"என்னடா வேணும் உனக்கு....ஏன் இப்டி கட்டி போட்டு வெச்சிருக்க... நான் யாருன்னு....".....................

"ஆமா நீ பெரிய புடுங்கி தான்...ஆனா நான் கோடாங்கி... உன்ன மாதிரி ஆளுங்களுக்கு புடிச்சிருக்கற விருது பேயை ஓட்டணும். அதுக்கு தான்.. இது... " - பேச பேசவே ஓடி போய் கழுத்திலேயே ஒரு மிதி வைத்தான் யுத்தன்.

அந்த அறை முழுக்க பூசணம் பூத்திருந்தது. பாசம் படிந்த மழையின் ஓதத்தில் வாழ்வின் துயர நெடி வழுவழுத்தது. பகலின் கால் தெரியும் அளவுக்கு தெரிந்த ஜன்னல் வழியே இந்த நசுங்கிய பூமியை பார்ப்பது எரிச்சலாய் இருந்தது.

"என்ன என்னடா பண்ண போற...?"

"ஆமா, உன்ன ரேப் பண்றாங்க...." கெட்ட வார்த்தை தொண்டைக்குள் தடுமாறியது.

இருவரும் ஒருவரை ஒருவர் நேர் கொண்ட கண்களில் பார்த்துக் கொண்டார்கள்.

"எங்க.... ஒரு கவிதை பட்டுனு சொல்லு பார்க்கலாம்..."

கண்கள் உருள பார்த்த பார்வையை குறுக்கிட்டு...

"சொல்லு...." என்று கத்தினான் யுத்தன். வார்த்தைகளில் கத்தி சொருகப்பட்டிருந்தது.

"கவிதை... என்ன அண்ணாச்சி கடை வெளக்கெண்ணையா......உடனே வரதுக்கு...?"

"அப்புறம்.. கவிதைங்கறத ரூம் போட்டு யோசிச்சா வர வைக்கறது.....? வெளக்கெண்ணை மாதிரி தான் வழுக்கிட்டு வரணும். மூளைக்குள்ள இருந்து வழியனும். அதெல்லாம் உனக்கெப்படி தெரியும். சுய புலம்பல்களை மட்டுமே எழுதற உனக்கு எப்படி தெரியும்.....?"- டப்பில் படத்தில் கத்துவது போல கத்தினான்.

"லூசா நீ....!"

"யாரு லூசு... நானா நீயா...? தானா பூத்தா தான் பூ.... பூக்க வெச்சா அது....." யுத்தன் பேசிய அடுத்த வார்த்தையை அப்போது கடந்து போன லாரியின் சத்தம் தின்று போனது.

"லூசு மாதிரி பேசறதை விட்டு, என்ன அவுத்து விடு... என் கூட்டத்துக்கு தெரிஞ்சா உன்ன கூறு போட்ருவாங்க..."

"ஆமா பெரிய சங்க இலக்கிய கூட்டம்....? பேஸ்புக்குல வெக்கமே இல்லாம மொக்க கவிதைக்கெல்லாம் லைக் போடற மொச்சை கொட்ட கூட்டம் தான.......! அரைகுறை ட்ரெஸ் போட்ட பொம்பள போட்டோவுக்கெல்லாம் கொட்ட கொட்ட முழிச்சிகிட்டு விடிய விடிய பின்னூட்டம் எழுதற கூட்டம் தான...! பொம்பள பேர்ல எழுதினா மாஞ்சு மாஞ்சு லைக் போடற பிண்ட கூட்டம் தான. சொரணையே இல்லாம நல்லா இல்லன்னு தெரிஞ்சா கூட பழக்கத்துக்காக மாத்தி மாத்தி பாராட்டிக்கற மடச்சாம்பிராணி கூட்டம் தான...?"

" சரி நீ பெரிய இந்தியன் தான்... ஏதாவது மேடைல பேசினா கையாவது தட்டுவாங்க.. என்ன எதுக்கு ரெண்டு நாளா கட்டி போட்ருக்க.... அத சொல்லு..."

"ம்ம்ம்.. உன்ன கொல்ல......." - யுத்தனின் கண்கள் ஒரு கொலைக்கான பாவனையை சுழற்றியது.

