பட்டிக்குள் விரட்டி சாத்தப்பட்ட ஆடுகள் ஒவ்வொன்றையும் எண்ணிக்கொண்டு வந்த அம்மாயிக்கு தூக்கி வாரிப்போட்டது. அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. இருந்தாலும் தேற்றிக்கொண்டு மீண்டும் எண்ணத் தொடங்கினாள். அப்போதும் கணக்கு சரிவரவில்லை. மீண்டும்…..மீண்டும். பத்து பதினைந்து முறைக்குமேல் எண்ணியாகிவிட்டது. அம்மாயி கணக்கில் இரண்டு ஆடுகள் குறைகின்றன. ஆம் ஆட்டு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் காணாமால் போயிருந்தன. விருட்டென்று பட்டியைவிட்டு வெளியில் வந்த அம்மாயி தன் வீட்டிற்குப் பக்க அக்கமெல்லாம் தேடிப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஆடுகளைக் காணவில்லை. க்குவே…க்குவே…க்குவே… என்று சமிக்ஞை வேறு செய்துப்பார்த்தும் ஆடுகள் வரவில்லை. அவள் இப்படி ஒருமுறை செய்தாலே அனைத்து ஆடுகளும் அவளுக்கு அருகில் வந்து நின்றுவிடும்.

lady with goatsஅம்மாயிக்கு மனசெல்லாம் பதைபதைக்க ஆரம்பித்துவிட்டது. “அய்யோ கடவுளே ஒண்ணா… ரெண்டா…. ரெண்டு ஆட்டையும் சேத்தாப்பல வித்தாக்கூட எட்டு ஒம்போதாயிரம் கெடைக்குமே… எங்க போச்சோ தெரியலையே… நான் என்ன பண்ணுவேன்” என்றவாறு புலம்பிக்கொண்டே ஆட்டுப்படியைச் சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தாள் அம்மாயி. திடீரென்று யோசனைக்கு வந்தவள், பட்டிக்கு அருகில் இருக்கும் வீட்டிற்கு ஓடி ஒரு டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டாள், “ரெண்டு ஆட்ட காணல கொல்லமோட்டுல எங்கனா இருக்குதானு நான் போயி பாத்துட்டு வந்துடுறன் பத்தரமா வீட்ல இருங்க” என்று தன் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் கட்டளையிட்டுவிட்டுப் புறப்படத் தயாரானாள் அம்மாயி.

ஆடுகளை வைத்துத்தான் அம்மாயியின் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. சாப்பாட்டிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் உடனே மந்தையிலிருக்கும் ஒரு ஆடு சந்தைக்குப் போய்விடும். அதை வைத்துக்கொண்டு ஒரு மாதம்வரைகூட சீவனத்தை ஓட்டிவிடுவாள் அம்மாயி. அவளும் அவள் பிள்ளைகளும் தங்கியிருக்கும் வீட்டைத்தவிர உழுது பயிர் செய்ய என்று ஒருகாணி நிலம்கூட இல்லை. அவள் வெள்ளாமையாகக் கருதுவது தான் வளர்க்கும் ஆடுகளைத்தான். ஆடுகள் போடும் ஒவ்வொரு குட்டியையும் வாஞ்சையோடு அரவணைத்துக் காப்பாற்றுவாள். அவைகளை சுகாதாரமாகப் பார்த்துக்கொள்வாள். இதுவரை ஒரு குட்டியைக்கூட அவள் இறக்கவிட்டதே கிடையாது. அவ்வளவு கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்வாள் குட்டிகளை. இந்த ஆடுகளால் பல நேரங்களில் தன் சொந்தங்களின் நல்லது கெட்டதுகளுக்குப் போவதைக்கூடத் தவிர்த்துவிடுவாள். அவர்களும் அவள் நிலமையைப் பார்த்து கண்டுகொள்வதில்லை.

ஓட்டமும் நடையுமாக மாறி மாறி இயங்கிக் கொண்டிருந்தன அம்மாயியின் கால்கள். இடையிடையே பல கடவுளர்களை அழைத்து வேண்டுதல்கள் வேறு செய்துகொண்டிருந்தன அவள் உதடுகள். இடுப்பிலிருந்து அவிழும் புடவையை இழுத்து சுற்றிக்கொண்டு முன்பக்கக் கொசுவத்தை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு டார்ச் லைட்டை வலப்பக்கமும் இடப்பக்கமும் அடித்தவாறு ஓடினாள் அம்மாயி.

