“அவர்கள் சமத்துவம் இன்மையால் உண்டாகும் எந்தத் தொந்தரவும் இன்றி அமைதியாக வாழுகிறார்கள். கடலும் பூமியும் அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்குகின்றன. அவர்களுக்கு பெரிய வீடுகள் மீதோ அல்லது வீட்டுப்பொருட்கள் மீதோ எந்தவிதமான ஆர்வமும் இல்லை. அவர்கள் மிகவும் சிறந்த சூடான காலநிலையில் ஆரோக்கியமான காற்றை அனுபவிக்கிறார்கள். எனது கருத்துப்படி அவர்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். தேவைக்கு அதிகமான எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை.”

-- பழங்குடிகளைப்பற்றி கேப்டன் ஜேம்ஸ் குக் (ஆஸ்திரேலியாவை   கண்டறிந்த மாலுமி) 

உலகின் கடைசி இசை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு அந்த இசையைப்பற்றித்தான் சொல்லப்போகிறேன்.

டார்வின் பல்கலைக்கழகத்தில் என்னோடு இணைந்து கல்விகற்கும் ஆராய்ச்சி மாணவன் டாகு. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பிராந்தியத்தில் இருக்கிறது அந்தப் பல்கலைக்கழகம். ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்களில் கலாநிதி பட்டம் பெறுவது என்பது கல்லிலே நார் உரிக்கும் வேலை. பல முதுகலை மாணவர்களை மேற்பார்வைசெய்யவேண்டும். அவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் வேலையும் பெரும்பாலும் எமது பேராசிரியரின் விடுமுறை நாட்களைப் பொறுத்து எமது தலையில் விழுந்துவிடும். டாகுவின் முதுகலைப்பட்டத்துக்கு நான் தான் மேற்பார்வையாளன். கலாநிதிப் பட்டத்துக்கு ஆராய்ச்சி செய்யும்போதே முதுகலை மாணவர்களை மேற்பார்வை செய்வது ஒரு விதமான தலைக்கனம் தருகிற வேலைதான். டாகு பூர்வக்குடியைச் சேர்ந்தவன். அவனது குடும்பத்தில், ஏன் அவனது கிராமத்திலும் கூட அவன்தான் முதல் பட்டதாரி. அசப்பில் நானும் அவனும் ஒரே சாயலில் இருப்போம். எனவே இயல்பாகவே அவனிடம் எனக்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டுப் போனது.

பிரட்பீல்ட் நீர்ப்பாசனத்திட்டம் தொடர்பாக சூழலியல் பகுப்பாய்வை டாகு முடிக்கவேண்டும். பிரட்பீல்ட் எனும் கோமகன் இந்தத் திட்டத்தை 1938 ல் முன்வைத்தார். அவரது பெயரையே வைத்துவிட்டார்கள். திட்டம் வேறொன்றும் இல்லை. வடக்கின் முக்கியமான நதிகளை உள்நோக்கித்திருப்பி வறண்ட பாலைநிலப்பகுதிகளைப் பசுமையாக மாற்றும் திட்டம்தான் அது. நீண்ட காலமாக நிராகரிக்கப்பட்ட திட்டம் தற்போது மீண்டும் அரசின் பரிசீலனைக்கு வந்திருந்தது. ஆஸ்திரேலியாவின் கணிசமான உட்பகுதிகள் மக்கள் வாழத்தகுதியற்ற மிக வறண்ட நிலங்கள். அதிகரிக்கும் குடித்தொகைக்கேற்ப நிலவளத்தை தேடவேண்டிய பொறுப்பு தற்போது அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

மிகுந்த செலவு பிடிக்கும் இந்தத்திட்டத்தில் உள்ள சூழலியல் விளைவுகள் குறித்து டாகு ஆய்வு செய்யவேண்டும். திட்ட ஆய்வு தொடங்கிய முதலே டாகுவுக்கு இந்தத்திட்டத்தின் மீது எந்தவொரு நேர்மறை எண்ணமும் இருக்கவில்லை.