கண்களில் நெளிந்த பயத்தை பயமாகவே தான் காட்ட முடிந்தது.

"அவுனுங்களுக்கு தான் அறிவில்ல..... தூக்கி குடுக்கறானுங்க...... இவுனுங்களுக்கும் அறிவில்ல... கை தட்டி வாழ்த்தறானுங்க...படிச்ச புத்தி தான உன்னுது.....அறிவில்ல........"- மீண்டும் சென்ற இன்னொரு லாரி அறிவில்லையாவுக்கு பின் வந்த வார்த்தையை தூக்கி போனது..

"ஒன்னும் புரியல...." என்ற வாயில் சிறு பயம் தழுதழுத்தது. இரண்டு நாட்களாக இருந்த இலக்கிய கொம்பின் சாயலை உடல் நெளியும் பெருமூச்சில் கண்கள் சிவக்கும் அகலத்தில் உணர முடிந்தது.

"அவன் பேர்ல அவார்டு... இவன் பேர்ல அவார்டு..... அதுக்கு அவார்டு....இதுக்கு அவார்டு.... தூக்குனா அவார்டு.... தொறந்தா அவார்டு......ச்சே ச்சே...... எழுதறதே அவார்டுக்குன்னு ஆக்கிடீங்களே பாவிங்களா......உங்கள கொல்லறத தவிர வேற வழி தெரியல ... தகுதி இருக்கறவன் மேடைக்கு கீழே உக்காந்து தகுதியே இல்லாதான் அவார்டு வாங்கறத எல்லாம் பாக்கறது எவ்ளோ கொடுமை தெரியுமா.....?"

யுத்தன், சுவற்றில் மாட்டியிருந்த பாரதி புகைப் படத்தை உற்று நோக்கியபடியே பற்கள் கடித்து பேசியது அந்நியன் பட விக்ரமை நினைவூட்டினாலும்... அதில் இருக்கும் நியாயத்தை, தன் காலத்தில் அங்கீகாரத்துக்கு ஏங்கிய பாரதியால் உணர முடிந்தது.

ஒருமுறை கண்கள் சிமிட்டி ஆமோதிப்பது போல தான் இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தார்.

"நான் எல்லாத்தையும் தப்பு சொல்லல..... இந்த விஷயம் வெளிய தெரியும் போது சம்பந்தப்பட்டவன் எல்லாம் குதிப்பான்ல... அவுங்கள தான் சொல்றேன். அடேய் முட்டாள்களா.....அந்த கவிதை தொகுப்புல என்ன மயிறு இருந்துச்சுன்னு.. அவ்ளோ பெரிய அவார்ட தூக்கி குடுத்தீங்கன்னுதான் கேக்கறேன்.... தகுதி உள்ளவை தான தப்பி பிழைக்கனும். தகுதி அற்றவை எப்படி தப்பி பிழைக்குது...? அப்டி பொழைக்க வைக்கற கூறுகெட்ட போலி இலக்கிய சமூகத்தை ஒரு நல்ல கவிதை எழுதினவன் கேள்வி கேப்பான். உன்ன மாதிரி புலம்பல் படிமங்கள் எல்லாம் பதில் சொல்லித்தான் ஆகணும்...."

அவார்டு வின்னர் கண்களில் கண்ணீர் அருவியாய் கொட்டியது. உடல் நடுங்க... வாய் கோணியது.

"இப்ப அழுது என்ன பிரயோஜனம். மஞ்ச துண்டை கழுத்துல மாட்டிகிட்டு மேடையேறி கோண வாய் சிரிப்ல செல்பிக்கு போஸ் குடுத்துட்டே விருது வாங்கும்போது யோசிச்சிருக்கணும். இது, வேற ஒரு நல்ல படைப்பாளிக்கு போக வேண்டியது... நமக்கு வந்திருக்கே... காலப்பிழை ஆகுமேன்னு உள்ள குத்திருக்கணும்...இலக்கியம் என்ன அரசியலா... லஞ்சம் கால் விரிச்சு ஆட. அவ்ளோ நல்லா எழுதற புத்தி இருந்தா.... இந்த தொகுப்புக்கு இந்த விருது அதிகம்னு சொல்லி மறுத்திருக்கணும். அப்டி சொல்லி இருந்தா அதுல ஒரு தன்மானம் இருக்கு. இப்டி விருதுக்கு அலையற மனநிலையை வெட்டி கூறு போட்டாதான் நல்லா எழுதறவனுக்கு தேவையான அங்கீகாரம் கிடைக்கும். அதுக்கு கொலை பண்றது தான் வழின்னா அதையும் இப்போ செஞ்சு தான் ஆகணும்.. அதுக்கு தான்.. உன்ன இங்க தூக்கிட்டு வந்தது....."

