கடல்
தனது முதல் அலையை
கரைக்கு அனுப்பியது
எப்போது?

பிரபஞ்சவெளி குறித்த
பிரமிப்பு நீங்கிவிட்டதா
உனக்கு?

புயலும்
பூகம்பமும் தாக்காமலிருக்க
பூமிக்குத் தடுப்பூசி
போடமுடியுமா உன்னால்?

கருப்புப் பெட்டி
தேவைப்படாத விமானத்தை
கட்டமைக்க முடியவில்லையே...
ஏன்?

இனி
எதன் பொருட்டும்
மோதிக்கொள்ள வேண்டாம்
என்று முடிவெடுக்கக் கூடுகிற
மாநாட்டில் மட்டுமாவது
மோதிக் கொள்ளாமல்
இருக்க முடியுமா
மனிதர்களால்?

இப்படியாக இன்னும்
கட்டுக் கட்டாக
அடுக்கி வைக்கப்பட்டுள்ளன
உனக்கும் எனக்கும்
விடை தெரியாத வினாக்கள்!

இருந்தும்
வெட்கமற்று
அவனைப் பார்த்து
எப்படிக் கேட்க முடிகிறது
உன்னால்
'உனக்கென்ன தெரியும்?'
என்று.

ஜெயபாஸ்கரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.