01

நான் சிறுதீவுக்கு இருபது வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் வருகிறேன். இடைநடுவில் ஒரு மணி நேரத்தில வாற தூரத்தில் நான் இருந்தபோதும் சரி, பதினைந்து ஆண்டுகள் வெளிநாட்டில் இருந்தபோதும்    சரி ஊருக்குப் போக வேண்டும் எனும் எண்ணம் எனக்கு எப்போதும் ஏற்பட்டதேயில்லை. பொதுவாக என்னுடன் இருந்த சகாக்கள் வெளிநாட்டில் எப்போது சந்தித்துக் கொண்­­­டாலும் ஊரைப் பற்றித்தான் முதலில் கதைப்பார்கள். பெரும்பாலான நண்பர்களின் கதை ஓடியல்க்கூழோடும், பனங்கள்ளோடும், கோயில் திருவிழாவில் வேட்டைக்குப் போகிற ஐயனாருக்கு பந்தல் போட்டு, படைக்கிறதிலும்தான் முடியும். கதை தொடங்கும் போது நாம் பெரும்பாலும் பப்பில் Champain குடிச்சுக் கொண்டு இருந்திருப்போம்.

நான் வெளிநாட்டில் இருந்தபோது எனது நண்பர்களின் பிள்ளைகள் தமிழ்ப்பாடசாலை விழாக்களில், கூழ் குடித்தல், பகிர்ந்துண்ணுதல், திருவிழா க்காலங்கள் என்பன பற்றியெல்லாம் மிகத் திருத்தமான இலக்கணத் தமிழில் பேசி அசத்துவார்கள். அதைச் சொல்லும்போது பெரும்பாலான பிள்ளைகளின் முகங்களில் மெல்லிய சிலிர்ப்பு ஏற்படுவதை நான் கண்டிருக்கிறேன். ஆனால் அது உண்மையில் பிள்ளைகளின் சிலிர்ப்பல்ல. அது அவர்களின் பெற்றோரின் சிலிர்ப்பு. அவர்களின் தாய் தகப்பன் இங்கே வந்து கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டிருந்தன. அதே நேரத்தில் அவர்களின் சொந்த ஊர்களிலும் இருபது வருடங்கள் கடந்து விட்டிருக்கும்.

சிறுதீவு நான் இருந்த காலத்தில் மிக அமைதியான ஊர். ஒரே நாடுகளுக்கிடையே நேர வித்தியாசங்கள் இருப்பது போல இங்கே இருப்பது வேக வித்தியாசம். யாழ்ப்பாணத்தில் காலை ஏழுமணிக்கு கிடைக்கும் பத்திரிகை இங்கே பொதுவாக மாலையோ அல்லது அடுத்தநாள் காலையோதான் கிடைக்கும். ஜனாதிபதி பிரேமதாசா குண்டு வெடிப்பில கொல்லப்பட்டது அரைநாள் கழித்துதான் எமக்குத் தெரியவந்தது. ஜனாதிபதியின் இறுதி ஊர்வலம் தொடர்பான செய்தி எமக்கு வந்தபோது உண்மையில் அடுத்த ஜனாதிபதி பதவியேற்றிருந்தார்.

 நான் இருந்த காலத்தில் மின்சாரமே இல்லை. ஆறுமணிக்குப்பிறகு ஊர் அடங்கிவிடும். கோவில்களும் நடை சாத்தப்பட்டு விடும். அதன் பிறகு மண்ணெண்ணெய் லாந்தர் ஒளி விடத்தொடங்கும். அவற்றை விட ஒரு சில தெருநாய்களும் ஊளையிடத்தொடங்கும். ஊரிலே ஆறுமணிக்கு மேலே மிகப் பலமான நம்பிக்கைகள் உண்டு. அந்தி சாய்ந்ததன் பின்னர் ஒற்றைப் பனையடிக்கு போகக்கூடாது என்பது அவற்றுள் ஒன்று. இதை விட ஊரின் ஒதுக்குபுறமாக உள்ள குளத்தடிக்குப் போகக்கூடாது, கோவில் கொடி இறக்கம் முடிந்தவுடன் ஊர் தெருவிலே அன்று இரவிலே உலவக்கூடாது போன்றனவும் எமக்கு கண்டிப்பாகச் சொல்லித் தரப்பட்டன. இவை எல்லாவற்றிலும் எதோ ஒரு துர் தேவதையோ அல்லது பேய்களோ இரவில் குடிகொண்டு விடுமாம்.

