறி விழுந்தாங்களா..... ... தள்ளி விட்டு விழுந்தாங்களா..... செல்பி எடுத்து விழுந்தாங்களான்னு யாருக்குத் தெரியும்..... "

செம்மண் நிறத்தில் இரவின் கரு நீலம் புரண்டோடும் ஆற்றைப் பார்த்து தனியாக புலம்பிக் கொண்டிருந்த டேவிட்டை கை கொண்ட கருங்கல் கொண்டு மண்டையில் அடித்து சரித்தாள் வினயனோடு சமாதானம் பேச வந்த ஆட்டோக்காரனின் காதலி.

மணி சரியாக இரவு 11

கீழே விழுந்தவனை தர தரவென உடலின் மொத்த பலத்தையும் கொடுத்து அசைந்து அசைந்து இழுத்து பனை மர முதுகில் மோதினாள். எதிர்பாராத இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன டேவிட் செயல்பட முடியாமல்.. . பலத்த அடியோடு எழுந்திருக்க முடியாதபடிக் கிடந்தான். மண்டையில் இருந்து தெறித்த குருதிக்கு ராத்திரியின் நிறம்.

"சொல்லுடா.... அவனை ஏன் தள்ளி விட்ட.. .சொல்டா.. . அவனை ஏன் தள்ளி விட்ட..... ஆட்டோக்காரன ஏன் கொல்ல நினைச்ச.. .உங்களுக்குள்ள என்ன பிரச்சனை.. . மூணு பெரும் சேர்ந்து என்ன பண்ணுனீங்க.. ."

கட்ட குரலில் பனை மரம் அதிர கேட்டாள். அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் கல் மண்டைக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. 

"சொல்..... . லு..... . .டா..... . ."

அதே நிலா வெளிச்சம்..

20 நாட்களுக்கு முந்தைய ஒரு ரத்தக் கறை படிந்த அந்த நாளின் இரவை காட்டியது..

சவாரி முடிவதற்கு 20 நாட்களுக்கு முன்
***********************************************************
மழை கொட்டோ கொட்டென கொட்டி சரிந்து கொண்டிருந்தது.

வெறி கொண்ட மழைத்துளியில் பாவம் புண்ணியமெல்லாம் இல்லை. சாபத்தின் உருண்டைகள் கத்தி கொண்டு குத்தி கிழித்துக் கொண்டிருந்தன. தொடர்ந்து மூன்று நாட்களாக பெய்யும் இடம் பொருளற்ற மழைக்கு மழை என்ற பெயர் தகாது. கோவைக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்து பின் வாசல் வழியே பாயும் நொய்யல் பாயும் இடமொன்றில் நாக்கு விரிந்து நிற்கும் ஆலமரம் ஒன்றின் அடியே டேவிட்டும் வினயனும் 12 வயது பிள்ளையை அள்ளி வந்து அக்கிரமம் செய்து கொண்டிருந்தார்கள்.

மாற்றி மாற்றி மாற்றி மாற்றி..... மர மறைவில்.. . இளஞ்சூடு மிச்சமிருக்கிறது.

"மச்சான் சிக்குனா கதை முடிஞ்சிடும்" என்ற டேவிட்டுக்கு தொண்டை வறண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்றான்.

"இன்னைக்கு தூக்கிருக்கேன்னா அறிவில்லாமய்யா..... ... பொறு மாப்ள..... கிளைமேக்ஸ் நான் சொல்றேன்" என்றபடியே தம் பற்ற வைத்து வேக வேகமாய் இழுத்தான். குடித்திருந்த கண்கள்.... சிவந்திருந்த சிறுமியை மீண்டும் குதறியது.

"சரி.. . தள்ளு.. . நீயே..... " என்று பாதி முனங்கிய வினயனைத் தள்ளி விட்டு இன்னொரு சாத்தானாய் அந்த சிறுமியை பிராண்டினான் டேவிட்.

இருட்டுக்குள் எதுவோ அசைய கிளை விலக்கி பார்த்த போது இருள் பழகிய கண்களில் மாடுகள் போல அசைவுகள் தெரிந்தன.

"டேய்..... யார்றா நீங்க..... என்னடா.... பண்றீங்க.... டேய்.... "

குரல் கேட்டு மடமடவென உதறி எழுந்து ஓட எத்தனித்தவர்களை ஒருவனை எட்டி உதைத்தும் ஒருவனைப் பிடித்திழுத்தும் கீழே சரித்தான் ஆட்டோ மணி.

