சுற்றிச் சுற்றி
ஒவ்வொருவரிடமும்
வாலை ஆட்டி
வலம் வந்து கொண்டிருருந்தது
அந்த நாய்.

வழி வழியாக
பழகியதால்
வாஞ்சையுடையவனை
வாலை ஆட்டியபடியே
தேடிக் கொண்டிருந்தது.

வந்தவர்களில்
வாய் தவறி
கீழே விட்டதைத் தின்றதால்
அது வாலை ஆட்டுவதைக்
குறை கூற முடியாது தான்.

வேலைக்குச் செல்கிறவர்கள்
யாருக்கோ வாலை
ஆட்ட வேண்டி இருந்ததால்
அவசரமாக உறிஞ்சிவிட்டு
ஓடினார்கள்.

நாயைப் போலவே
கைகளைக்குவித்து
எல்லோரிடமும் ஆட்டியவர்தான்
இன்றும் உணவளித்தார்.

எவ்வளவோ முயன்றும்
நாய் தன் வாலை
அவருக்காக
ஆட்டவே முடியவில்லை.
தன்னைப் போன்றவனுக்கு
தன் வாலை
ஆட்ட முடியாதென்ற
கற்பிதம்
அதன் வாலுக்குள்ளும்
படிய வைக்கப்பட்டிருக்கலாம்.

சுற்றிச் சுற்றி
ஒவ்வொருவரையும்
வாலை ஆட்டியபடியே
வலம் வந்து கொண்டு தான்
இருந்தது அந்த
சாமானிய நாய்.
கவனம் தப்பியவராலும்,
கையேந்தியராலும்
ஆகாரம் கிடைக்கிறதென
புரியாத அறியாமையில்
எப்பொழுதும்.

- ரவி அல்லது

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.