வாயை மூடு
உனக்கென்ன தெரியும்
அதிகமா பேசாத
சொன்னா உனக்கு விளங்கவா போகுது
சும்மா கெட என அலுவல் அவசரத்தில்
காதில் செல்போன் வைத்துக்கொண்டே
தன் குழந்தைக்கு நாலுமுத்தங்களை
கப்பம் செலுத்தி பறக்கும் தாய்
மீண்டும் இரவு திரும்பியதும்
பத்து முத்தங்கள் கொடுத்து
சரிக்கட்டுகிறாள்
பிள்ளைகளிடமும் தலைவனிடத்திலும்.
பொம்மைகளுடன் விளையாடும் குழந்தைகள்
அம்மா பொம்மையை ஏக்கத்தோடும்
சற்றே விலக்கி வைத்தும்
வார்த்தைகளற்றே களிக்கின்றன விடுமுறைகளில்.
பொருள்வயிற் பிரிவும் வலியும்
நுகர்வெறியுலகில்
தாயார்களிடத்தில்தான் தாராளமயமாகித்
தாக்குகிறது.
பால்கட்டிய மார்பின் வலியாய்
கனக்கிறது காலம்
மடிக்கணினிக்குள் ..!

- சதீஷ் குமரன்

Pin It