Old ladyஎன் மகனே, நினைவில் நான் இன்னமும் உன்னை சுமக்கின்றேன் - உன்னிடம்
கடலளவு பேசநினைக்கும் எழுபது வயது தாய்க்கிழவி நான்
துளியளவும் நேரமில்லா உன்னிடம் தான் என்ன பேச - நீ
சென்ற பிறகும் உன் வாசனைத்தைலத்தின் மணம் தான் எனது மனதை தேற்றும்,

பிறந்த நாள் முதல் நீ பிரிந்து போகும் நாள் வரைக்கும் உன்னை அடை காத்த
தாயெனக்கு நீ தரும் வினாடிகளில் தான் என்ன ஒரு சிக்கனம்
சிக்கனம் பாசத்திலும் பணத்திலும் பற்றிக்கொள்ள -
பாலைவனம் காணும் முதல் மழைத் துளி போல்
நானும் ஏன் வியக்கிறேன், வியர்க்கிறேன்

நீ இழுத்து விளையாடிய எனது கருங்கூந்தலில் மிஞ்சிய பாதியும் வெள்ளியாகின
நீ அப்பனுக்கு கொள்ளி போட்டு வீடு வந்த வேளை முதல் இன்றுவரை நான்
வெள்ளையாடையில் தானே என் வேதனைத் தீயை மறைக்க முயல்கிறேன்
சுருண்ட உடலில் பற்கள் மட்டும் ஒர் அதிசயம் மகனே

நீ வரும்போதெல்லாம் நானுனது சத்தத்தை தான் காண்கிறேன்
மங்கிய கண்களில் மங்காமலிருக்கும் ஒன்றே ஒன்று உனது முகம் மட்டும் தான்
ஆனால் நீ மறக்க நினைப்பது மட்டும் ஏனோ இந்த கிழவியின் முகம்

மனைவியின் கட்டளையில் நல்ல வேளை நீ என்னை
முதியோர் இல்லம் காட்டவில்லை
அகதி போல் மகள் வீட்டில் ஆனால்
நீ தரும் பணம் கொடுத்தே உண்ணுகிறேன்
ஏழை மகளின் வறுமை கண்டு நானே மேல் என்று நினைப்பேன்
நான் வளர்த்த செல்ல மகளை மருமகன் திட்டும்
காட்சி கண்டு கலங்கி வீழ்வேன்

உன்னை முழுமையாக காண என் கண்களில் வெளிச்சமில்லை - உனக்கு
ஆசையாக ஒரு வாய் சோறு போட வசதியில்லை,
கட்டும் சேலை கூட நீ தந்த பிச்சை - அதிகாரம்
காட்ட என்னிடத்தில் தான் என்ன மிச்சம்,

‘வெளியே போ கிழவி’ என்று அறிவில்லாமல் பேத்திகள் கத்த
இடி விழும் சத்தத்தோடு மகளைத் திட்டும் மருமகனின் கோபத்தைக் காண
உண்ட மருந்துகள் என்னை மயக்கி மயக்கி வறுத்தெடுக்க
சமையலறையோரம் எனது பழைய கட்டிலில் அமர்ந்து அழ எனது
வேதனை எண்ணங்கள் எப்படியெல்லாம் என்னை வேல் பாய்ச்சும் தெரியுமா?

இதனால் ,
இதயம் கசிந்து இரத்தம் சிந்த அவை கண்களின் சுத்திகரிப்பில்
கண்ணீராய் அடைமழை பெய்யும்

தன் பெயரில் வீடு பெற்று வங்கியில் பல கோடிகள் போட்ட பிறகே
வளைகுடா நாட்டில் முஸ்லிம் பெண்கள் திருமணத்திற்கு
சரியென்பதில் எவ்வளவு நியாயம்?

ஒரு வேளை சோறுக்கே உன் கையேந்தும் தாய் நான்
வளைகுடாவில் பிறந்திருந்தால் என் வாழ்க்கை வளையாமல் விடிந்திருக்கும் .

தணல் கிடைக்க நானுனை வளர்க்க நீயென்னை
தள்ளி வைத்து அழகு காணும் கொடுமையிது காண
நான் எத்தனை காலம் வாழ்வேனோ?
நானே மரணப்பட்டால் எனது ஆத்மா சாந்தியற்று நிற்குமே
என்ற எண்ணத்தில் நான் இன்னமும் மூச்சு விடுகிறேன் ,

பச்சை இலையே நீ பழுப்பதற்குள் உணர்ந்து விடு
என் பேரனை நம்பாதே அவன் உன் மகன்

உனது வயதான காலம் தான் உன் முதல் பிள்ளை என்று எண்ணி
இப்பொழுதே பணம் சேர்
என்னைப் போல் முதுமையில் முனகாதே

இறைவன் என்னை வெகு விரைவில் இறப்பு தந்து அலங்கரிப்பான்
மகனே செலவென்று எண்ணாதே
எனக்கு செய்யும் கடைசி செலவு இது தான
தலையணை கீழ் கொஞ்சம் பணம் வைத்துள்ளேன் - எனது
சவப்பெட்டி வாங்க அது உதவும் கலங்காதே,

ஒரே ஒரு விண்ணப்பம்
எனது பிறந்த நாள் போல் என்
மரணநாளையும் தயவாக மறந்து விடு 

சுரேஷ், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It