"இந்த திட்டம் ஏன் இப்போது இங்கே தேவைப்படுகிறது?"

"அதிகரிக்கும் மக்களுக்கு உணவளிக்க நிலம் வேண்டும் அல்லவா?"

"எப்பிடி குடித்தொகை அதிகரிக்கிறது? குடியேற்றத்தால்தானே?"

"ஆமாம்; அதனால் என்ன?"

" நீங்கள் உண்டு கழிக்க எங்களது நிலங்களை நாங்கள் இழக்க வேண்டுமா?"

 நீங்கள் என்ற பதம் அழுத்தமாக என்னை நோக்கி வந்ததைக் கவனிக்காதவனாய் உரையாடலைத் தொடர்ந்தேன்.

"ஏற்கனவே அவை பயனற்ற பகுதிகள் அல்லவா? இதன் மூலம் அவை வளம் பெற்றால் எல்லாருக்கும் நல்லதுதானே?"

"அவை வளமற்ற நிலங்கள் என்று யார் சொன்னது? அவை மிகவும் வளமான பாலைநிலங்கள். அவைகளின் மொழியை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் இப்பிடியான முட்டாள்தனமான காரியங்களில் இறங்குகிறீர்கள்”.

பொதுவாக பாலைநிலத்துடன் உரையாடும் கலையெதுவும் எனக்குத் தெரியாது. இலங்கையைப்போன்ற வளம் பொருந்திய நாட்டில் இருந்து வந்திருக்கும் ஒரு குடியேறிக்கு இங்கேயே வாழும் பூர்வக்குடிகளின் கலை புரிவதற்கு நியாயமில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நான் விவாதத்தைத் தொடர்வதில்லை. மாறாகத் தொழிநுட்ப விடயங்களை சற்றுத்தூக்கலாக கூறி டாகுவைச் சற்று அடக்கிவைத்துக்கொள்வேன். என்றாலும் ஒரு வெள்ளைச்சீமானின் நிலையில் வைத்து என்னை டாகு பேசியது எனக்குச் சிறிய சந்தோசத்தை கொடுத்தது உண்மைதான்.

சென்ற ஆண்டு ஜூலை மாதம் என்னை டாகு உளூரு மலைக்கு வரும்படி அழைத்தான். அந்த மலைக்கு பக்கத்தில்தான் ஏறத்தாழ 60 மைல் தொலைவில் டாகுவின் பூர்விகக்கிராமம் இருந்தது. உளூரு மலையில் இருந்து 450 மைல் தொலைவில் இருக்கிறது அலிஸ் நீரூற்று.  உளூரு மலை பூர்வக்குடிகளின் மிகப்புனிதமான பிரதேசம். அங்கிருந்துதான் அனைத்து உயிர்களும் உருவாகின்றன என்பது அவர்களின் நம்பிக்கை. மிகுந்த வறண்ட நிலப்பகுதியில் மிகவும் பரந்து விரிந்த சுற்றளவில் செம்மண் நிறத்தில் காட்சி தருகிறது உளூரு. அதிகாலையில் சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் உளூரு மலையும் சூழவுள்ள வானமும் காட்டும் மாயாஜாலம் ஏற்படுத்தும் கிளர்ச்சி சொல்லி மாளாது.

பொதுவாக உளூரு மலைப்பிரதேசம் பாலையின் காலநிலை கொண்டது. யாழ்ப்பாணத்தின் அக்கினி வெயிலில் சுற்றித்திரிந்த தைரியத்தில் உளூருவை நான் குறைத்து மதிப்பிட்டுவிட்டேன். பகலில் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றாலும் இரவில் குளிர் வாட்டியெடுத்தது. மிதமான காலநிலை என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. பொதுவாக யாழ்ப்பாணத்தில் சனங்களின் குணத்தை 'அடித்தால் மொட்டை போட்டால் குடும்பி' என்பார்கள். நிச்சயமாக யாழ்பாணத்துச்சனங்களும் முதன்முதலில் உளூரு மலையிலிருந்துதான் உருவாகியிருக்கவேண்டும். சந்தேகமேயில்லை.