இதை விட மிக முக்கியமாக இரு இடங்கள் இருந்தன. ஒன்று மதவடி. அங்கேதான் முன்பு இறந்த குழந்தைகளைப் புதைப்பார்களாம். அங்கு பகலில் எந்த பிரச்சினையும் இல்லை. இரவில் மதவடி ஒரு ஆபத்தான இடமாக மாறி விடும். பிரதான வீதிக்கூடாக செல்பவர்கள் மதவடியைத் தாண்டித்தான் செல்ல வேண்டும் என்பதால் இரவில் முன்பு அப்பகுதிக்குச் செல்லவே அஞ்சுவார்கள். ஒருமுறை நான் மாலை ஐந்து மணிக்கே அந்த பகுதியைக் கடக்கத்தொடங்கியபோது ஒவ்வொரு நாளும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கூடத்தில் காலை பிரார்த்தனையில் பாடமாக்கிய பாடலை உரத்துச்சொல்லிக்கொண்டு ஓடி ஓடி வந்து சேர்ந்தேன்.  மற்றோரு இடம் ஆங்கிலப்படங்களில் வரும் பேய் வீடுகளை ஒத்த மிகப்பழைய வீடு. அவ்வாறு ஒரு வீடு ஊரில் வேறு எங்கேயும் இல்லை. மிக உயரமான சுவர்கள். விசாலமான அறைகள். அந்த வீட்டில் நீண்ட நெடும்காலமாக ஒருவரும் வசிக்கவில்லை. வீட்டின் வெளிப்புறச்சுவர் முழுவதும் பாசி படர்ந்திருந்தது. அந்த வீட்டில் வெகு காலத்துக்கும் முன்னர் ஒரு குடும்பம் இருந்ததாம். அவர்கள் அனைவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்களாம். அதுவும் தெற்கு மூலையில் இருக்கும் பெரிய சாமி அறையில் அவர்களின் மூத்த பெம்பிளைப்பிள்ளை தூக்கிட்டு இறந்துபோனாளாம். ஏன் அவர்கள் தூக்கிட்டார்கள் என்பது தொடர்பில் இதுவரை எந்த தெளிவான தகவலும் எனக்கு யாரும் சொன்னதில்லை. என்றாலும் அந்த வீட்டில் இரவு நடுச்சாமத்தில் அலறல் சத்தம் கேட்பதாகவும், கதிரை மேசைகள் அடிக்கடி ஆடுவதாகவும், அந்த வீட்டுக்குச்  சற்று அருகில் இருக்கிற கிழவர் அடிக்கடி சொல்லிக்கொண்டார். அவர் கூட ஆறுமணிக்குப் பின்னர் வீட்டுக்கு வெளியே வருவதில்லை.

இரவில் நான் படுக்கும் போது தொலைவில் கேட்கும் நாயின் ஊளையிடல் சத்தம் ரத்தத்தை உறைய வைக்கும். நாய்கள் தனிமையில் இருந்தால் ஊளையிடத்தொடங்கும். ஆனால் நாய்   நள்ளிரவில் ஊளையிட்டால் கெட்ட ஆவி அண்மையில் சுற்றித்திரியுது என்றுதான் அர்த்தமாம். அவ்வாறான நேரங்களில் நான் அம்மாவுக்கு அருகில் வந்து படுத்துக்கொள்வேன். அம்மாவுக்கு அருகில் பேய்கள் ஒருபோதும் அண்டாது என்பது இன்றும் எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

