காலை எழுந்தவுடன் கவினுக்கு இப்போதெல்லாம் வாட்சப்பைத் திறந்து அவனது காலை வணக்கம் வந்துள்ளதா எனப் பார்ப்பதே முதல் வேலையாகி விட்டது. சித்தார்த்தை கவினுடன் இணைத்தது அவளது ஓவியங்கள் தான். கவின் சென்னை ஓவியக் கலை கல்லூரியில் முறையாகப் பயின்று பட்டம் பெற்றவள். அனாட்டமியையும், மார்டனிசத்தையும் இணைத்து உடல் மொழி பேசும் தத்ரூப ஓவியங்கள் அவளது அடையாளம். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ரஷ்ய ஓவியர் செர்ஜ் மார்ஷெனிக்கோவ் ஓவியங்களை அறிந்து கொண்ட பிறகு, நிர்வாண உடல்களை வரைவதில் அவளுக்கு ஏற்பட்ட ஆர்வம் கவினை விரல்விட்டு எண்ணத்தக்க சிறந்த ஓவியர்களின் பட்டியலில் அமர்த்தியிருந்தது.

கொரோனாவில் நாடே முடங்கி இருந்த போது இடதுசாரி அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த ஜூம் கூட்டத்தில் அவள் ஓவியங்களைப் பற்றி 2 மணி நேரம் உரை நிகழ்த்தி களைத்திருந்த நேரத்தில் தான் சித்தார்த் கேள்வி கேட்க அனுமதி கேட்டு கையை உயர்த்தியிருந்தான். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுமதி கொடுத்த பிறகு அவன் கேட்ட கேள்வியில் தான் "யார்றா இவன்", என கவின் அவனை கவனிக்கத் துவங்கினாள். "உடலமைப்புக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் உடைகளுக்குத் தருவதில்லை? உடைகள் மீது உங்களுக்கு அப்படி என்ன வெறுப்பு" என அவன் கேட்ட கேள்விக்கு வெடித்துச் சிரித்தவள், "எது உடைக்கப்பட வேண்டியதோ அதைப் பற்றி மட்டுமே எனது தூரிகை பேசும். உடை ஒன்றும் அவ்வளவு முக்கியமானதல்ல. உடல் குறித்த அசூயையை துடைத்தெறிவதே எனது ஓவியங்களின் இலக்கு" என்று அவள் சொன்ன பதிலில் ஈர்க்கப்பட்டவன் முகநூலில் நட்பழைப்பு விடுக்க இனிதே துவங்கியது அவர்களது நட்பு.

ஓவியம் பற்றி தொலைக்காட்சி சானலுக்காக தன்னை பேட்டியெடுக்க சித்தார்த் வந்த போது தான் அவனை முதன் முதலாக கவின் நேரில் பார்த்தாள். தீர்க்கமாக இருந்தான். மரியாதையாக நடந்து கொண்டான். உலகத் தரமான ஓவியங்கள் குறித்து அவன் பல்வேறு தரவுகளுடன் கேள்வி எழுப்பிய போது கவினுக்கும் அவன் மீது ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது. தான் வரைந்த பல்வேறு ஓவியங்களைப் பற்றியும், தனக்கு கிடைக்கவிருந்த பிரபுல்ல தணுக்கர் விருது சிலர் லாபி செய்ததால் தனக்கு கிடைக்காமல் போனது பற்றியும், தன்னுடைய ஓவியங்கள் மேற்கத்திய நாடுகளின் கண்காட்சியில் இடம்பெற்ற தகவல்களையும் அவன் சரளமாக கூறத் துவங்கிய போது அவள் வியந்து போனாள்.

