பட்டாம் பூச்சியாக
படபடத்து
உள்ளங்கையில்
வந்து அமர்கிறது அது

மனது விடைபெறாமலே
ஒரு காத தூரம்
போய் விட்டது கழன்று

நெகிழ்ச்சிக்கு
ஒரு மழைத்துளி கூட
தலை மீது விழவில்லை என்றாலும்
உச்சி முகர்ந்து ஆசீர்வதிக்கும்
ஒரே ஒரு செம்பருத்தி இலை போதும்

தரையில் இறக்கி விட மனதின்றி
உள்ளங்கையில் ஏந்தி நிற்கிறேன்

கோவில் தூணில்
அசையாது நிற்கும்
யாழியானேன் சற்று நேரத்தில்
சற்று நேரம் என்பது
யுகம் யுகங்களாகிறது

ஒரே ஒரு சருகுக்காக
நின்று புறப்படும்
காலத்தைப் பார்க்கும்போது தான்
மிதக்கும் கடவுளிடம்
கொஞ்சம் சிநேகம்
காட்டத் தோன்றுகிறது

- தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.