02

சிறுதீவின் மேற்குப்பக்கம் கடல் எல்லையிட்டு நிற்கிறது. அந்த கடலை எங்களூரில் ஆண் கடல் என்பார்கள். அதாவது உக்கிரம் கூடிய கடல். கடல் முழுவதும் கற்பாறைகள் நிறைந்திருந்தன. விளக்கம் இல்லாமல் புதிதாகக் குளிக்க வருபவர்கள் பாறையில் வெட்டு வாங்காமல் திரும்பியதில்லை. ஊரின் வட மேற்கு பக்கம் கடலுக்கு அரைக்கிலோமீட்டர் தூரத்தில் விசாலமான பனங்கூடல். இடையிடையே கள்ளிச்செடிகளும் கற்றாளம் செடிகளும் முளைத்துக் கிடக்கும். உண்மையில் அந்த பகுதிக்குப்போவதற்கு பாதைகள் எதுவும் இல்லை. நான் அந்த பகுதியைப் பற்றி இவ்வளவு தூரம் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. அந்த பனங்கூடலின் நடுவே இருக்கிற ஒற்றைக் குடிசையில் இருக்கிறார் மலையாளபுரத்து அம்மா.

மலையாளபுரத்து அம்மாவின் சொந்தப்பேர் என்னவென்று யாருக்கும் தெரியாது. நான் ஊரில் பிறந்து வளர்ந்த இருபது ஆண்டுகளும் அங்கேதான் அவர் வசித்து வந்தார். அவரைப்பற்றி ஊரில் பலவிதமான பேச்சு இருந்தது. அவரின் சொந்த இடம் கிளிநொச்சியில் மலையாளபுரம் எனும் இடமாம்.  கிளிநொச்சியில் கமம் செய்துகொண்டிருந்த பொன்னருக்கு மலையாளபுரத்து அம்மாவில் ஒரு கண். அங்கேயே கல்யாணம் பண்ணிக்கொண்டார். இந்த கலியாணத்தில பொன்னர் அண்ணையின்ர தாய் தகப்பனுக்கு சுத்தமா விருப்பம் இல்லை. பின்னே 10 ஏக்கர் நிலத்துக்குக்சொந்தமான கமக்காரனுக்கு தன்னோட வீட்டில களை பிடுங்க வந்திட்டு சிரட்டையில் தேத்தண்ணி குடிக்கிற பெட்டை மருமகளாக முடியுமோ? வெகுண்டு போனார். பொன்னரும் மலையாளபுரத்து அம்மாவும் பொன்னரோட தாத்தாவிட ஊருக்கே வந்திட்டினும்.

மலையாளபுரத்து அம்மாதான் ஊரிலேயே கலை ஆடுறது வழக்கம். கலை ஆடும்போதே குறியும் சொல்லி ஆடுவா. எங்களூரில் ஆடுகிற கலைக்கு ஒரு விசேஷம் உண்டு. பொதுவாக காளி, வைரவர், கருப்பசாமி, ஐயனார் எண்டுதான் கலை ஆடுவது வழக்கம். ஆனால் மலையாளபுரத்து அம்மாட கலை நரசிம்மருக்கு ஆடுற கலை.  இந்த கலையில ரெண்டு விசேஷம் இருக்கு. ஒன்று இந்த கலையில சொல்லுற குறி மாறித்தான் பலிக்கும். அதாவது நடக்கும் எண்டு சொன்னா நடக்காது. இரண்டாவது மலையாளபுரத்து அம்மா பேய், சூனியம், பிசாசு, துர்தேவதை போன்றவைகளை விரட்டி விடுகிறதில பெரிய விண்ணி.  இதனால இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் பொன்னர் அம்மாவை மிகப் பவ்வியமா 'அம்மா' என்றுதான் கூப்பிடுவார். அதுவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு ஏழு மணிக்குப் பிறகு அம்மா நரசிம்மருக்கு பூசை செய்து கலை ஆடும்போது பொன்னர் ஒரு பக்தனாக மாறி அம்மாவுக்கு அடிபணிந்து சேவை செய்வார்.