வெளியே அடிக்கும் மழையின் சாரலில் வேதாந்தம் ஒன்றுமில்லை.

"இனி மேல் தகுதி இல்லாத இலக்கியவாதிங்க... அவுங்களா முன் வந்து எனக்கு இந்த விருது தகுதி இல்ல. அதனால் வேண்டாம்னு மறுக்கணும். அத விட்டு.. எவ்ளோ ஓட்டையா இருந்தாலும் அது தான் டிசைன்னு நினைச்சுகிட்டு தலைப்பு செய்தில இடம் புடிக்க அலைய கூடாது. விருது வாங்கி ஊமை சிரிப்பு சிரிச்சிட்டு முக புத்தகத்துலயும் வாட்ஸப்புலயும் தொப்பையை எக்கி மூஞ்ச உப்பி போஸ் குடுத்தா.... நடு மண்டையில பேனாவுல குத்தியே சாவடிப்பேன்.."

....................................................!

"இலக்கியங்கறது.... லேகியம் விக்கற மாதிரியா... சொல்லு...இளம் விருதாளரே .... இலக்கியம் இவ்வாழ்வின் பதிவு. சம கால வாழ்வின் பிரதி. அதை ஒழுக்கமா பண்ணி பேர் வாங்கணும். இல்ல, குயத்தை மூடிட்டு வேற வேலையை பாக்கணும்..." -யுத்தன் பேசிக் கொண்டே இருந்தான்...."

*
கதவு மூடிய பாழடைந்த அந்த வீட்டை யாருமே கண்டு கொள்ள வாய்ப்பில்லை. காலக்கணத்தில் அந்த வீட்டு வாசலில், இருக்கும் கோபத்தையெல்லாம் ஹெல்மெட்டுக்குள் இருந்து சொட்டும் நீரில் கலந்து விட்டுக் கொண்டிருந்த வசீகரன் முகமெல்லாம் இன்றைய நாளின் தீராத படிமங்கள் அப்பி இருந்தது.

மழை ரசிக்கும் மனம் கொண்டவன் வசீகரன். அதற்காக காலை நேரத்தில் "அவிநாசி சாலை நவ இந்தியா" சிக்னலில் பைக் ரிப்பேர் ஆகி நிற்பதையெல்லாம் மன்னிக்கவே முடியாது. அத்தனை கல்லூரி பிள்ளைகளின் முன் கோமாளியை போல ஹெல்மெட்டை போட்டுக் கொண்டு கெண்டைக்கால் வரை ஓடும் சாக்கடை நீரும் கலந்த மழை நீருக்குள் சதக் பொதக் என்று தத்தி தத்தி நடப்பதையெல்லாம் எப்படி ரசிக்க முடியும்.

வசீகரனின் சமீபத்திய போராட்டம் அவனின் ஷைன் பைக் தான்.

அது எப்போது நிற்கும் எங்கு நிற்கும் எப்படி நிற்கும் என்று சொல்ல முடியாது. அதுவும் மழை நாளில் எல்லாம் மத மதவென மதி கெட்டு எங்கு வேண்டுமானாலும் நின்று விடும். இடம் பொருள் அற்ற வட்டு மண்டையை அதன் பிற்பகுதி வருடங்கள் சுமந்து கொண்டிருப்பது சீ.... என்றாகும் பின் மண்டை அரிப்பு சமாச்சாரம்.

