"நான் இப்போ எங்க போய்ட்டு இருக்கேன், எதற்காக நான் இப்படி? இது தான் என் அடையாளமா? இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பயணம்? எனக்கு பயமா இருக்கு!! நான் இப்படியே செத்துருவனோன்னு... என் வாழ்க்கை இந்த உள்ளுணர்வு போல தெரியாம என்னோடவே அழிஞ்சிடுமோ......? ",

"ஹலோ அங்க பாருங்க யாராவது? அங்க ஒருத்தர் கீழ விழுந்துட்டார்.. யாராவது ஹெல்ப் பண்ண வாங்க ப்ளீஸ்" ன்னு ஒரு குரல். சாலையோட மறுபக்கதுல இருந்து அந்த உள்ளுணர்வுகளோட உரையாடிகிட்டு போயிட்டு இருந்த அந்த மனிதர் கீழே மயங்கி விழுந்தத  பார்த்த அன்புகரசு வோட குரல் தான் அது.

அந்த இடத்துல ஒரு கூட்டமே கூடிடுச்சு.

"சார், தயவுசெஞ்சு அந்த ப்ளட் பேங்க் கிட்ட இருக்கிற ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க". அன்புக்கரசு அவசர அவசரமா அவன் ஷர்ட் எல்லாமே தேட ஆரம்பிச்சான். அவன் பாக்கெட்ல இருந்து 350 ருபாய் மட்டும் தான் கெடச்சுச்சு. அவனோட முகவரி எதுமே இல்ல. ஆம்புலன்ஸ் அவன்கிட்ட வந்தவுடனே, அவன வண்டில ஏற்றி விட்டுட்டு அவனோட அன்புக்கரசும் வண்டில போனான்.

வண்டிக்குள்ள அவன் முனகறது மட்டும் தான் தெரியுது. அன்பு அவன்ட்ட பேச்சு கொடுத்துட்டே இருந்தான். ஆனா அன்புன்னால அவன பத்தி எதுமே கண்டுபிடிக்க முடியல. எதாவது பேச வைக்கணும்ன்னு  அன்புக்கரசு முயற்சி பண்ணுறான்.

"சார், உங்க பேரு? உங்களுக்கு எதாவது உடல்ல பிரச்சனையா? எதாவது பேசுங்க, "

ஆனா அந்த மனுசனுக்குள்ள ஏதோ போரட்டம்ன்னு  மட்டும் அன்புக்கு கொஞ்சம் புரிஞ்சுச்சு. அன்புக்கரசுவோட குரலை அந்த மனுசனால கேட்க முடியுது. ஆனா அவனால பேச முடியல. அவனோட சுயநினைவுகள் போனாலும் பழைய நினைவுகள அவனால மறக்க முடியல. அன்புவோட கேள்விக்கு அவன் மனசுக்குள்ள மட்டும் பதில் பேச முடியுது.

"என்னோட இந்த நிலைமைக்கு காரணம் நானா? என் பேரு ராம். வாழனும்ன்னு ஆசைப்படுற சராசரி மனுஷன் மாதிரி தான் நானும். ராம்னா ஒரு இலக்க மட்டுமே நோக்கி பயணப்படுறவன்னு அர்த்தம். நானும் அப்படித்தான். ஆனா சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளோட சூழ்ச்சியும் வாய்ப்பு கிடைக்கறதுக்கு கூட  நான் தட்டி கழிக்கப்பட்டேன். ஏன்னா இங்க முயற்சி பண்ணகூட முதல் தேவை. என்ன மாதிரி சராசரி மாணவர்களா படிச்சவங்களுக்கு இந்த மாதிரி நிலைமை அதிகமாவே இருக்கு. எப்படியும் வாழ்க்கையோட போராடி ஜெயிச்சிடனும்ன்னு நம்பிக்கை இருந்த எனக்கு, போக போக வறுமைய ஜெய்க்க தெம்பும் இல்ல, ஏய்த்து பிழைக்கற பிச்சைக்கார பிழைப்பு செய்ய மனசும் இல்ல. என்னை கருணையோட மருத்துவமனைக்கு கொண்டு போயிட்டு  இருக்குற பெயர் தெரியாத நண்பருக்கு என்ன பத்தி தெரிஞ்சா? நான் செய்துட்டு இருக்கிற வேல பத்தி தெரிஞ்சா? இந்த கேள்விகள் மட்டும் அந்த நல்ல உள்ளம் கேட்ற கூடாது. என் உள்ளுணர்வு அவருக்கு கேட்க போறது இல்ல. நான் பிழைப்பேன்ன்ற நம்பிக்கையும் எனக்கு இல்ல. என்ன பத்தி உண்மை அவருக்கு தெரியறதுக்கு முன்னாடியே நான் செத்துடனும்..."


ஆம்புலன்ஸ் வேகமா மருத்துவமனைக்குள் நுழைந்தது.