"யார்டா நீங்க.... இங்க என்ன பண்றீங்க.... " என்றபடியே கையில் இருந்த லைட்டரை அடித்து..... . நடந்து கொண்டிருக்கும் குரூரத்தை வெற்றிடம் தடவி புரிந்து கொண்ட ஆட்டோ மணி .... பதபதைப்போடு..... "அயோ..... டேய்.... பாவிங்களா..... " என்று முனங்கி கொண்டே வேக வேகமாய் லைட்டரை எதிரே இருக்கும் முகத்துக்கு தூபம் காட்டினான்.

இருளில் சூனிய முகங்களை மழை குளிர கண்ட மணி..... " டேய்.. . நீங்களாடா.... என்ன காரியண்டா பண்ணிட்டுருக்கீங்க.... இது யார்டா.... அயோ.... கொலைகார பாவிங்களா.... இப்டி கொடூரம் பண்ணிட்டுருக்கீங்களே.. .!!!!" திகைத்து பார்க்க பார்க்கவே.... அவர்கள் இருவருக்கும் இது ஆட்டோ மணியண்ணன் என்று புரிந்து விட சற்று நிம்மதி பெருமூச்சில்.... " மணிண்ணா வெளிய தெரிஞ்சா லைஃப் காலிண்ணா..... ... காப்பாத்துண்ணா.... " என்று என்று மூச்சு வாங்கிக் கொண்டே சொல்லி விழுந்திருந்தபடியே மணியின் காலை பற்றினார்கள்.

காலில் பட்ட அருவருப்பை உதறியவனாய்.... " டேய்.. . கால விடுங்கடா.... ஒரே ஏரியா பசங்களா போய்ட்டிங்க.. . என்ன எழவுடா இதெல்லாம்..... . .இத்னுண்டு புள்ளய எப்பிடிடா..... . . எங்கடா தூக்குனீங்க.... " தலையில் கை வைத்து கீழே வாகாக இருந்த கல்லில் சொத்தென்று அமர்ந்தான் மணி.

மழை இன்னும் தீவிரமாகி விட்டிருந்தது. கீழே குதறப்பட்டுக் கிடந்த சிறுமி, மயக்கம் தெளிந்து முனங்க, வாயில் இருந்த துணியை இன்னும் இறுக்கி கட்டினான் டேவிட்.

வெறித்துப் பார்த்தபடி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் மணி. வேகமாய் சரக்கை ஊற்றி குடித்த வினயன் பாதி சரக்கை மணியிடம் நீட்டினான்.

"எனக்கெதுக்குடா..... . .?" என்று பார்த்தவன் கையில் திணித்து, " அடிண்ணா.... அடிச்சிட்டு ஹெல்ப் பண்ணுண்ணா.... " என்றான். இருட்டைத் துழாவும் குரூரக் கண்கள் அவனுக்கு.

யோசிக்க யோசிக்க உருளும் சிறுமூளை பிறழ்வுக்கு எதையோ சரிசமம் செய்வது போல வாங்கி வேகமாய் வாயில் கவிழ்த்தியபடி தலையை சிலுப்பியபோது அவன் கண்களில் இருள் நிரம்பி வெம்மை வழிந்தது. "என்னடா பண்ணிருக்கீங்க.... " முனகினான். காட்டு வெளி..... மழை சத்தத்தில் அடங்கி இருந்தது. இனம் புரியாத தூரத்து சப்தம் மட்டும் கிட்டத்தில் கேட்பது போல பாவனை அவர்களை சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்தது.

மூவருக்குமான மௌனம்.... அஃகாகி கிடக்க நடுவில் துணியின்றி நடுங்கிக் கிடந்த சிறுமியை மீண்டும் லைட்டர் வெளிச்சத்தில் பார்த்தான் ஆட்டோ மணி. "ச்சே" என்பது போல முகம் திருப்பி அவர்களிருவரையும் பளார் பளார் என அறைந்தான். எதிர்பாராமல் அடி வாங்கியவர்கள் உக்கார்ந்தபடியே நகர்ந்து கீழே சரிந்து கன்னம் பிடித்துக் கொண்டு.... " அண்ணா.... பிளீஸ்ண்ணா வெளிய சொல்லிடாதீங்ண்ணா.... " கிசுகிசுக்கும் குரல் வழியே கதறினார்கள்.