மழையா...; இன்றோடு தன்னை மாய்த்துக் கொள்ளும் அரிப்போடு கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டிருந்தது. கனவுக்குள் நடந்து கொண்டிருந்த வசீகரன்....இந்த உலகுக்குள் முதன் முறையாக நடந்தான். மழையில் நனைந்து நைந்து ஒட்டி முக்கால் காலுக்கு பேண்ட் நகர்ந்து விட்டுருந்ததை நல்லவேளை வசீகரனின் காதலி காணவில்லை. ஓவென சாலையில் ஒப்பாரி வைத்திருப்பாள். மழையை வெறுத்த நாளாக அவன் ஷைனை தள்ளிக் கொண்டு நடக்கையில்.... கையில் யாரோ ஒருத்தியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போவது போல போவோர் வருவோர் எல்லாம் பார்த்தது அடிவயிற்றை புரட்டியது. சிறுநீர் வேறு.. வேரறுத்து விடைத்து எட்டி பார்த்துக் கொண்டிருந்தது.

அதுவும் காரில் செல்வோரெல்லாம் அவன் ஜட்டியே போடுவதில்லை என்பது போல ஈரத்துக்கு ஒட்டிய இடுப்பையே பார்த்துக் கொண்டு போனது புதிராக இருந்தது. ஜட்டி நனைந்த ஈரத்தில்... முகம் சுருங்க நடந்தவனுக்கு இந்த உலகம் ஒரு பக்கமாய் சரிவது போன்ற கற்பனை

ஹெல்மெட்டின் கண்ணாடியா...... தூக்கி நிறுத்தினாலும் அடுத்த கணம் விழுந்து கண்ணை மறைக்கிறது. அதில் வழியும் நீரை மறைக்க கணம் தாங்காமல் தடுமாறும் நிலையில் கூட்டத்தில் இருந்து ஒரு தேவதையாவது வந்து அணை கொடுத்து வாரி தூக்கி செல்வாள் என்றெல்லாம் கூட நினைக்கத் தோன்றியது. யார் மீது கோபத்தைக் காட்டுவது. வெட்கமே இல்லாமல் மறதியோடு நின்ற வண்டியை நிறுத்தி விட்டு அந்த கூட்டத்தை வெறிக்கப் பார்த்தான்.

39 முறை உதைத்த பின்னும் பிணமாகவே நிற்கும் பைக்கின் வாயிலும் வயிற்றிலும் மிதித்தான். பைக்கின் காதுக்குள் கெட்ட வார்த்தை சொல்லி கூட திட்டினான். மானம் கெட்ட பைக் அது. மறந்து போன மந்தி போல அம்மணமாய் நின்றது. அலைபேசியின் வழியாக நண்பர்கள் தான் என்ன செய்வார்கள். ஆளுக்கொரு வழி சொன்னார்கள். ஆறுதலின் நிம்மதிக்கு கனத்த மழை என்ன செய்யும். லட்சுமி மில் ராட்ச சிக்னலில் யாரையும் யாரும் அத்தனை சீக்கிரம் கண்டு பிடித்து விட முடியாது. அலைபேசியை வெளியே எடுத்தால் குளித்து குமுறி தான் அடங்கும்.

அங்கும் இங்கும் யோசித்து பின் கால் போன போக்கில் பைக் பிணத்தை தள்ளிக் கொண்டு செல்கையில் ஒருமுறை நரசீபுரத்தில் கண்ட கடவுளை போல அம்மன்குளத்தின் இறுதியில் ஒரு சிறுகடவுள் மீசையற்று தாடி மட்டும் வைத்திருந்தது. "பைக் ஹாஸ்பிட்டல்" என்று ஒர்க்ஸ்சாப் கோவிலாக தெரிந்தது.

அதனிடம் விஷயத்தை சொல்லி வாங்கும் மூச்சை சற்று சீராக்கி..." எவ்ளோ நேரம் ஆகும் கடவுளே" என்றான்.

"நீங்கள் தேநீர் அருந்தும் நேரம்...." என்றது கடவுள்.

சரி என்று நடந்து தேனீர் கடை தேடத் தொடங்க மீண்டும் சடை பிடித்த மழை குடை சாய்ந்து விழுகத் துவங்கியிருந்தது.

அதற்கு பயந்து ஒதுங்கிய வாசலின் வீட்டுக்குள் தான் இலக்கிய சண்டை கொலை வரை போய்க் கொண்டிடுக்கிறது

இனி.....

அழும் குரல்... ...அதட்டும் குரல்... கூர் கண்கள்.... ஏதோ புரிந்த கணங்கள்.

