nilavu
நிலவு தன் மௌனத்தின் காரணத்தால்
விம்மிக் கொண்டிருந்தது.
நதிக்கரையின் சாரல் சங்கீதம் பாடியது.
அந்த இரவில் கூட ஆற்று மணலில்
நேற்று நடந்து சென்ற பாதம் தெரிந்தது.
மௌனத்தோடு யுத்தம் கொண்டு வானத்தைப் பார்த்தேன்.
நிலவு கூட மௌனத்தின் காரணத்தால்
விம்மிக் கொண்டிருந்தது.
உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு
உள்ளங்கைகளை உரசிக்கொண்டேன் - உடல்
ரோமம் கூட உஷ்ணமாகியது.
எவ்வளவு தூரம் நடந்து வந்தேன்
என்று எனக்குத் தெரியாது.
திரும்பிப் பார்த்தேன்.
இருட்டைச் சுமந்த வெட்டவெளிக் காடு,
மனிதக் காற்று கூட வீசாத ஒரு திறந்த வெளி,
ஒரு தாக்கத்தோடு சென்ற எனது பயணத்தின் நடுவில்,
கடும் தாகம் தண்ணீர்கேட்டது எனது நாக்கு.
ச்சீ.... இறப்பவனுக்கு எதற்கு........ தண்ணீர்?
கட்டுப்படுத்திக் கொண்டேன் மனதை......
நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை
என்னால் எண்ணிப் பார்க்க முடியாது,
எனக்குத் தேவை இப்பொழுது தண்ணீர் அல்ல....
தற்கொலை.
வெகு தூரம் வந்து விட்டதால்
கால்கடுத்து நான் கலைத்துப் போய்
சாய்வாக ஓரிடத்தில் சரிந்து போனேன்.
மீண்டும் ஒருமுறை நிலவைப் பார்த்தேன்.
இப்பொழுது நிலவு தெளிவாய்ச் சிரித்தது.
எப்படி????
நிலவை மறைத்தது மேகங்கள் என்று
பிறகு தெரிந்து கொண்டேன்.
தெளிவாய்த் தெரிந்த நிலவில் தெளிவாய் ஒன்று புரிந்தது.
மலர்வதும், மடிவதும் இயற்கையின் கொடை என வாழ்க்கையின்
அர்த்தத்தைத் தூரத்திலிருந்து சொல்லிக் கொடுத்த
அந்த நிலவைப் பார்த்துத் தலைகுனிந்து சென்றேன்
வந்த வழியே........
இன்றைக்கும் நிலவைப் பார்க்கும் பொழுது
என் தலை தானாய்க் கவிழ்கிறது.
வாழ்க்கையின் அர்த்தமுள்ள பக்கத்தைத்
தீயிட்டுக் கொளுத்த நினைத்த
தீயவன் நீ என்று சுடாமல் சொன்னது அந்த நிலா.........

-பார்த்திபன்  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It