எங்கட குடும்பத்தில மலையாளபுரத்து அம்மாவில் விசேஷமான பற்று. அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. நான் ஏழாம் வகுப்பு படிக்கிற போது அந்தவருசம் வயலிலே நல்ல நெல் விளைச்சல். அப்பா வீட்டுக்கு வச்சிருந்தது போக மிச்சத்தை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுபோய் கொடுத்திட்டு ஏராளமான காசக் கொண்டு வந்து வீட்டை வச்சிருந்தவர். எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். அந்த வருஷம் தான் எனக்கு புது சைக்கிள் வாங்கி தருவன் எண்டு சொன்னவர். என்னோட படிக்கிறவங்கள் எல்லாம் ஏற்கனவே சைக்கிள்ல தான் பள்ளிக்கூடம் போறவங்கள். எனக்கு மற்றவனிட்ட சைக்கிள்ல பின் கரியர்ல ஏறிப் போக வெக்கமாக இருக்கு. எப்பிடியும் இந்த வருஷம் புதுச்சைக்கிள் வந்திடும். என்ர கெட்ட காலம் முழுக்காசும் துலைச்சு போச்சு. வீட்டுக்குள்ள தான் துலஞ்சது. என்ன நாசமோ தெரியேல்ல, தேடாவண்ணம் தேடிக் களைச்சுப்போனோம். எனக்கு அழுகை அழுகையா வந்தது. மடத்தனமாக பக்கத்துவீட்டு சுதர்சன் கிட்ட எனக்குப் புதுச்சைக்கிள் வருகுது எண்டு பெருமை அடிச்சுப் போட்டன். இனி ஒரு வருஷம் வகுப்பிலே கேவலப்படுத்துவாங்கள்.

கடைசியில அம்மா மலையாளபுரத்து அம்மாகிட்ட கூட்டிக்கொண்டுப் போனவா. அப்பாவும் கூட வந்தவர். அந்த ஞாயிற்றுக்கிழமை பூசையில் பத்து தேசிப்பழங்கள் வைச்சுப் பூசை செய்துபோட்டு மலையாளபுரத்து அம்மா மூன்று தேசிக்காய்களை வெளிய எறிஞ்சா. பிறகு கடூரமான குரல்ல கலை ஆடும்போது சொன்னா.

 "நீ தேடுறது கிடைக்காது".

எனக்கு அழுகை பீறிட்டுக் கொண்டு வந்தது. பூசை முடிஞ்சு வெளிய வரும்போது பொன்னர் அண்ணா கூப்பிட்டு அப்பாட்டச் சொன்னவர் "அம்மா ஏழு தேசிக்காய் மிச்சம்வைச்சுச்சொல்லியிருக்கிறா கவலைப்படாதீங்க ஏழு நாள்ல கிடைச்சிரும்" எண்டு.

அடுத்த ஞாயிற்று கிழமை பனையோலையால பெரிய கொட்டிலை மேயிறதுக்கு அப்பா கொட்டிலைப் பிரிச்சுப் போடேக்க கொட்டில் முகட்டில் இருந்து முழுக்காசும் பொலித்தீன் பையோட வருகுது. என்ன விஷயமெண்டால் எலி இதத் தூக்கிக் கொண்டு போய் முகட்டில் ஒளிச்சி வைச்சிருக்கு. அடுத்த ஞாயிற்றுக்கிழமை நான் அப்பா அம்மாவோட போய் மலையாளபுரத்து அம்மாவுக்கு தேங்காயும், வெற்றிலை பாக்கும் தட்சணையாக் குடுத்துப் போட்டு வந்தனான்.

