வயதில் மூத்தவர்கள் திரண்டு வந்து
வாயார வாழ்த்துவதுண்டு
வாழ்க்கையைத் தொடங்கும் இவர்கள்
வாழட்டும் பல்லாண்டு என்று

வசதி இருந்திட்டால்
வான வேடிக்கை உண்டு
வண்ண வண்ண விளக்குகளுண்டு
வளைவு அலங்காரங்களும் உண்டு

மூன்று வேளைக்கே முடியாதவனும்
மூன்று முடிச்சு போடுவதுண்டு
முகப்பிலே பந்தல் போட
முகூர்த்தக் கால் ஊன்றுவதுண்டு

உள்ளூரைத் திரட்டி வந்து
ஒரு சேர கூடி நின்று
மஞ்சளும் சந்தனமும்
மரத்துக்குப் பூசுவதுண்டு

மணமணக்கும் குங்குமத்தை
மல்லிகைப் பூ அணிந்த
மங்கையர்கள் தொட்டு வைத்து
மரத்தை வணங்கி மகிழ்வதுண்டு

மணிக்கணக்கில் மரத்துக்கு மரியாதை
மயங்கும் பசியில் மாப்பிள்ளையின் தங்கை மகன்
காலை வெயிலில் களைப்புற்று
கடைசியில் கேட்டான் கேள்வியொன்று
அம்மா...
கல்யாணம் மாமாவுக்கா?
இல்லை இந்த மரத்துக்கா?

ஜான் பீ. பெனடிக்ட்,வாசிங்டன் DC (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It