உறவுகளைத்
தவிர்த்துக் கொண்டிருக்க
நேரமில்லை
ஊன் பிரசவிக்கும்
உளப் பாங்குகளை
பத்திரப்படுத்தும்
பொறுமை உண்டு

மிச்ச சிறிய அன்பையும்
மிகச் சரியான
உயிருக்குத் தருவேன்
நம்பலாம்
அளப்பரிய ஆகாயத்தை
என் உள்ளங்கை திறக்கும்
தங்கலாம்

மீதமாகாத மெய்யுருவை
மேனியாக்கிக் கொண்டேன்
கூடடைய விரும்பாத
கருணையின் கைகள்
உடல் முழுக்க

நந்தவனத்து நிலவில்
கல்லெறியும் சிறுவனும்
உள் உண்டு
இங்கிருந்தபடியே
அங்கிருக்க கற்றவனுக்கு
கல்லில் மலர் காணுதல்
வழக்கம் தான்

தூரத்துப் பறவைக்கு
ஓய்வு தரும்
ஒற்றைக்கல் தவம் எனது
சிற்றருவிக்குள்
இருள் நீந்தும் நிம்மதி
என் காலம்

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.