அன்று இரவு நான் டாகுவுடன் மலையிலிருந்து ஒரு அரைக்கிலோமீட்டர் தூரத்தில் கூடாரம் அடித்துத் தங்கியிருந்தேன். இரவு விருந்தாக டாகு எனக்கு கங்காருக்கறியை சமைத்து அருமையாகப் பரிமாறியிருந்தான். கூடாரத்துக்கு வெளியே நாம் இருவரும் மட்டுமே உட்கார்ந்திருந்தோம். எனது கையில் சிறிதளவு Champain இருந்தது. மலையைச்சூழப் பதித்திருந்த வண்ண வண்ண விளக்குகள் ஊதா, பச்சை, சிவப்பு என மாறிமாறி ஒளிர்ந்து அற்புதமாகக் காட்சியளித்தன. வானில் நட்சத்திரங்கள் மிகத்தெளிவாகத் தெரிந்தன. அதேநேரம் புற ஊதாக்கதிர்களின் வீச்சு காரணமாக வானம் அந்த கும்மிருட்டில் இடையிடையே வண்ணக்கோலங்கள் போட்டுக்கொண்டிருந்தது. மருந்துக்கும் காற்று இல்லை. குளிர் மெல்ல மெல்ல தோலை ஊடுருவத்தொடங்கியிருந்தது. அந்த மந்தகாசமான பொழுதில் டாகு சில நிமிடங்கள் லயித்து பேச்சற்று கிடந்தான். பின்னர் மெதுவாக தனது கதையை ஆரம்பித்தான்.

02

எனது முன்னோர்கள் இங்கே 40000 ஆண்டுகளாக வாழுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் நான் என் குடும்பத்தாரோடு இங்கே மலைக்கு வருவேன். அப்போது இந்தப்பிரதேசம் இப்போது இருப்பதுபோல சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் அல்ல. எனது குடும்பத்தினர் ஒட்டகங்களில் வருவார்கள். இங்கே மூன்று நாட்கள் தங்கியிருந்து எல்லாச் சடங்குகளையும் முடித்துவிட்டு பின்னர் அதே ஒட்டகங்களில் வீடு திரும்புவோம். அந்தி சாய்ந்ததும் தொடங்கும் கொண்டாட்டங்கள் நள்ளிரவு தாண்டியும் தொடரும். நிச்சயமாக கங்காருக்கறி விருந்தும் ஒட்டகப்பாலும் முக்கியமாகப் பரிமாறப்படும். ஏராளமான சடங்குகள் நடக்கும். அவற்றில் முக்கியமானது மூன்றாவது கடைசி நாளில் நள்ளிரவில் நடக்கும் சடங்கு.

“நாங்கள் வாசிக்கும் காற்று வாத்தியத்தை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா?”

“Didgeridoo தானே”

"ஆமாம் அதேதான்"

"அந்த வாத்தியத்தில் ஒன்று இரண்டு மூன்று என்று பத்து வரையான வாசிப்பு முறைகள் இருக்கிறன".

"நீ அன்று எனக்கு வாசித்துக்காட்டினாயே?"

"ஆமாம் அதைவிட அதிகமாகக்கூட வாசிக்கலாம். ஆனால் அது மிகவும் கடினம்"

மூன்றாம் நாள் நள்ளிரவில் அதை வசிக்கும் போது ஒரு சிறப்புண்டு. வழமையாக முதலாவது வாசிப்பைத்தான் தொடங்குவது வழக்கம். ஆனால் நள்ளிரவில் இங்கே வாசிக்கும்போது ஐந்தாவது உச்சத்தில் வாசிப்பை தொடங்குவோம்.

" ஏன் அப்பிடி? ஏதாவது சிறப்பான காரணம் உண்டா?"