"டேய்..... தப்புடா.... இது தப்பு.. . நியாயமா உங்கள போலீஸ்ல புடிச்சு குடுக்கணும்..... ஆனா தெரிஞ்ச பசங்களாகிட்டீங்களேன்னு தான் யோசிக்கறேன். உங்க அப்பா அம்மா இருக்கற உத்தியோகத்துக்கு நீங்க பண்ற வேலையாடா இது.... பாவம் சின்ன புள்ளைய.... இத எங்கடா புடிச்சீங்க.... சரி.... இது வேலைக்காகாது..... நான் போலீசுக்கு போறேன்.. " என்று வேகமாய் எழுந்தவன் காலைப் பற்றிக் கொண்டு சத்தமில்லாமல் கத்தினார்கள்.

"மணிண்ணா வீட்டோட மானம் போய்டுண்ணா .. . அப்பா அம்மா தூக்குல தொங்கிடுவாங்க.... கொஞ்சம் கருணை காட்டுண்ணா.. . நீ ஒன்னும் பண்ண வேண்டாம்.. . நீ பாட்டுக்கு எதையும் பாக்கலன்னு போய்டு..... . மத்தத நாங்க பார்த்துக்கறோம்.. . வேணும்னா நீயும்..... " போட்டுடைத்தான் வினயன்.

ஒருவன் காலை பற்றி இருக்க.. இன்னொருவன் சரக்கை எடுத்து நீட்டினான்.

"குடிண்ணா .... குடிச்சிட்டு யோசி.. ஒரு நல்ல முடிவுக்கு வருவ.... " கெஞ்சும் மொழியில் இருள் பதுங்கியது.

வாங்கி வேகமாய் குடித்தவன் தலை கவிழ்ந்தே அமர்ந்திருந்தான். உடல் நனைந்திருந்த மழையில் ரத்தவாடை.

அடுத்த பெக்கையும் வாங்கி குடித்தவன் மரத்தில் சாய்ந்து அமைதியாய் இருளையும் இருள் துளைத்து ஓடிக் கொண்டிருக்கும் நொய்யல் ஆற்றையும் பார்த்தான்.

மிதமான மழை தொடர்ந்து கொண்டிருந்தது. மரணம் மெல்ல நிகழ்ந்து கொண்டிருந்தது. மையம் கழன்ற மாவிலைத் தோரணம் அந்த மரத்தை சுற்றி கடும் பேயென சுழன்று கொண்டிருந்தது. அந்த சிறுமி ஆவென கண்கள் சுழல உடலை எம்பி எம்பி துடித்துக் கொண்டிருந்தாள்.

இம்முறை அவனாகவே சரக்கை வாங்கி கடகடவென கவிழ்த்தினான். மண்டைக்குள் செய்வதறியாத புழுக்கள் நீந்தி வழிந்தன. முகத்தைத் துடைத்துக் கொண்டே மரத்தில் பட்டை உரித்துக் கொண்டே முனங்கிக் கொண்டிருந்தான்..

"தப்பு தம்பிகளா.... தப்பு.. . " வாய் குளறும் பேச்சில் கண்கள் நீவ..... டேவிட்.... மீண்டும் சிறுமி மீது படர்ந்தான். அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வினயன் கண்களில் பளிச் பளிச்சென மின்னல் மின்னின. குரூரம் குமைய வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஆட்டோ மணி. அவன் புலம்பல்கள் எல்லாம் வெற்றிடத்தை கவ்விக் கொண்டிருந்தன.

அடுத்து வினயன், " மணிண்ணா.... ப்ளீஸ்ண்ணா ..... . . வெளிய சொல்லிடாத..... . ப்ளீஸ்ண்ணா .. . ஆட்டோ வாங்க காசு குடுத்து ஹெல்ப் பண்ணினது எங்க அப்பா தான.... ப்ளீஸ்ண்ணா .. . காப்பாத்து" என்று கெஞ்சிக் கொண்டே சிறுமி மீதி கவிழ்ந்தான்.

கிளை கொண்ட பெருந்துளிகள் மணியின் தலை மேல் சொட்ட சொட்டென கொட்டின. உள்ளூர நடுங்கும் குளிரின் துளிகளை உணர்ந்த போது கையில் இருந்த சரக்கையும் வேகமாய் அடித்து விட்டு செய்வதறியாது அமர்ந்திருந்த மணியும் அடுத்து அனிச்சையாய் அச்சிறுமி மீது படர்ந்தான். மழை வலுத்தது.

