Coupleசிக்கித் தவித்ததொரு வாத்தியம்
இசையறியாப் பாமரனின்
அதிகாரப் பாதுகாப்பில்
விதியின் விளையாட்டாய்

உள் லயம் புரியா சிறைமை வெம்பி
வறண்டு காயத்தொடங்கின
இசையின் ஊற்றுக்கண்கள்

தீண்டியதொரு ரசி கரம்
நவீனத் திசையொன்றிலிருந்து
மாந்திரீக வசீகரத்துடன்

விரல்தொட அதிரும் மிரு தங்கம்
மீட்டலில் சிலிர்க்கும் வீணையாய்
மூச்சுக்காற்றில் வேய்ங்குழலின் வெப்பம்

மத்தள முரசங்களாய்
உணர்ந்த தருணங்களுமுண்டு
நாவுக்குள் நா உரச மோர்சிங்

உதடு பொருத்தி உருக
உதட்டார்கனின் ரீங்காரம்
கொங்கைகளில் சங்கூதும் குறும்பனின்
வித்தக ஸ்பரிச லாவகம்

ஒற்றா உடலில் எழும்பிச் சுழல்கிறது
இசைக்கலவை.

தீ மூட்டி சென்றுவிட தினந்தோறும் எரிய
சிதையிலிருந்து பறக்கின்றன
இசைத்துணுக்குகள் இச்சை சுமந்து.

காதலைச் சொன்ன மாலையில்
ஒரே வரிசையில் நீண்டன நட்சத்திரங்கள்
சதுரமாய் சிரித்தது நிலவு

மணலலைகள் கிளம்பிக் கடலுக்குள் சென்றன
கரையிலிருந்து
திமிங்கிலமொன்றினை விழுங்கியது
சின்ன நெத்திலி
பகலிலேயே அல்லிகள் பூக்க
பாலையிலிருந்துப் பீறிட்டன நீருற்றுகள்

பூமி தொடவில்லை பாதங்கள்
சிறகு விரித்துப் பறக்கத் தொடங்கினேன்
ஒன்பதாம் திசையில்.
பட்டமரமொன்றிலமர புஷ்பித்தது விருட்சமாய்
இலைகளில் இருந்தும் கமழ்ந்தது சுகந்தம்

தீத்தொட இனிக்கிறது தித்திப்பாய்
மாலைச் சூரியன் பொழிந்தான் பனிமழை

எல்லாப் பறவைகளும்
காதல் பறவைகளாக மாறிவிட்டன
காதலைச் சொன்ன மாலையில் 

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.