"நிச்சயமாக; ஐந்தாவது உச்சத்தில் வாசிக்கும்போது பஞ்சபூதங்களையும் நாம் வழிபட்டு அவற்றை உற்பத்திக்கு தயாராக்க வேண்டும்"

அதன்பின்னர் ஆதித்தாயை தூக்கத்தில் இருந்து எழுப்பவேண்டும். ஏனென்றால் ஆதிதாய்த்தான் இந்த உயிர்களையெல்லாம் படைக்கிறாள். அவள் இந்த மலையில் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறாள். அவளை எழுப்புவதற்காக முதலாவது உச்சத்தில் வாசிக்கவேண்டும். அதன் பின்னர்தான் மிக முக்கிய விடயம் இடம்பெறும். ஆதித்தாய் உறக்கம் கலைந்து உயிர்களை படைக்கதுவங்குவாள். அப்போது வாத்தியத்தை மிக நிசப்தமாக 60 நொடிகளுக்கு வைத்திருக்கவேண்டும். அந்த வேளையில் எவரும் மறந்தும் பேசிவிடமாட்டார்கள்.

படைப்பு முடிந்ததும் பத்தாவது உச்சத்தில் வாசிக்கவேண்டும். இந்த உலகின் உயிர்கள் பிறந்த பின்னர் அதைக்கொண்டாடுவதற்கும் ஆதித்தாய்க்கு நன்றிசெலுத்துவதற்கும் தான் அந்த வாசிப்பு.

இங்கே இந்த வாசிப்பை நள்ளிரவில் செய்யவேண்டும். நான் சொன்ன அதேமுறையில், அதே இசைவடிவத்தில்தான் வாசிக்கவேண்டும். இதுதான் ஒரு பூர்வக்குடி தனது வாழ்நாளில் செய்யும் மிகப்புனிதமான சேவை. இதனால் தான் இந்த உலகில் உயிர்கள் நீடித்திருக்கின்றன.

"ஆமாம் இது மனிதர்களைப்படைக்கவா அல்லது எல்லா உயிர்களையும் படைக்கவா?"

எனது கேள்வி டாகுவுக்கு எரிச்சலை ஊட்டியிருக்கவேண்டும். சிறிது நேரம் என்னை வெறித்துப்பார்த்துவிட்டு சொன்னான்.

"விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் மனிதன் தேவையில்லை. நமக்குத்தான் அவை அவசியம் தேவை."  

நான் கூறப்போகும் சம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. அப்போது நான் ஏன் குடும்பத்தினருடன் வழமை போல இந்த மலைக்கு வந்திருந்தேன். எங்கள் கூட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட இருநூறு பேருக்குமேல் வந்திருந்தோம். அவர்களில் வயது மூத்தவர் எனது கொள்ளுத்தாத்தா. நூறு வயதுக்குமேல் இருக்கும். வழமைபோல இரண்டுநாட்களும் விருந்தும் சடங்குகளும் கொண்டாட்டமுமாக கடந்தன. மூன்றாம் நாள் நள்ளிரவில் கொள்ளுத்தாத்தா மிகவும் அலங்கரித்துக்கொண்டு வந்தார். உடல் முழுவதும் வெண்களிமண்ணால் கோலமிட்டிருந்தார். முகத்தில் சூரியன் உதிப்பதுபோல வெண்களிமண்ணால் நாங்கள் வரைவது வழக்கம். நாம் இருக்கும் பகுதி சூரியன் உதிக்கும் கிழக்குப்பகுதி என்பதால் இந்த முறையில் வரைவோம்.

அவர் நள்ளிரவில் எம்மிடையே பேசத்துவங்கினார்.