அன்புக்கரசு, பதற்றத்தோட "டாக்டர் ப்ளீஸ் இவர உடனே பரிசோதனை பண்ணுங்க, அவரு மயக்கத்துல இருந்து கொஞ்சம் வெளில கொண்டு வாங்க தயவு செஞ்சு."

டாக்டரும் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல போராடி அவர சாதாரண நிலைக்கு கொண்டு வந்துட்டாரு. அன்புக்கரசு டாக்டர் கிட்ட அவரோட பிரச்சனைய பத்தி விசாரிச்சான். டாக்டர் அவன் உடம்புல இரத்த குறைபாடு இருக்கிறதாகவும், இந்த நிலைமை நீடிச்சா அவரு சீக்கிரமே இறந்துடுவார்னும் சொன்னாரு.
அன்பு பொறுமையா ராம் அறைக்கு போனான். ராம்னால எழுந்து நின்று நன்றி சொல்ல முடியலைனாலும் தன்னோட கண்ணீர்னால நன்றிய தெரிவிச்சான்.

ரெண்டு பேரும் தங்களோட பேர சொல்லி அறிமுகமானாங்க.

"டாக்டர் உங்க உடம்புல இரத்த குறைபாடு இருகிறதா சொல்லிருக்காரு. உங்க வீட்ல இத பத்தி தெரியுமா? " அன்பு ராமிடம் கேட்டான்.

"இன்னும் நான் எதுவுமே வீட்ல சொல்லல சார்" கிற பதில் ராம் கிட்ட இருந்து தயக்கத்தோட வந்தது.

"நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க" ன்னு
அன்பு கிட்ட இருந்து கேள்வி வந்தவுடனே ராம் அழ ஆரம்பிச்சுட்டான்.

அத பார்த்தவுடனே அன்புக்கு என்ன சொல்லனும்னு தெரியல.

ராம் அழுதுகிட்டே "சார், நீங்க எந்த கேள்விய கேட்க கூடாதுன்னு நினைச்சானோ அதே கேள்விய......பசிக்காக இரத்தத்த விற்கிற பூச்சி சார் நான்... வாரம் ஒரு முறை இரத்தம் கொடுக்கிறேன். 350  ரூபாய்ல இருந்து 500 ரூபாய் வரைக்கும் கிடைக்கும் சார் . அதை வைச்சு தான் ஒரு வாரமே ஓடும் சார். நான் ரொம்ப சாதாரணமான குடும்பத்துல இருந்து வந்தவன் சார். இது என் இயலாமைய சொல்றதுக்காக இல்ல சார். ஒரு வயசுக்கு மேல வீட்டுக்கு பாரமா இருக்க விரும்புல... கடைசியா இரத்தம் கொடுத்துட்டு ப்ளட் பேங்க் கிட்ட இருக்குற கடையில காபி குடிச்சுட்டு வெளில வரும்பபொழுது தான் நான் எந்த நிலைமைல இருகேன்னு புரிஞ்சுது. நீங்க இல்லன்னா நான்...." அழுகையை தொடர்ந்தான்.

"கவலைப்படாதீங்க நண்பா, வறுமையை மட்டும் காரணம் காட்டினா, வாழ்க்கையையும் ஜெயிக்க முடியாது, வறுமையையும் சாகடிக்க முடியாது. வாழ்க்கையோட போராட முடியாத, போரட்டம்ன்னாலே பயப்படுற நிறைய நண்பர்கள், தனக்குள்ள ஒளிஞ்சு கிடக்குற திறமைகள தன்னோடவே சேர்த்து ஒழிச்சுடுறாங்க தற்கொலைங்கிற பேருல. சாகணும்னு முடிவு பண்ணின பிறகு, வாழனும்ன்னு ஒரு முறை ஆசைப்பட்டாலே போதும்!! சாதிச்சிடலாம்!!!   நம்மள மாதிரி இளைஞர்கள் எல்லாம் சூழ்நிலையையும், வறுமையையும் காரணம் சொல்லி நம்மள நாமே அழிச்சுகிட்டு இருக்கோம்.  நான் ஒரு பத்திரிக்கை வச்சு நடத்திட்டு இருக்கேன். நீங்க எனக்கு உதவியா வேலை பாருங்க!!! நாம கண்டிப்பா ஜெயிப்போம் நண்பா"

அன்புவோட ஒவ்வொரு வார்த்தையும் அன்பு மனசுக்குள்ள தன்னம்பிக்கையை வளர்த்தது. நம்பிக்கைங்கிற தமிழ் வார்த்தையோட அர்த்தம் அவனுக்கு முழுமையா புரிஞ்சுது. ராம் நல்லா யோசிச்சுப் பார்த்தான்!!! ஒரு விஷயம் மட்டும் தெளிவா அவனுக்கு புரிஞ்சுது. அது தான் உண்மையும் கூட!!!

"வாழ்க்கைப்பயணம் இந்த நொடியோட முடிய போறது இல்ல. நாமே பயந்து பயணத்த முடிச்சுக்க முயற்சி பண்றோம்ன்னு!!!!!!!!!!"

 

Pin It