நீங்கள் கசங்கிக் கிடக்கையில்
கஞ்சியில்
வெளுத்த ஆடைகளை
உடுத்தும்நான்
உங்களுக்குப்
பகட்டுக்காரி தான்...

அநீதி கண்டு
நீங்கள் செவிபொத்தி
வாய்மூடி மௌனியாகையில்
அங்கே வினா தொடுக்கும்
நான் உங்களுக்கு
வாயாடிதான்...

குனிந்து நடந்தே
பழக்கப்பட்ட
உங்களுக்கு முன்னால்
நிமிர்ந்த நன்னடையிடும் நான்
உங்களுக்கு
திமிர்பிடித்தவள் தான்...

அடக்கி ஆள நினைக்கும்
உங்களுக்கு முன்னால்
சமஉரிமை கேட்கும் நான்
அடங்காப்பிடாரி தான்...

நீ எனை கீழாக
நினைக்கிறாய்
காரணம் ,
நான் ஒரு பெண்பால்.

நான் அடிபணிவேன்
உனது நட்பால்,
நீ காட்டும் அன்பால்...

ஒரு போதும் தலைசாய
மாட்டேன்
நீ ஒரு ஆண்பால் என்பால்...
பகுத்தறிவைப் புகுத்திப் பார்
நீ குடித்து வளர்ந்ததே
ஒரு தாயின் பால்...

எமை ஏசுவோரும் பேசுவோரும்
நீங்கள் அப்படியே நிலைத்து நிற்க.,
எனக்கான தொடர்வண்டியில்
ஏறிப் பயணிக்கிறேன்.,
நிரம்பி வழிகின்றன இருக்கைகள்...

எங்கள் பயணங்கள் தொடர்கின்றன.

- கார்த்திகா

Pin It