"இதோ பாருங்கள் பிள்ளைகளே நாம் 40000 ஆண்டுகளாக இங்கே அளப்பரிய ஆதித்தாயின் கருணையினால் மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்திருக்கிறோம். எமக்கு என்று எந்த குறையும் இருந்ததில்லை. சஞ்சலங்கள் இருந்ததில்லை. எமது அரிய தோழர்களான கங்காரு, ஒட்டகம், பாம்பு, திமிங்கிலம் ஆகியவற்றுடன் நாமும் மிகவும் சிறப்பான வாழ்க்கை வாழ்த்து வந்திருக்கிறோம். எமக்கு எந்த எதிரிகளும் இருந்ததில்லை. இந்த கருணை மிகுந்த மலையும் அலிஸ் சுனையும் நமது உயிர் நாடிகள். இவைதான் நம்மை இந்த பூவுலகில் நிலையாக வைத்திருக்கின்றன. ஆனால் கடந்த பலகாலமாக எனது மனம் மீளாத சஞ்சலத்தில் இருக்கிறது. நமது ஆதித்தாய் வழமைக்கு மாறாக மிக நீண்ட தூக்கத்தில் இருக்கிறாள். அவளை எம்மால் பலகாலமாக எழுப்பவே முடியவில்லை. அவளுக்கு நாம் எதோ தீங்கு செய்துவிட்டோம். அவளின் மண்ணை நாம் காக்க மறந்துவிட்டோம். அதனால் அவளின் சாபத்துக்கு நாம் ஆளாகிவிட்டோம். இன்று நான் இசைக்கும் இந்த புனிதமான இசை இறுதியாக இருக்கும். கவனியுங்கள் குழந்தைகளே! எதிர்காலத்தில் இந்த மலைக்கு இதைவிட மிக அதிகம் பேர் வருவார்கள்; போவார்கள். இந்தப்பிராந்தியம் முழுவதும் விதவிதமான வாத்தியங்கள் நள்ளிரவில் ஒலிக்கும். ஆனால் அவர்களால் ஆதித்தாயை எழுப்பமுடியாது. அவள் இனி நிம்மதியாக தூங்கட்டும். எனவே இந்த இசையை இதோடு முடித்துவிடுகிறேன்."

தாத்தா ஐந்தாவது உச்சத்தில் தொடக்கி பின்னர் முதலாவது உச்சத்தில் நீண்ட நேரம் வாசித்தார். பின்னர் 60 நொடிகளுக்கு நெடிய அமைதி. நாங்கள் எல்லோரும் விக்கித்துப்போய் நின்றோம். பின்னர் பத்தாவது உச்சத்தில் மிக வேகமாக நீண்ட நேரம் வாசித்தார். அவர் இசையை நிறுத்தியபோது அவரின் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.

“அன்றைக்கு பின்னர் நாம் எவரும் வருடாந்தம் இங்கே வருவதில்லை. இப்போதுதான் உன்னோடு வந்திருக்கிறேன்”. டாகு நெகிழ்ந்து கண்ணீர் விட்டு நான் இதுவரை பார்த்ததேயில்லை.

03                                                                                                                                                                           

சிட்னியில் வசந்தகாலம் அருமையாக இருக்கும். எனது தோழி அலெக்ஸ் சிட்னியை சேர்ந்தவள். ஆய்வு கூடங்களில் படுத்துறங்கிப் பொழுதைக் கழியாமல் தன்னுடன் விடுமுறைக்கு வரும்படி இழுத்துக்கொண்டு வந்துவிட்டாள். அவளுடன் ஊர் சுற்றுவது என்பது மிக அற்புதமான அனுபவம். புகையிர வண்டியில் பயணம் செய்யும்போது எல்லா விடயங்களையும் மிக அழகாக தலையை ஆட்டி ஆட்டி சொல்லிக் கொண்டிருப்பாள். அதனால் பொதுவாக அவள் சொல்லும் விடயங்களில் எனக்கு மனம் படிவதில்லை. நகரத்துக்கு அண்மையில் உள்ள விடுதில்தான் இருவரும் தங்கியிருக்கிறோம். மாலை நேரத்தில் கடலோரமாக அலெஸ்சுடன் சேர்ந்து நடப்பது ஒரு சுகானுபவம். அன்று இருவரும் ஒபேரா இல்லத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். அந்திசாயும் நேரமாகிவிட்டிருந்தது.