நந்தன்தான் இவள் கணவன். நல்ல குடிகாரன். அம்மாயியைக் கல்யாணம் முடிக்கும்வரை நன்றாகத்தான் இருந்தான். அவன் உண்டு அவன் வேலையுண்டு என்று இருந்தவன். எப்படியோ சாராயத்தை ருசிக்கக் கற்றுக்கொண்டான். அன்றிலிருந்து அம்மாயிக்கு நிம்மதியில்லாமல் போனது. ஒருநாள் வேலைக்குப் போவான், அந்த பணத்தில் இரண்டு நாளைக்குக் குடிப்பான். அம்மாயியையும் தன் பிள்ளைகள் இரண்டையும் அவன் எப்போதும் எண்ணிக்கூடப் பார்த்ததில்லை. அவள் அப்பனும் ஆத்தாளும் வந்து அவளுக்கு கஞ்சிக்கு வழி செய்துவிட்டுப் போவார்கள். அவர்கள் கொடுத்த காசில் பிடித்த சிலுவானத்திலிருந்துதான் இரண்டு ஆட்டுக்குட்டிகளை பிடித்து வளர்க்க ஆரம்பித்தாள் அம்மாயி. இரண்டு நான்காகி, நான்கு எட்டாகி, எட்டு பதினாறாவதற்கு அவள் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல.

அம்மாயி ஆடு வளர்க்க ஆரம்பித்ததிலிருந்து நந்தன் வேலைக்குப் போவதிலிருந்து விடுதலையாகிவிட்டான். மாதத்திற்கு ஒரு ஆட்டைப் பிடித்து சந்தையில் விற்று அந்த காசில் குடிப்பான். அப்போதெல்லாம் மறந்துகூட வீட்டுப் பக்கம் வந்துவிடமாட்டான். அம்மாயியும் எவ்வளவோ அவனுக்கு எடுத்துச் சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்பதாய் இல்லை. சீ போ என்று விட்டுவிட்டாள். கடைசியாக ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டு சந்தைக்குப் போனவன் வீடு திரும்பவே இல்லை. குடித்துவிட்டு செட்டிப்பாளையம் சந்தை ரோட்டில் கிடந்தவன், நாவறண்டு செத்துப்போனான். சந்தைக்குப் போனவர்கள்தான் அவனைத் தூக்கிவந்து அம்மாயி வீட்டில் போட்டார்கள். அவன் இறப்பு அவளுக்குள் பெரிய வலி ஒன்றையும் ஏற்படுத்திவிடவில்லை. ஆட்டையும் பிள்ளைகளையும் வளர்ப்பதில் அக்கறை காட்டினாள் அம்மாயி. சில நேரங்களில் மட்டும் எண்ணிக் கொள்வாள் குடிகாரனா இருந்தாலும்… பேருக்கு ஒரு புருஷனா இருந்தான் என்று.

நாலா பக்கமும் அம்மாயியின் கண்கள் தன் ஆடுகளைத் துழாவிப் பார்க்கின்றன. இருளன் கல்…சருக்காம்பாறை….தோப்புக்கொல்லை… என்று அவள் கால்கள் சுற்றித் திரிகின்றன ஆடுகளைத் தேடி. இருள் சூழ்ந்த அந்த இரவுப்பொழுது அவளுக்கு ஒன்றும் அச்சுறுத்துவதாகத் தெரியவில்லை. அவள் பகலில் ஆடுமேய்ப்பதற்காக வலம்வந்த இடங்கள்தான் இவையெல்லாம். அவளைப் பொருத்தவரை பகலும் இரவும் ஒன்றுதான். இரண்டு ஆடுகள் இரண்டு மூன்று மாதத்திற்கு தன் குடும்பத்திற்கு சோறு போட்டிருக்கும். தன் பிள்ளைகள் வயிறாற சாப்பிட்டாவது இருப்பார்கள் என்றவள், “பாவி நான் கொஞ்சம் அசந்து தூங்காம இருந்திருந்தா இப்டி என் ஆடுங்க காணாம போயிருக்காது” என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

தன் ஈரவிழிகளைத் துடைத்துக்கொண்டு புதர்களிலெல்லாம் டார்ச் வெளிச்சத்தை செலுத்திப் பார்க்கிறாள். கண்ணில் தென்படுவதாய் இல்லை. இப்போது அவளுக்குள் ஒரு சந்தேகம் எழுகின்றது. ஆடுகள் இங்கு இருந்திருந்தால் எப்படியும் வீடு வந்து சேர்ந்திருக்கும். யாரோதான் அவைகளை பிடித்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அதனால்தான் அவைகள் வரவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தவள், நல்லமுத்துமீது தன் சந்தேகப் பார்வையை செலுத்திப் பார்த்தாள். அவன்தான் இந்த வேலையை செய்திருப்பான் என்றது அவள் உள்மனசு.

