கூர் நோக்கு விழிகளோடு
தலைக் கவசத்தில்
குறுகிய வாழ்வு சாலைகளில்

கார்களில் அடைக்கப்பட்ட
சதுர செவ்வக உலகுக்கு
வெளிக்காற்று இம்சை

அரிதினும் அரிதாய்
சைக்கிள் கிழவர்கள் சாபத்தில்
சல்லாபிக்கிறார்கள்

சரித்திரம் செய்யத் துடிக்கும்
குனிந்த இளைஞர்கள்
உடலால் கதறிக்கொண்டு பறக்கிறார்கள்

என்னை எப்படியாவது வாழவிடு என
மூக்கு நீட்டி வழி செய்து செல்லும்
ஆம்புலன்ஸ் மர்மம் நிறைந்தவை

நேரம் காலம் தெரியாமல்
எப்போது வேண்டுமானாலும் மூச்சடைத்து
நிற்கிறார்கள் முகநூல் மனிதர்கள்

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு
சரியாக பத்து நாள் இடைவெளியில்
ஆள் மாற்றிக் கொண்டேயிருக்கிறது
கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி

- கவிஜி

Pin It