இசையை
இறைவனுக்கு
எதிரானது என்று
கற்பிதங்கள் வகுத்தவன்
பறவைகளின் கீச்சொலியை
பாவம் என்று சொல்லவில்லை

தன் இதயத்தின்
லப் டப் ஓசைகள்
இசையாக மாறி
உயிர்நதியில் பாய்வதை
தடுக்கவும் விரும்பவில்லை

தான் உச்சரிக்கும்
ஒவ்வொரு சொல்லிலும்
இசைக்குறிப்பு இருப்பதை
அவன் வெளிப்படுத்த விரும்பவில்லை

சப்தங்கள் ஏதுமின்றி
அலைந்து திரிய ஏதுவாக
மௌனப்பெருங்காட்டை
இயற்கையும் படைக்கவில்லை

அலைகள் எழுப்புகின்ற
சங்கீத ஸ்வரங்களை
செவிகள் வழிய கேட்ட பின்பும்
சிந்திக்கத் தெரியவில்லை

சில மூடர்கள்
ஒப்பித்த தப்பான
பாடத்தை
கீறல் விழுந்த
இசைத்தட்டு போல
திரும்ப திரும்ப உரைப்பவன்
செவிப்புலங்களில்
தங்கள் காதுமடல்களையே
கதவுகளாக்கிக் கொண்டு
உலகின் ஓசைகளில் இருந்து
உதிர்ந்து விடுகின்றான்

பக்திப் பரவசத்தில்
தாங்கள் நம்பும் கடவுளையே
செவித்திறன் அற்ற மாற்றுத் திறனாளியாக
மாற்றி விட்டார்கள்
எல்லை மீறிய பக்தர்கள்

- அமீர் அப்பாஸ்

Pin It