எங்க வீட்டில ராசன் தான் மூத்த அண்ணன். சின்ன வயசிலிருந்தே நல்லாப்படிப்பான். Advanced Level படிச்சுக் கொண்டு இருக்கேக்க அவனுக்கு எப்பிடியாவது என்ஜினீயர் ஆகவேனும் எண்டுதான் ஆசை. அவனுக்கு திடீர் என்று என்னவோ மாதிரி ஆகிவிட்டது. ஒரேயடியா உட்கார்ந்த இடத்திலேயே இருந்துவிட்டான். ஒரு இடமும் போறேல்ல. கதைக்கிறேல்ல. சில சமயங்கள்ல விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். நல்லாப் படிக்கிற பிள்ளை. அம்மாவுக்கு அழுகை அழுகையா வந்தது. ஊர்ல எல்லா சனமும் விசர் பிடிச்சுவிட்டுது என்று சொல்லிப் போட்டினம்.     

எல்லாரும் அண்ணாவைக் கூட்டிக்கொண்டு மலையாளபுரத்து அம்மாவிட்ட போனம். இப்பிடியான பூசைகளுக்கு போகேக்க கன சாமான்களும் கொண்டு போகோணும். கற்பூரம், தேங்காய், ஊதுவத்தி, தேசிக்காய், வெற்றிலை, பாக்கு எண்டு ஒரு பெரிய லிஸ்ட். அண்ணாவையும் கூட்டிக்கொண்டு அப்பாவோட சிநேகிதர் சபா மாமாவையும் கூட்டிக்கொண்டு எல்லோரும் இரவு ஆறுமணிபோல அம்மாட்டப் போனம்.  எனக்கு அந்த பகுதியில பனம் கூடலுக்கு கிட்ட நிக்கவே நடுங்கினது. கும்மிருட்டு. கொஞ்சம் தொலைவில் கடல் இரைச்சல். நான் சபா மாமாவோட கால இறுக்கக் கட்டிப்பிடிச்சுகொண்டன். 

மாமா தலையை தடவி விட்டுட்டுச் சொன்னார். "பயப்பிடாதையடா மலையாளபுரத்து அம்மாவோட இடத்தில எந்த பேயும், பிசாசும் கிட்ட நெருங்காது".

அன்றைக்கு கலை மிக உக்கிரமாக இருந்தது. நரசிம்மர் முழு அவதாரம் எடுத்து வந்திருந்தார். பூசைக்கு முதல்ல மலையாளபுரத்து அம்மா கும்பம் வைத்து எல்லா ஒழுங்கும் செய்துபோட்டா. பொன்னர் அண்ணா பக்கத்தில இருந்து எல்லாவற்றையும் பார்த்து கொண்டார். அண்ணனை முன்னால இருத்திப்போட்டு எங்களை அவரை சுற்றி ஓரமாக இருக்கச்சொன்னா. கலை ஆடத்தொடங்கியது. அன்றைக்கு மிக உக்கிரமா இருந்தா. இன்றைக்கு நரசிம்மர் அகோரமா இருக்கிறார் என்று பொன்னர் அண்ணா அப்பாட்டச் சொன்னார். அண்ணாவின்டை தலையில தேசிக்காயை வைத்து வெட்டினா. கற்பூரத்தைத் தட்டில் ஏற்றி சற்று சரிவாக பிடித்து சிறிது நேரம் அமைதியுடன் உற்று நோக்கினா அம்மா. பின்னர் பயங்கரமான கோபத்துடன் உறுமியபடி பெரிய அரிவாளை எடுத்தா. கொட்டிலை விட்டு வெளியே வந்து மிக மூர்க்கமாக பல தடவைகள் கொட்டிலைச் சுற்றி வந்தா. பின்னர் கொட்டிலைச் சூழ தேசிக்காய்களை வெட்டி கற்பூரம் ஏற்றினா. அன்று பூசை முடியும் வரை அம்மா தணியாத கோபத்துடன் இருந்தா.

