சாலைவாசிகளின் கூடாரத்தில்
முன் பசியைப் போக்குகிறது
அரிசி பொங்கும் வாசம்

*
மதுக்கடை வாசலில்
பாட்டில் பொறுக்கும்
குடித்து செத்தவன் பிள்ளை

*
கடவுளின் கை பிடித்து
பிச்சை எடுக்கும்
கண்ணில்லாதவன்

*
திடும்மென துள்ளி மேலெழும் மீன்
உறக்கத்தில் இருக்கும்
ஆழ் கடலை எழுப்பி விடுகிறது

*
வெயில் திருடும் காதலர்களை
காட்டிக்கொடுக்கும்
கடற்கரை

*
இடது கையால் எழுதுகிறேன்
முன்னாடி முளைக்கிறது
இல்லாத கண்ணாடி

*
வானம் கீழிறங்கி இருக்கிறது
வீதி கடந்தவளுக்கு
மேக நடை

*
சோர்ந்திருக்கும் நாளை
சோற்றோடு பிசைந்து
தின்

*
வெறுமனே பார்த்துக் கொண்டிரு
பறந்து கொண்டிருப்பது
பறவையோ பார்வையோ

*
இரவைத் தொலைத்த உடல்கள்
சாலையோரத்தில்
ஆடை விற்கின்றன

*
அவிழ்ந்து கொண்ட இறகை
பத்திரமாய் தரை இறக்கும்
காற்றின் கைகள்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.