தங்களது தனிப்பட்ட தொடர்பு எண்களை பரிமாறிக் கொண்டவர்கள் அதன்பிறகு தினமும் பேசத் துவங்கி இருந்தார்கள். அரசியல், ஊடகம், சினிமா, இசை என பல்வேறு வண்ணங்களைத் தானாகப் பூசிக் கொண்டது அவர்களது நட்பு. பேசினார்கள், சிரித்தார்கள், தங்களைப் பற்றி நிறைய பகிர்ந்து கொண்டார்கள். அவனது குட்மார்னிங்குடன் துவங்கும் கவினின் நாட்கள் அவனது குட்நைட்டுடன் முடிவடையும் விதமாக மாறிப் போனது.

கவினின் ஓவியங்களில் பெரும்பாலும் கருப்பும் பழுப்புமான மாடல்களே இடம் பெற்றிருந்தார்கள். அவளுக்கு சற்றே கருத்த உடல்களை வரைவதில் தீராத விருப்பம் உண்டு. தனது ஓவியத்துக்கான மாடலாகக் கூட கருப்பாக இருப்பவர்களைத் தான் தேர்ந்தெடுப்பாள். ஆனால் அவள் வெளுப்புக்கும் அதிகமானவள். அவர்களது குடும்பத்திலேயே அவள் தான் வெளுப்பு என அவளது பாட்டிக்கு மாளாத பெருமை. ஆனால் கவினுக்கு அது குறித்து பெருத்த வருத்தம் இருந்தது. அவளைப் பொருத்தவரை கருப்பாக இருக்கும் உடல்கள், ஓவியங்களை இன்னும் அழகாக்குகின்றன. வடநாட்டு கோவில்களிலிருக்கும் வெண்ணிற பளிங்குச் சிலைகளில் இருப்பதை விட தென்னாட்டின் கருத்த கடவுற்சிலைகளில் தெய்வாம்சம் மிளிருவதாக நம்பினாள். அவளது எண்ணங்களில் எப்போதும் கருத்த நிர்வாண உடல்கள் மிதந்து திரிந்தன.

சித்தார்த், கவினின் ஓவியங்களைக் கூர்ந்து அவதானிக்கத் துவங்கி இருந்தான். அவளது ஓவியங்களிலிருக்கும் உணர்வுகள் சட்டென அவனுக்கு பிடிபட ஆரம்பித்திருந்ததற்குக் காரணம் தனது ஓவிய ஆர்வம் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் கவினின் மீது கிளர்ந்திருக்கும் அன்பு என்பதையும் அவன் உணரத் துவங்கினான். சித்தார்த் தன்னிடம் நடந்து கொண்ட பாங்கு, தனது ஓவியங்களின்பால் கொண்ட ஆர்வம், தன்னுடன் எந்தவித பாசாங்குமின்றி செய்யும் உரையாடல் ஆகியவை கவினுக்கும் சித்தார்த்தின் மீது அன்பைக் கிளரச் செய்திருந்தது. ஆனாலும் அதை வெளிப்படுத்த பெரிதாக அவர்கள் மெனக்கெடவில்லை.

கவினின் ஓவியங்களில் இருக்கும் பெண்ணியத்தையும், அடித்தட்டு மக்களின் உணர்வுகளைத் துல்லியமாக வெளிப்படுத்தும் பாங்கையும் சித்தார்த் வெகுவாகப் பாராட்டுவான். முற்போக்கு எண்ணங்களை முன்னிறுத்தியே அவனது பேச்சு இருக்கும். அதை கவின் மிகவும் ரசிக்க ஆரம்பித்திருந்தாள். இருவருக்குமான இடைவெளி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருந்தது. இருவரும் தங்களின் ஓய்வு நேரங்களை பேசித் தீர்த்துக் கொண்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக, பேசுவதற்காகவே நேரத்தை ஒதுக்கிக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தார்கள்.