நந்தன் இறந்ததிலிருந்து நல்லமுத்துவுக்கு அம்மாயிமீது ஒரு கண். அவளை எப்படியாவது ருசித்துவிடவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக அவன் மனதில் இருந்தது. ஆடுமேய்க்க தனிமையில் வரும் அம்மாயிக்கு தன் காதல்வலையை வீசிப் பார்த்தான். அவள் சிக்குவதாய் இல்லை. கணவனை இழந்தவளாக இருந்தாலும் கண்ணியமாக வாழவேண்டுமென்று நினைப்பவள் அம்மாயி. தன் பெண்பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி எண்ணிக் கொண்டிருப்பவள் நல்லமுத்துவுக்கு எப்படி நல்லவளாய் இருப்பாள். எனக்கு நிறைய சொத்து இருக்கிறது அவற்றில் கொஞ்சம் உன் பேரில்கூட எழுதி வைத்துவிடுகிறேன் என்று அசாப்பு காட்டிப் பார்த்தான் நல்லமுத்து. அவள் அசைந்து கொடுக்கவில்லை. அவனைப் பற்றி யாரிடமும் அவள் பிராது கொடுக்கவுமில்லை. தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கொள்ள அவள் விரும்பவுமில்லை. அம்மாயி கருப்பாக இருந்தாலும் கட்டாக இருப்பாள். அவள் கண்களில் ஒரு கவர்ச்சி இருக்கும். நடையில்கூட அவளையறியாமல் ஒரு நளினம் இருக்கும். இவையெல்லாம் நல்லமுத்து தன் நண்பர்களிடம் கூறும் நச்சு வார்த்தைகள்.

நல்லமுத்து பெயருக்கேற்றவாறு ஊரில் எல்லாருக்கும் நல்லவந்தான். ஆனால் அம்மாயிக்கு மட்டும் ஏனோ அவன் ஆகாமல் போனான். ஒருவேளை அவன் நினைத்ததை அம்மாயி நிறைவேற்றியிருந்தால் அவளுக்கும்கூட அவன் நல்லவன்தான். ஆட்டைத் திருடித்தான் அவன் பிழைக்கவேண்டிய அவசியமும் இல்லை. அவளை துன்புறுத்திப் பார்க்கத்தான் அவனை இவ்வாறு செய்யத்தூண்டியது அவன் கொடூர புத்தி.

நேராக புறப்பட்டாள் நல்லமுத்துவின் கொல்லைக்கு. எப்படியும் இந்நேரம் அவன் அங்குதான் இருப்பான் என்பது அம்மாயிக்குத் தெரியும். அவள் நினைப்பு வீண்போகவில்லை. அரை போதையில் பக்கத்து கிராமத்தில் இருக்கும் தன் நண்பனோடுதான் பேசிக்கொண்டிருந்தான் நல்லமுத்து. அம்மாயி ஆட்டுமந்தையிலிருந்து ஆடு திருடியது… அதை விற்க பக்கத்து ஊரிலிருக்கும் இருசப்பனிடம் பிடித்துக் கொடுத்தது…போன்ற பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தன.

“இனிமே ஒரு பத்து நாளைக்கி பொண்டாட்டி புள்ளைங்ககிட்ட குடிக்க காசு கேட்டு நிக்க வேண்டியிருக்காது.. அம்மாயி…. உன்னதான் என்னால ஒன்னும் பண்ண முடியல உன் ஆடுவித்த காசுலயாவது நான் கொஞ்சம் போத ஏத்திக்கறன்..” என்றவாறு தான் அமர்ந்திரிக்கும் இடத்தைவிட்டு எழுந்திருக்க முற்பட்டான் நல்லமுத்து. எதிரே நின்றிருக்கும் அம்மாயியைப் பார்த்த நல்லமுத்துவுக்கு பகீர் என்றது. எப்படி இவ்வளவு சரியாகக் கண்டுபிடித்து வந்திருப்பாள். வியப்பில் ஒரு நிமிடம் திகைத்துத்தான் போனான் அவன். ஊரில் எவ்வளவோ திருடர்கள் இருக்கிறார்கள் அவர்களில் யாராவது ஒருவரைத்தான் அம்மாயி பிடிப்பாள் என்று நினைத்த நல்லமுத்துவுக்கு இது பேரதிர்ச்சிதான்.

திகைத்து திக்கித்தெண‌றி நின்றவனைப் பார்த்த அம்மாயி… ஒன்றுமே பேசவில்லை. மேலும் கீழும் அவனை உறுத்து உறுத்துப் பார்த்தாள். தன் வாயில் ஊறிய எச்சில் எல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி நல்லமுத்துவின் முகத்தில் கொத்தையாக உமிழ்ந்தாள். உடனே திரும்பி நடக்க ஆரம்பித்தாள் தன் வீட்டை நோக்கி. இதை யாரிடம் பகிர்ந்து கொள்வான் நல்லமுத்து. ஒருவகையில் ஆடுகளை பலிகொடுத்திருந்தாலும் நல்லமுத்துவின் அச்சுறுத்தலிலிருந்து தப்பிவிட்ட ஒரு சந்தோசம் தொற்றிக்கொண்டது அம்மாயிக்கு.

Pin It