"இன்று உங்களுக்கு வெளியில் இருந்து பயங்கரமான ஏவல் வந்தது. அதனால் தான் நரசிம்மர் இப்பிடிக் கோபம் கொண்டு விட்டார். இப்போது எல்லாம் போய்விட்டது" என்று பொன்னர் அண்ணை சொன்னார். 

எனக்கு கலை ஆடிமுடியும் வரை திகிலாக இருந்தது. அம்மாவோட மடியில ஒடுங்கிப்போய் உட்கார்ந்திருந்தனான். எல்லாம் முடிந்ததன் பின்னர் இவனுக்குப் பெரிய சூனியம் வைத்திருக்கிறார்கள். நரசிம்மர் எடுத்துவிடுவார். இன்னும் ஒருக்கா வந்து போனா சரியாகிவிடும் என்றார் பொன்னர் அண்ணா. அன்று அம்மாவுக்கு நாங்கள் எதுவும் கொடுக்கவில்லை.

சொன்னது போலவே இன்னும் ஒரு தடவை போய் வந்ததும் ஒரே மாதத்தில் அண்ணனுக்கு குணமாகிவிட்டது. பள்ளிக்கூடம் போகத் தொடங்கிட்டான். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சந்தோசம் தாளவில்லை. பெரிய முறை செய்ய தட்சணையுடன் போனார்கள். ஆனால் மலையாளபுரத்தம்மா எதுவும் வாங்கவில்லை. அன்றில் இருந்து எங்கள் குடும்பத்துக்கு அம்மாதான் குல தெய்வம்.

03

ஊருக்கு வந்து கால் பட்டதும் எனக்கும் மீண்டும் இளமை திரும்பியது. மிக மெதுவாக வீடு நோக்கி நடக்க தொடங்கினேன். ஓரளவுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள்தான் என்றாலும் மனது அவற்றை ஏற்க மறுத்தது. நானும் என்னோட வகுப்பு பெடியன்களும் மழை காலத்தில நீந்தி விளையாடின குளம் இருந்த இடமே தெரியவில்லை. அன்று எதுவும் இல்லாமல் வெறும் மரத்தடியில் இருந்த விநாயகர் இப்போது பெரிய ஆலயத்துக்குள் குடிபெயர்ந்திருந்தார். பிரதான வீதி தார் ரோட்டாக மாறிவிட்டிருந்தது. முக்கியமாக இருப்பதுநான்கு மணிநேர மின்சாரம் வந்திருந்தது. முன்புபோல யாரவது பயணத்தால் வந்தால் வீட்டுக்கு வெளியே வந்து விடுப்புப் பார்க்கும் மனிதர்கள் எவரையும் காணவில்லை. ஊரில் இருந்த ஒரு பகுதியினர் தொலைக்காட்சி தொடர்களில் மூழ்கியிருந்தனர். ஏனையோர் அதே வேலையை வெளிநாடுகளில் பனி விழும் பருவத்தில் செய்துகொண்டிருந்தனர். முன்பு நாங்கள் பொது TV ஒன்று வைத்து உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில் இலங்கை வென்றதை கொண்டாடிய வாசகசாலை கட்டாக்காலி மாடுகளின் உறைவிடமாயிருந்தது. பெரும்பாலான வீடுகளின் படலைகளில் கடிதம் போடும் மரப்பெட்டிகள் முளைத்திருந்தன. வீடுகள் முழுவதும் குளிர்சாதனப்பெட்டிகள் ஆக்கிரமித்திருந்தன. பிரதேச சபை தண்ணீர்ப்பவுசர் ஒன்று வீடுகளுக்கு தண்ணீரை மாதக் கட்டணத்துக்கு விநியோகித்துக் கொண்டிருந்தது. எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில வேப்ப மரத்துக்கு கீழ நான் விளக்கு வைச்சு கும்பிட்ட வைரவர் கோவில் தினசரி பூசை நடக்கிற கோயிலாகிவிட்டிருந்தது.