கருத்த உடல்களை மட்டுமே வரைவதற்கான காரணத்தை ஒரு நாள் சித்தார்த் கேட்டபோது, தனக்கு அது தான் முழுமையானதாகப் புரிபடுவதாகவும், வெளுத்த உடல்களில் தன்னுடைய தூரிகையால் சுலபமாகப் பயணிக்க முடிவதில்லை என்றும் கூறினாள். இதுவும் ஒரு நிற வெறிதான் என சித்தார்த் கூறியபோது தான் வெண்மையை எப்போதும் கீழானதாகக் காட்டவில்லை என்பதையும் தன்னுடைய படங்களின் பின்புலம் எப்போதும் வெண்மையாகவே இருப்பதையும் தெளிவாக்கினாள். அதன்பிறகு அவர்களுக்கிடையேயான உரையாடல் இப்படியாக இருந்தது.

"ஏன் வெள்ளையா மாடல்கள் யாரும் கிடைக்கலியா?"

"அப்படி இல்ல. எனக்கு அவங்ககிட்ட வரையற அளவுக்கு பெருசா எதுவும் இல்லைன்னு தோணுது. அவங்க அக்குள கூட வெள்ளையா வரையணும். டிரமாடிக்கா இருக்கும். அது எனக்கு ரொம்ப வெறுமையா தோணுது."

"நீ நல்லா கலரா தானே இருக்க கவின்."

"அதான் இது வரைக்கும் நான் என்ன வரஞ்சுக்கல."

"அப்போ வெள்ளையா யாரையும் வரைய மாட்டியா."

"அப்பிடி தீர்மானமா இல்ல. எனக்கு தோணினா வரைவேன்."

"நான் கூட வெள்ளை தான் கவின். வரைய மாட்டியா?"

கவின் களுக்கென்று சிரித்து விட்டாள்

"நீ என் முன்னாடி நியூடா உட்காரப் போறியா சித்தார்த்?"

"ஜோக்ஸ் அபார்ட். ஆன்சர் மீ."

"உன் உடம்பு ரொம்ப பெர்பெக்ட். யவனர்கள் மாதிரி. கொஞ்சம் கருப்பா இருந்தா ரசிச்சு வரையலாம்."

"என்ன கருப்பா கற்பனை பண்ணிட்டு வரையலாம்ல."

"ஆர் யூ சீரியஸ்?"

"ஒய் நாட்?. உன்னோட பெயின்டிங்ஸ்ல இருக்கற அந்த உணர்வு வெளிப்பாட்ட நான் வேற எங்கயும் ஃபீல் பண்ணினது இல்ல. அந்த பெயிண்டிங்ல என் உடம்பு எப்பிடி எக்ஸ்போஸ் ஆகுதுன்னு நான் பாக்கணும் கவின்."

சற்று நேரம் அமைதியாக இருந்தாள் கவின்.

"என்னை எப்பிடி நியூடா பாக்கறதுன்னு யோசிக்கிறியா?"

நிமிர்ந்து பார்த்த கவின் நிதானமாகச் சொன்னாள்

"சீ சித்தார்த். இதுவரைக்கும் நூத்துக்கணக்கான உடம்புகள நிர்வாணமாப் பாத்துட்டேன். எல்லா ஏஜ் குரூப், ஆண்கள், பெண்கள், திருநங்கை, திருநம்பி, இப்பிடி எல்லாமே. என் பிரஷ்ஷோட கண்ணு தொறந்துச்சுன்னா என் கண்ணு தானா மூடிறும். யாரோட உடம்பும் எனக்கு மாடல்ங்கறத தாண்டி வேற எதுவாவும் தெரியாது, ஆனா.."

"என்ன ஆனா?"

"எனக்கு பாசாங்கு பிடிக்கல. என்னால உன்ன மாடலா மட்டுமே பார்க்க முடியாது. உன் உடம்ப என்னோட பிரஷ்ஷ விட என் கண்ணு பார்க்க ஆரம்பிச்சுரும். அது ஒரு நல்ல ஓவியமா இருக்காது."

