ஒரு ஸ்பரிசத்தில் எத்தனை
அடுக்குகள் திறந்து கொண்டனவோ
அத்தனை அடுக்குகளிலும்
கிளிகள் வளர்க்கிறேன்

அவைகள் ஓயாமல்
உன் பெயரை
உச்சரிப்பதும்
பயிற்சியினால் அல்ல

இந்தப் பறவை வானத்திற்கு
சொந்தமென்றால்
உன் விரல்கள் விடுதலையை
அளிக்கும் தெய்வீகச் சாவிகள் தான்

பருத்தி நூலைப் போல்
பிடரியில் இறங்கும் சுவாசம்
உயிரின் கட்டுக்களை அறுத்து
ஒரு பட்டமாக பறக்க விடுகிறது

மூச்சுக் காற்றினால்
எத்தனை மொட்டுக்களை
திறந்தனவோ
அத்தனையிலும்
மலர்ந்து வரும் சுவாசம்
பேரன்பின் நிகழ்த்துக் கலை

நிகழ்த்துக் கலையின்
வாழ்தல் மரணித்தல்
விளையாட்டு அத்தனையும்
உன்னால் அன்றி
என்னால் கண்டு பிடிக்கப்பட்டதல்ல.

ஒரு பட்டமோ கிளியோ
சுவாசமோ
என்னிலிருந்து
புறப்பட்டுப் போகையில்
எப்படியும்
புதிதாக பிறந்து விடுகிறேன்
நான்

- தங்கேஸ்

More articles by தங்கேஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.