கனவிலும் நினைக்கவில்லை
அருந்தும் நீரை அடிமாட்டு விலைக்கு விற்பார்களென.
கனவிலும் நினைக்கவில்லை தண்ணீரை
காசு கொடுத்து வாங்கிக் குடிப்போமென்று.
கனவாகவே இருக்கிறது தண்ணீரை
காசு கொடுத்து வாங்க முடியவில்லை.
கனவிலும் நினைக்கமுடியவில்லை
உலக அரசியலின் கச்சாப்பொருள் நீராகுமென.
பெருநிறுவனங்களின் பெருங்கனவிலும்
பெரிதினும் பெரிதாய்த் தெரிகிறது நம் நீர்நிலைகள்.
வெறுங்கனவாகவே இருக்கிறது அனைவருக்கும் கல்வியும் குடிநீரும்
தண்ணீர் கனவில் செத்து மிதக்கிறது நம் நன்னீர் ஏரிகள்
சீமைக் கருவேல வேர்களின் வன்புணர்வில்.
கனவிலும் தண்ணீர் கனவான பின்பு
நனவில் நீளும் நீருருஞ்சும் அட்டைகளாய்
மணல் லாரிகள்.
தப்பித்தவறி தண்ணீர் கனவு கண்டால்
கூட்டுப் புணர்ச்சிகளில் கானல்நீரின் சமாதிகளாகும் நதிகள்.
கனவின் நதிகளில் நதிகளே கொள்ளை நோயில் பலியாகிட
பேருந்துகளில் ரயில்களில் வானூர்திகளில்
கருவில் சிசுவில் கனவின் விசமான
கார்ப்ரேட் மரபணுக்கள் சுமந்திடும் வணிகமயப் பிணங்கள்.
இனி உலக அதிசயமாகும்
பிள்ளையாரும் கோக் குடித்து கின்லேயில் குளிப்பது.
அர்த்தநாரீசம் அக்குவாபினாயிசமாகும்
அர்த்த சாமத்தில் நம் பிள்ளைகளின்
கறி தின்று டாலர்களிலேறி தாண்டவமாடி
நதியின் சாம்பல் பூசித்திரிவான் சுடலைமாடன்.
கனவிலும் நீரற்று
நனவிலும் நிலம் வறண்டபின்
நட்டக் கல்லும் பாடிக் கொண்டிருக்கும்
பொருட்பெருஞ்சோதி தனியார் பெருங்கருணை.

- சதீஷ் குமரன்

Pin It