சித்தார்த் பெருமூச்சு விட்டான். இருவருக்குமிடையில் இருந்த மவுனம் எழுந்திருத்த போது தொடர்ந்தான்.

"உன்னோட மனசுல நான் எப்பிடி பதிவாகி இருக்கேன்னு பார்க்க ஆசப்பட்டேன் கவின். உனக்கு இஷ்டமில்லாட்டி இதோட விட்டுருவோம் " என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்

"கொஞ்சம் தயக்கமா இருக்கு சித்தார்த்.. என்னோட மோசமான ஓவியமா அது இருக்கணும்னு நீ நெனைக்கிறியா?"

"இப்படி செய்யலாமா"

"எப்பிடி?"

"என்னோட போட்டோ அனுப்பறேன். அத மாடலா வெச்சுக்க."

கவின் சிரித்தாள். "நான் இதுவரைக்கும் லைவ் மாடல் தான் யூஸ் பண்ணி இருக்கேன். சரியா வரும்னு தோணல."

"எல்லா ஆங்கிள்ளையும் எடுத்து அனுப்பறேன். என் உடம்ப உன்கிட்ட காட்டுறதுல எனக்கு எந்த நெருடலும் இல்ல."

கவினுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு நரம்பு சுண்டியது.

"மச் பெட்டர். ஆனா உன்னை மாதிரி வெள்ளையா இருக்காது. உன்ன எனக்கு பிடிச்ச டஸ்கியா தான் வரைவேன்."

"ஷ்யூர். உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கறதுல எனக்கு எந்த இஸ்யூவும் இல்ல."

அடுத்த சில நிமிடங்களில் வாட்சாப்பில் அவனது நிர்வாணப் படங்களை அனுப்பி இருந்தான் சித்தார்த். கவினுக்கு அவற்றை ஒரு மாடலெனக் கருதிப் பார்க்க முடியவில்லை. அவளது உடம்பில் உஷ்ணம் ஏறியது. முகம் சிவந்து உடல் மெலிதாக நடுங்கியது. கண்கள் விரிய படங்களைப் பார்த்தவளின் உதடுகள் "அழகன்" என அனிச்சையாக முனகியது.

முழுதாக இரண்டு நாட்களில் ஓவியத்தை கவின் முடித்து விட்டாள். வேறெந்த ஓவியத்தையும் விட உயிரோட்டமாக இது இருப்பதாக அவளுக்குப் பட்டது. சாண்டில்யனின் கதைகளில் வரும் சற்றே சாம்பல் பூசிய கருமை நிற யவனர்களைப் போல சித்தார்த் பேரழகனாக இருந்தான். கண்டிப்பாக இதை சித்தார்த் கொண்டாடுவான் என்பது கவினுக்குத் தெரியும். வாட்ஸாப்பைத் திறந்து அவன் அனுப்பிய படங்களை அழிக்க எத்தனித்தவள் சற்று நேரம் அதைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அதை அழிக்காமலே போனை வைத்தாள்.

தொலைபேசியில் உரையாடும்போது அவனது வார்த்தைகளில் கசியும் காதலை கவினால் கணிக்க முடிந்தது. அவன் தனது எண்ணங்களை ஆக்கிரமித்திருந்ததை கவின் உணர்ந்து கொண்டாள். இந்த ஓவியத்தை வெறுமனே அவனிடம் நீட்டுவது அவளுக்கு உவப்பாக இல்லை. அது ஒரு சிறப்பான தருணமாக இருக்க வேண்டும் எனக் கருதினாள். எல்லா உடல்களையும் தான் ஓவியத்துக்கான மாடலாக பார்க்கவில்லை என்பதையும், தன்னுடைய மற்றும் அவனின் உடல்கள் தனித்துவமானவை, தனது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டவை என்பதையும் அவனுக்கு உணர்த்த வேண்டும் என நினைத்தாள். அதற்கான காலம் வரும் வரை பொறுத்திருக்க முடிவு செய்தவள் சித்தார்த்திடம் இன்னும் தான் ஓவியத்தை வரைந்து முடிக்கவில்லை என்று சொல்லி வைத்தாள்.

