அந்தியைக் கொஞ்சம்
அள்ளி அறையில் வைத்தேன்.
அந்த வழியாகச் சென்ற
ஆந்தை அவசரமில்லையென
ஓய்வெடுத்தது.
ஆசைகள் கொண்ட
கதவுகள்
அதுவாகவே சாத்திக் கொண்டது.
சாளரக் கதவுகளைச்
சந்தேகம் கொள்ளத் தேவையில்லை
குளிர்க் கதகதகப்பை
அவைகள் கொடுக்க உதவுவதால்.
இப்பொழுது
இருவரும் காத்திருந்தோம்.
இரவு வரும்போது
அவரவர் வேலைகளை
அவரவர் செய்து கொள்ளலாமென.
நாங்கள் நம்பிய
அந்தி எங்களை
ஆரத்தழுவி ஆசுவாசப்படுத்தியது.
எவராவதொருவர் இரவை
இங்கு அழைத்து வரவேண்டும்.
இல்லை
சூரியன் கிளம்பி
ஒரு சோதனைக்குள்ளாக்க வேண்டும்.
இரவு என்றால்
அது பறந்துவிடும்.
பகல் என்றால்
நான் பறந்து விடுவேன்.
அந்திக்குத்தான்
எந்த அவசரமும் இல்லை.
அதற்கு வாய்த்ததும்
அதன் தருணமும் அப்படி.
நல்ல வேலை.
ஆந்தையைத்தவிர
மற்ற பறவைகள் வரவில்லை.
வந்திருந்தால்
கீச்சல்களால் நிரப்பி
அந்தியைக் கொத்தி
இந்த அமைதியைச்
செரித்திருக்கும்.

***

ஆசுவாச விடுதலை

வெகு தூரம்
பயணித்து வந்த பேருந்து
சற்று நின்றால்
தேவலாமென நினைத்தது.
ஓட்டுனர்
முட்டி நின்ற
மூத்திரத்தை பெய்துவிட்டு
நிம்மதியாகப்
பெரு மூச்சை விட்டார்.
பேருந்தும் கிளம்பியது
ஏனோ மக்கள்
புகை கக்கிப் போவதாக
மட்டும்
பேசிக்கொண்டார்கள்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.