04

வீட்டுக்கு வந்து ஒரு நாள் கழிந்ததும் எனக்கு இருப்பு கொள்ளவில்லை. வளவு முழுவதும் காடு வத்திக்கிடந்தது. முதல்ல கிணற்றிலே ஆசைதீர அள்ளிக் குளிச்சன். பிறகு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு முதல்ல தெற்குப்பக்கம் வெளிக்கிட்டன். எத்தனை வருசத்துக்குப்பிறகு வாறம். எப்பிடியோ இப்பவாவது வர தோன்றிச்சுதே. நல்ல குளிர் காற்று வீசிக்கொண்டு இருந்தது. ஒரு வழியா மத்தியானம் திரும்பி வீட்டை வந்ததும் நல்ல பசி. மத்தியானதுக்குப்பிறகு நல்ல நித்திரையொன்று போட்டன். இப்பிடி தூங்கி எத்தினை வருசமாச்சு.

பின்னேரம் நாலு மணிக்கு மேற்கு நோக்கி சைக்கிளை வலிக்கத்தொடங்கினன். மேற்குக் கடற்கரை ஓரம் பெரிய மாற்றங்கள் எதுவும் தென்படவில்லை. அதே பனங்கூடல்; அதே கற்றாழை; ஓரளவுக்குப் பாதைகள் கிறவல் போடப்பட்டிருந்தது. சற்றுத்தூரம் சென்றதும் பனங்கூடலுக்குள்ளே அதே கொட்டில். எனக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. எப்பிடியாவது மலையாளபுரத்து அம்மாவை இன்றைக்குப் பார்த்து விடலாம் என்று நினைத்தேன்.  இப்போது அவவுக்கு 70 வயசிருக்கும். இப்பவும் குறி சொல்லுவா எண்டுதான் நினைக்கிறன்.

நான் கொட்டிலை நெருங்கியபோது அம்மாவின் மகள் தான் வெளியே வந்தாள். என்னை அவளுக்கு மட்டுக்கட்ட சிறிது நேரம் எடுத்தது.

" ஓ ராசன் அண்ணாட தம்பியா எப்ப வந்தியள்?"

 சுகம் விசாரித்து விட்டு ஆர்வத்துடன் கேட்டேன்.

"அம்மா இப்ப கலை ஆடுறவாவோ?"

திடீர் என்று கதறி அழத் துவங்கினாள்.

"ஐயோ அண்ணா அதை ஏன் கேட்கிறியள். பன்னிரண்டு வருசத்துக்கும் முதல் பெடியள் ஊர விட்டுப் போனதோடு கன சனமும் ஊரைவிட்டுப் போய் விட்டுதுகள். நாங்கள் இங்கதான் இருந்தம்.  ஒருக்கா ஞாயிற்றுக்கிழமை இரவுப் பூசை நடக்கேக்க சீருடை போட்ட பத்துப்பேர் மெஷின் போட்டில வந்து இறங்கினவங்கள். அவர்கள் கதைச்சதும் எங்களுக்கு விளங்கேல்ல. வீடு முழுக்க துவக்கோட செக் பண்ணிப் போட்டு அக்காவை இழுத்துக் கொண்டு போனவங்கள் தான். அதுக்குப் பிறகு அக்காட கதையே இல்ல. அண்டையிலிருந்து அம்மாவுக்குக் கலை வாறதில்ல.”  

குடிலைச்சுற்றி பிசாசுகளின் எக்காளத்தொனி ஒலிப்பதுபோல உணர்ந்தேன். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் மாமாவின் காலைக் கட்டிக் கொண்ட போது அடைத்த அதே திகில் இப்போது என்னை ஆட்கொண்டது. எனது உடல் நடுங்க ஆரம்பித்தது.

- பார்த்திபன்

Pin It