கொரோனா காலம் முடிவடையாத சூழலில் அவர்கள் சந்திப்பதற்கான காலம் உடனே வாய்க்கவில்லை. ஓவியங்களால் ஆன விழிப்புணர்வுப் படமொன்றில் பணியாற்ற அரசாங்கத்தால் கவின் அழைக்கப்பட்ட போது அதை விளம்பரப்படுத்த ஊடகவியல் துறையிலிருந்து சித்தார்த்தும் அழைக்கப் பட்டிருந்தான். கவினுக்கு அந்த ஓவியத்தை அவனிடம் கொடுப்பதற்கு அதுதான் தகுந்த தருணம் என்பது உறைத்தது. ஆனால் அதை அரங்கில் தர முடியாது. எங்கே என யோசித்தவளுக்கு மதுவின் நினைவு வந்தது. அவளும் ஓவியக் கல்லூரியில் தன்னுடன் படித்துவிட்டு சித்தார்த் பணிபுரியும் அதே தொலைக்காட்சியில் கிராபிக்ஸ் பிரிவில் பணிபுரிபவள். தென்மாவட்டத்தைச் சேர்ந்தவள். சென்னையில் அபார்ட்மென்ட் எடுத்து தனியாக தங்கி இருப்பவள். அவள் வீட்டுக்கு சித்தார்த்தை வரச் சொல்லி அங்கு வைத்து ஓவியத்தைக் கொடுத்தால் என்ன? தனிமையும், தானும், சித்தார்த்தும், அந்த ஓவியமும். கவின் நிறைவாக உணர்ந்தாள். “யூ வில் கெட் அ ஸ்பெஷல் கிப்ஃட் பிரம் மீ டுமாரோ", என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்திக்கு "ஐ நோ. இட்ஸ் பெயின்டிங்" என அவன் அனுப்பிய பதிலுக்கு "நோ. சம்திங் மோர் தான் தட்", என பதிலனுப்பியவளின் சிரிப்பில் வெட்கம் பிதுங்கி நின்றது.

அந்த தினத்தில் சற்றே அக்கறையுடன் தன்னை அலங்கரித்துக் கொண்டவள் ஃபிரேம் செய்யப்பட்ட ஓவியத்தை கிஃப்ட் தாளில் சுற்றி எடுத்துக் கொண்டு மதுவின் வீட்டை அடைந்தாள். அவளிடம் சித்தார்த்தை அவளது அபார்ட்மெண்டுக்கு அழைத்து வர அனுமதி கேட்பதில் கவினுக்கு எந்த சங்கடமும் இல்லை. சொன்ன உடனே இன்னொரு சாவியை எடுத்து நீட்டினாள். இருவரும் குறும்பட வேலைகள் நடக்கும் இடத்துக்கு சென்றிருந்த போது அங்கு ஏற்கனவே சித்தார்த் வந்து விட்டிருந்தான்.

"எங்க என்னோட ஸ்பெஷல் கிப்ட், எங்கே பெயிண்டிங்", என ஆர்வம் காட்டியவனிடம் "பொறப்பா பொறு", என வேடிக்கை செய்தவள் பட வேலைகளில் மூழ்கிப் போனாள். ஒரே அலுவலகம் என்பதால் சித்தார்த்தும் மதுவும் இயல்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். இடையிடையே சித்தார்த்தைப் பார்த்தபோது அவனும் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அவன் கண்ணில் வழிந்த காதலையும் கவினால் உணர முடிந்தது.

