இனியும் ஒருமுறை
இந்தநாடு ஏமாற்றப்படக்கூடாது
பிர்லா மாளிகையில் ஆடம்பரப் பூசை நடத்தும்
ஹரே ராம் பிச்சைக்காரர்கள்
மீண்டும் இங்கே பிறந்துவிடக்கூடாது
பகவத்கீதை பண்டிதர்கள் இந்த நாட்டிற்கு
இனியும் தேவையில்லை
போலிப் புத்தனின் வாரிசுகள் அள்ளி வீசிய
வெற்று முழக்கங்களால் நாசமாய்ப் போயின
அய்ம்பத்தெட்டு ஆண்டுகள்


பொறுமையாய் அமைதியாய் சாந்தமாய் வாழ்ந்ததால்
இந்தத் தலைமுறை எத்தனை இழந்தது?
சாதாரண மனிதர்கள், ஒதுக்கப்பட்டவர்கள்
மக்கள் நலம் பேணும் இந்த மாபெரும் நாட்டில்
செத்துக்கொண்டிருக்கிறார்கள் தினம் தினம்.
வீடுகள் குடிசைகளாகிக் கொண்டிருக்கின்றன...
குடிசைகள் தரைமட்டமாகிக் கொண்டிருக்கிறன...
பணக்காரர்களோ தேசத்தையே கசக்கிப் பிழிந்து
வானுயர வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.
அறியாமை இருட்டினால் வழிகாண முடியாமல்
அழுகிக்கொண்டிருக்கின்றனர்.
அழுகிக்கொண்டிருக்கும் கிராமங்களோ
கதறிக்கொண்டிருக்கின்றன பரிதாமாக!

இன்று
தனது சீடகோடிகளின் சாதனைகளைக் கேட்டறிந்து
அவன் தலைகுனிந்து நின்றுகொண்டிருக்கின்றான்-
நசுக்கப்பட்டவர்களின் நீதிமன்றத்தில்
ஒரு கொலைகாரனைப் போல, குற்றவாளியைப் போல்!


அழுதழுதே சோர்ந்து அய்ம்பத்தெட்டு வருட வரலாறு
வாய் திறவாமலே அது தெளிவாகக் சொல்கிறது
ஒடுக்கப்பட்டவர்களுக்காக அவன் பாடுபடவில்லை
வர்க்க உணர்வின் இதயத்தில்
வஞ்சகமாகக் கத்தி பாய்ச்சிய,
போரட்ட சக்தியையே அழித்தொழித்துவிட்ட,
இந்த முதல்தர அய்ந்தாம் படை
உலகிற்குத் தந்ததுதான் என்ன?


இவனை நம்மிடையே வாழ எவ்வாறு அனுமதிப்போம்?
அதிகாரத்தின் கேடயமாக! ஊழலின் கவசமாக!
இந்த நாட்டிற்கு அவன் என்னதான் கொடுத்தான்
கரடு முரடான ஒரு கைத்தறித் துணியைத் தவிர,


ஊளையிடும் வகுப்புவாத வெறிநாய்களுக்கும்
பசுத்தோல் போர்த்திய புலிகளுக்கும்
இந்த நாட்டையே தியாகம் செய்துவிட்டு
பகவத் கீதைப் பாராயணம் செய்துகொண்டிருந்த
இவனுக்கு, இனியும் இந்த நாட்டில்
ஒரு பெயரும், உருவமும்
எப்படி இருக்கலாம்?


பராளுமன்றப் பரத்தையர் விடுதிகளில்
நடந்தேரும் அரசியல் விபச்சார அவலங்கள்
இவன் தந்த வரமின்றி, வேறு யார் தந்தது?
இவனது பெயரை உச்சரிக்காத ஒரு கட்சித்தலைவன்
இன்று எங்காவது உண்டா?


மூளை குழம்பிய இந்த மகாத்மாவிற்கு
ஏனித்தனை ஆடம்பர ஆராதனைகள்?
கனிவான கீர்த்தனைகள், கண்ணீர் அஞ்சலிகள்,
வழிபாட்டு மாடங்கள், பாமாலைகள்
நமது அறியாமையின் சின்னங்கள் அல்லாமல்
இவை அனைத்தும் வேறேன்ன?


கற்பனா வாதச் சிலந்தி வலைகளில்
வெற்று முழக்கங்களில்
காட்டுமிராண்டிக் கலாச்சாரப் புனைக்கதைகளில்
மக்களைச் சிக்க வைத்து
கோட்பாடுகள் என்ற பெயரில்
பஞ்சு உருண்டைகளை நூற்றெடுத்தான்
விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாத துரோகியாக
மக்களைக் காட்டிக்கொடுத்தான்
தான் சாவதற்கு முன் என் தலைமுறைக்காக
வெறும் பூஜ்யங்களைத்தான் வரைந்து சென்றான்


இனியும் ஒருமுறை
இந்த நாடு எமாற்றப்படக் கூடாது.

செரபண்ட ராஜு
Pin It