"உனக்குத் தெரியுமா இந்தநகரம் முதன்முதலில் குற்றவாளிகளால் நிர்மாணிக்கப்பட்டது"

"அப்பிடியா?"

"ஆமாம்; பிரித்தானியாவில் இருந்து பல குற்றவாளிகளை கப்பலில் ஏற்றிக்கொண்டு வந்து அவர்களில் உழைப்பில்தான் இந்த நகரமே ஆரம்பத்தில் உருவானது. எனது கொள்ளுத்தாத்தா லண்டனில் திருடனாக இருந்தாராம். அவரை முதலில் கப்பலில் ஏற்றி கைவிலங்கிட்டு ஏனையோருடன் இங்கே அனுப்பிவிட்டார்களாம். அவர்களை இதோ இந்த பாலத்தில்தான் முதலில் கப்பலால் இறக்கியதும் கட்டியிருந்தார்களாம். அவரது நெஞ்சில் அவரது எண்ணையும் பச்சை குத்தியிருந்தார்கள்."

நான் குனிந்து மிகவும் வாளிப்பான அவளது மார்பகங்களை உற்று நோக்கினேன். அவள் அதை பார்த்துவிட்டு,

" ஹேய் அங்கே ஒரு இலக்கமும் பச்சை குத்தி இல்லை" என்று எனது இடுப்பில் குத்தினாள்.

அன்று சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே நடந்ததில் வெகுதூரம் வந்துவிட்டோம். திரும்பவும் ஒபேரா இல்லத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சனநடமாட்டம் பெரிதாக இல்லை. திடீர் என்று பழங்குடி வாத்தியத்தின் இசை மிக அண்மையில் கேட்கத் தொடங்கியது.

இசை ஐந்தாவது உச்சத்தில் தொடங்கியது. பின்னர் முதலாவது உச்சத்தை தொட்டது. எனக்கு உடல் மயிர்க் கூச்செறிந்தது. என்னை அறியாமலே எனது கைகள் அறுபது நொடிகளை எண்ணத் தயாராகின. ஆம் அடுத்த படியாக நீண்ட 60 நொடி நிசப்தம். பின்னர் எதிர்பார்த்ததுபோலவே பத்தாவது உச்சத்தில் எகிறியது.

ஏற்கனவே உலகில் இசைத்து முடிந்துபோன இசை. இலக்கணம் பிசகாத புனிதமான இசை வடிவம். ஆதிக்குடிகளின் அன்னையான ஆதித்தாயின் இசை. அவளது தூக்கம் கலைத்து பிரபஞ்சத்தின் உயிர்களை படைக்கும் இசை. இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியில் நின்றுபோன கடைசி இசை.

நான் விக்கித்து நின்றேன். இது எப்படிச் சாத்தியமாகும்?

வேகமாக இசை வந்த திசையை நோக்கி அலெக்ஸுடன் நடக்கத் தொடங்கினேன். ஒபேரா இல்லத்தை ஒட்டிய கடலை நோக்கிய பாலத்தில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் நீண்ட வாத்தியத்தை வைத்து இசைத்துக் கொண்டிருந்தான். முகத்திலும் உடலிலும் வெண்களி வரிவடிவங்கள். முகத்தில் சூரியன் உதிப்பதை காட்டும் வரிவடிவம். தலையில் மிக அழகான வண்ணப்பறவை ஒன்றின் சிறகுகளை செருகியிருந்தான். உளூரு மலையில் ஆதித்தாயை வழிபடும்போது அணியும் அதே வரிவடிவங்கள். மிக விஸ்தாரமாக கடைசி இசை வடிவத்தை மீண்டும் மீண்டும் இசைத்துக் கொண்டிருந்தான். நானும் அலெக்ஸும் அவனை நெருங்கினோம்.

அவனுக்கு முன்னால் நேர்த்தியாக விரிக்கப்பட்டிருந்த போர்வையில் யாரோ சிலர் டாலர்களை வீசி விட்டுப் போயிருந்தார்கள்.

- பார்த்திபன்

Pin It