மதிய உணவுக்காக ஏதோ ஃபைவ் ஸ்டார் ஓட்டலிலிருந்து உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. பப்ஃபே சிஸ்டம். சித்தார்த் கவினை சாப்பிட அழைத்துச் சென்றான். மது தன்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க இருவரும் தட்டுகளை எடுத்துக் கொண்டு உணவு மேசைக்கு சென்றார்கள். மட்டன் பிரியாணி, சிக்கன் மஞ்சூரியன் என்று தனது தட்டை நிரப்பியவன் பின்னால் வந்த கவினைத் தேடிய போது அவள் எதையோ தட்டில் எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். சித்தார்த் அவளருகே வந்த பார்த்த போது அந்த உணவு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் "பீஃப் ஸ்டீக்" என எழுதி ஒட்டப்பட்டிருந்தது.

"கவின்.. என்னது இது."

"என்ன?

"இதையா சாப்பிடுற?"

"ஏன்? என்ன? செம்ம டேஸ்ட்டி. பீஃப் ஸ்டீக். அண்டர்கட்னு சொல்லுவாங்க.. செம்ம ஜூஸி. ட்ரை பண்றியா?"

சித்தார்த்தின் முகம் போன போக்கு கவினுக்கு வித்தியாசமாக இருந்தது.

எதுவும் பேசாமல் சித்தார்த் அருகிலிருந்த டேபிளில் அமர்ந்தான். குழப்பத்துடன் அவனுக்கு அருகிலிருந்த சேரில் அமர்ந்த கவின் "என்ன ஆச்சு சித்தார்த்" என்றாள்.

"ஒண்ணுமில்ல" என்றவன் வார்த்தையில் முதன் முதலாக பாசாங்குத்தனம் தெரிந்தது. அதற்கான காரணத்தை கவினால் விளங்கிக் கொள்ள முடிந்தது.

"நீ நான்வெஜ் சாப்பிடுவல்ல.."

"சாப்பிடுவேன், ஆனா பீஃப் இல்ல"

அவனது குரலில் தெரித்த கேலி கவினுக்குள் சரேலென கத்தியை இறக்கியது. அவள் ஏதோ பேச வாயெடுப்பதற்குள் "கொஞ்சம் இரு வந்தர்றேன்", என்றவன் சரேலென எழுந்து மது இருந்த திசையில் சென்று அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அருகிலிருந்த அறைக்குச் சென்றான்.

கவினுக்கு சித்தார்த்தின் நடத்தையில் இருந்த மாறுபாட்டை உணர்ந்து கொள்ள முடிந்தது. தன்னை பதில் பேச விடாமல் சரேலென்று அவன் எழுந்து சென்ற விதம் சட்டென அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும் நிதானமாக இருந்தாள். வெகு நேரம் ஆகியும் அவன் வராததால் அவர்கள் சென்ற அறை நோக்கி நடந்தவள் கதவைச் சமீபித்ததும் அவர்களின் குரல் கேட்டது. தயக்கத்துடன் அங்கேயே நின்றாள்.

"நீயாச்சும் சொல்லி இருக்கலாம்ல." இது சித்தார்த்தின் குரல்.

"நீங்க கேட்டிருந்தா சொல்லி இருப்பேன்." இது மது.

"வெள்ளையா இருக்கா.. நல்லா டேலண்டோடவும் இருக்கா..அதான் வேற ஆளுங்கன்னு நெனச்சு பழகிட்டேன். எஸ்ஸியா அவ. ச்சைக்".

கவினுக்கு உடம்பின் மொத்த ரத்தமும் அவளது தலைக்குள் பாய்வது போல இருந்தது. அந்த அறைக்குள் நுழைந்து அவனது சட்டைக்காலரைப் பிடித்து வெளியே இழுத்து தொடைக்கு நடுவே நங்கென்று மிதிக்க வேண்டுமென ஆத்திரம் பீறிட்டது. ஆனால் தனது கோபத்தைக் காட்ட இது சரியான இடமில்லை. கவின் வந்த சுவடின்றி இருக்கைக்கு திரும்பி வந்தாள்.