அரைவாசி சுவர் தெரிந்த ஜன்னலை மெல்ல இழுத்து முழுக்க பார்க்க.... தெறிக்க விட்ட காட்சி தத்ரூபமாக தெரிந்தது.

ஒருவன் வசனம் பேசிக்கொண்டே... எதிரே உடல் நடுங்கிய ஒரு முண்டம்.... இல்லை இல்லை.... அய்யனாரின் அருவாள் ஒன்றை தூக்க முடியாமல் தூக்கி சரியாக கழுத்தை குறி பார்த்துக் கொண்டிருக்க..... கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் வசீகரன்.

"சார்..... கடவுள் மாதிரி வந்திருக்கீங்க.. காப்பாத்துங்க....." குரல் வந்த திசைக்கு எதிரே நின்ற யுத்தன்...."இன்னைக்கு இலக்கிய பொணம் இலக்கில்லாம இன்னொன்னையும் கூட்டிட்டு போகும் போல..." முனங்கி கொண்டே வசீகரனை தாக்கத் தொடங்கினான்.

நிலைமையை உணர்ந்து கொண்டு நொடியில் தன்னை திரட்டிக் கொண்டு யுத்தனை உதைத்து தள்ளிய வசீகரன்..சடுதியில் எடுத்த முடிவில்....." உன்ன காப்பாத்தினா...என்ன தருவ" என்றான்...எதிர்பக்கம் திரும்பி.

சற்று முன் கூனி குறுகி......மழையில்..... ஷைனைத் தள்ளிக் கொண்டு வந்த காட்சி அவனுள் பொங்கி பிரவாகம் எடுத்தது. எல்லார் கண்ணிலும் ஒரு காட்சியாக தெரிந்த அவன் ஒருவர் கண்ணில் கூட பிழையாகத் தெரியவில்லை. சுயநல உலகம். அதன் போக்கில் அது சுழல்கிறது. நானும் என்....." அவன் தொண்டைக்குள் வார்த்தைகள் உருண்டன. யாரையாவது கொல்ல வேண்டும் போல இருந்தது...இன்னும் தீரவில்லை.

"சொல்..... எனக்கு என்ன தருவாய். எந்த பலனும் இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது..... இந்த உலகம் அப்படித்தான் இயங்குகிறது......சொல்... அவன் எழுவதற்குள் சொல்......." வசீகரன் குரலில் சத்தமில்லை. ஆனால் நிஜமிருந்தது.

"யோசிக்க நேரமில்லை" என்று சொல்லி, முணங்கிக் கொண்டே கழுத்தை பிடித்தபடி படுத்திருக்கும் யுத்தனின் கழுத்தில் மீண்டும் ஓங்கி ஒரு மிதி வைத்து சுருட்டினான் வசீகரன்.

"நான் இப்போ என்ன தரமுடியும்..." யோசித்துக் கொண்டே ஈன குரல் வழியும் தொண்டையில், படக்கென முத்தம் பதித்திருந்தான் வசீகரன். அதன் பிறகு அந்த பூசணம் அறையில்.... மழையின் ஓதம் வழியும் மூலைகளின் நெடி துயர்ந்த படிமங்களில் இலக்கியத்தின் வாழ்வை சூது கவ்வியது. ஷைன் கொடுத்த கோபத்தின் நிறை சமன்படுத்தப்பட்டது.

"சாவதற்கு....... இது மேல்........" என்ற, இலக்கிய வாயில் எச்சில் முத்தம் வழிந்தது.

அடுத்த 23 நிமிடங்களில்.. இலக்கிய வாழ்வுக்கு புளியகுளம் தாண்டி வழி கிடைத்தது. 70 ரூபாய்க்கு 100 ருபாய் கொடுத்து விட்டு கடவுளுக்கு நன்றி சொல்லி மீண்டும் உயிர் பெற்ற ஷைனில் அலுவலகம் நோக்கி பறந்தான் வசீகரன்.

லட்சுமி மில்ஸ் சிக்னல் வழக்கம் போல பச்சை மஞ்சள் சிவப்பில் பூத்துக் கொண்டிருந்தது. மழைக்கு இலக்கியமும் இல்லை. இலக்கணமும் இல்லை. அது நிர்வாணமாய் கொட்டிக் கொண்டே இருந்தது.

- கவிஜி

Pin It