வெறி கொண்ட மனிதர்கள் வெக்கை தாங்காமல் எழுகையில்.. . சிறுமி கொத்து கொத்தாய் செத்திருந்தாள். ஏற்கனவே போட்ட திட்டத்தின்படி சடலத்தை தூக்கி பள்ளத்தில் வீசினார்கள் வினயனும் டேவிட்டும்.

"என்னண்ணா பார்க்கற.. .அடிக்கற மழையில் பாடி பிஞ்சு கை வேற கால் வேறயா உருத்தெரியாம போயிரும்.... இந்த மாதிரி மழையில தெரியாம ஆத்துல விழுந்து வழக்கம் போல சாகறவன்.... இப்போல்லாம் செல்பி எடுத்து சாகறவனும் சேர்ந்திருக்கான்.... ஆத்தோட போறதெல்லாம் சகஜமா நடக்கும்.. . அதுல இதுவும் சேர்ந்திடும்.... டோன்ட் வொர்ரி..... . ."

"டேய்.. நீங்க 17 வயசு பசங்கடா.. மாட்னாலும் மைனர்னு சொல்லி மைத்த ஆட்டிகிட்டிட்டே வெளிய வந்துருவீங்க..... நான் மாட்னா காலிடா.... "

மிச்சம் இருந்ததையும் வாய் குழற பங்கிட்டு குடித்தார்கள்.

"ஏதோ முனங்கற சத்தம் போகும் போதே கேட்டுச்சுடா.. . சவாரியை இறக்கி விட்டு திரும்ப வரும் போதும் அதே சத்தம்.... அதான்.... நின்னு என்னனு பார்க்கலான்னு பார்த்தா இங்க புதருக்குள்ள.... நீங்க..... . இது எப்பவும் நாங்க கஞ்சா அடிக்கற இடம் தான்.. . அதான் சந்தேகம் வந்து எட்டிப் பார்த்தேன்.. ."

"அயோ இப்டி புலம்பிட்டு இருந்தீன்னா மாட்டிக்குவோம்.... முதல்ல கிளம்புவோம். இனி நமக்குள்ள எப்பவும் போல பேச ஒன்னும் கிடையாது. நீ உன் வழில போ.... நாங்க எங்க வழில போறோம் " அவர்கள் பேசிக் கொண்டே கிளம்ப..... ஆற்றில் வெற்றுப் பிணமாய் ஒரு குடும்பத்தின் உயிர்..... . .ஒரு குடும்பத்தின் ஆணிவேர்..... . ஒரு குடும்பத்தின் ஆன்மா..... . தனியே வெள்ளப்பெருக்கோடு கரை புரண்டு போய்க் கொண்டிருந்தது. 

இதோ இப்போது
***********************

சொல்லி முடித்த டேவிட் தலை தொங்கி உயிர் நோகக் கிடந்தான்.

"சீ..... தேவிடியா பசங்களா..." என்று சொல்லிக் கொண்டே டேவிட்டின் கழுத்தில் ஓங்கி ஓங்கி கல் கொண்டு அடித்தாள். முகம் தலை என்று சிதறியது. செத்தானா இல்லயா என்று கூட பார்க்கவில்லை. நாயை இழுத்து வீசுவது போல நொய்யலில் வீசி விட்டு கைக்கெட்டும் நீரை எடுத்து தலையில் தெளித்தபடி மனதுக்குள் விதவிதமாய் நெளிந்த பாம்புகளின் அருவறுப்போடு தன் ஊனக் காலைத் தாங்கி தாங்கி வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள். கை அனிச்சையாக அந்த சன்னி லியோன் பிரேமை வெறிகொண்டு உடைத்து கிழித்து ஆற்றில் வீசியது.

மனதுக்குள் பெய்யும் மழையிலும் குடையற்று நனைவது அப்போது தேவையாய் இருந்தது. மனதுக்குள் ஓடிய ஆற்று வெள்ளத்தில் சுழன்று கொண்டே தோன்றியது

"விடிவதற்குள் வீடு செல்ல வேண்டும்..... ஆட்டோக்காரனை மனதுக்குள் இருந்து கொன்று எறிய வேண்டும்."

கரை புரண்டோடும் நொய்யலின் வழியை ஏனோ திரும்பி பார்க்கத் தோன்றியது... அவளுக்கு. 

- கவிஜி

Pin It