மிருகமென்று தெரியாமல் இவனிடமா காதல் பூத்தது. அந்த உடலின் மீது எப்போதுமில்லாத அருவருப்பு தோன்றியது. ச்சைக் என அவன் முடித்த போது தான் வரைந்த அனைத்து ஓவியங்கள் மீதும் எச்சில் தெறித்தது போல அவள் உணர்ந்தாள். அவனை சும்மா விடக்கூடாது என மனதுக்குள் கறுவினாள். பழி வாங்கும் உணர்ச்சி அவளுக்குள் கொந்தளித்தது. என்ன செய்யலாம். இத்தனை கூட்டத்துக்கு நடுவில் அவனை அடித்தால்?. "அவனுக்கு தான் பிடிக்கலேன்றான்ல, விட்டுட்டு போம்மா" என்ற கேலிக்குரல்கள் எழக்கூடும். தான் தனிமையில் படும் அவமானத்தை அவன் எல்லோரது முன்பும் பட வேண்டும். நிதானமாக யோசித்தாள்.

என்ன செய்யலாம் இவனை? சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கான சூழலோ, சமூக அமைப்போ இங்கு இல்லை என்பது கவினுக்குத் தெரியும். அவளது உடல் வலுவோ, பணபலமோ எந்த விதத்திலும் அவளுக்கு உதவப் போவதில்லை. பெண்ணாக இருப்பதாலேயே தன்னுடைய நியாயமான கோபத்தைக் கூட சுதந்திரமாக வெளிக்காட்ட முடியாத  இறுகிப் போன சமூக அமைப்பின் மீது அவளுக்கு எரிச்சலாக வந்தது. நெற்றியைப் பிடித்துக் கொண்டு தீவிரமாக யோசித்தவளுக்கு சட்டெனச் சிக்கியது அந்தக் கண்ணி.

மிதிக்கும் கால்களை வெட்டி எறிவதில் அறம் பார்க்க வேண்டியதில்லை என்றது அவளது உள்ளுணர்வு. அதைத் தவிர அவனைத் தண்டிக்க வேறு வழியும் அவளுக்குத் தோன்றவில்லை.  "சித்தார்த் நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டுமென நீ தான் முடிவு செய்திருக்கிறாய். நான் அல்ல,” என வாய்விட்டுச் சொன்னவள், மூச்சை நன்றாக உள்ளிழுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டவள் தன்னுடைய மொபைலைத் திறந்து வாட்சப்பிலிருந்த சித்தார்த்தின் நிர்வாணப் படங்களில் தெளிவாக முகம் தெரிவதைத் தேர்வு செய்து டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினாள். #metoo என்று ஹேஸ்டாக் போட்டாள். மொபைலை கைப்பைக்குள் திணித்தவள் போர்க்கை எடுத்து பீஃப் ஸ்டீக்கை விள்ளத் துவங்கினாள்.

இறுக்கமான முகத்துடன் வந்த சித்தார்த் "சாரி கவின் கொஞ்சம் வேலை இருக்கு அப்புறம் பார்ப்போம்", எனச்சொல்லிவிட்டு திரும்பும்போது கவினுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. சிரித்தாள். பெருங்குரலெடுத்து சிரித்தாள். கலவரமாகி படக்கென சேரில் அமர்ந்து "ஹேய் என்ன இது கவின் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம" என்று சொன்ன சித்தார்த்தை கண்களில் வன்மம் தெறிக்கப் பார்த்தவள், "பீஃப் சாப்பிடுறியா மேன்.. செம்ம டேஸ்ட்டி.." என்றவாறு ஒரு துண்டுக்கறியை வாயிலிட்டு சுவைத்தவாறு சிரிக்கத் துவங்கினாள். அப்பப்பா... ஊழிக்காலச் சிரிப்பு.

- காலச்சித்தன்

Pin It