மனம் நதியானது...

பொழுதனைத்திலும்
ஓயாது அலைகிறது...
சில நேரங்களில்
அமைதியாக
சில நேரங்களில்
ஆரவாரமாக..

கொந்தளிக்கும் மனதில்
ஆர்ப்பரித்து எழுகின்றன
ஆழப்பதிந்த நினைவுகள்..
தெளிந்த நீரோடையான
காட்சிப்பிழை கலைகிறது
கல்லெறிந்த குளமொன்றில்..

மறந்துவிட்டதாய் மறைந்திருந்த
நினைவுகள்
தலைநீட்டி தன்னிருப்பை
அறுதியிட்டுக் கொள்கின்றன
அமைதியிழந்த தருணங்களில்...

கரையோரத்து மரமொன்றில்
காத்திருக்கும் சிறுகுருவியாய்
அவதானிக்கிறேன்
ஆழ்மனதுள் மீண்டும் அவை
அடங்கிடும் அவ்வேளைக்காக...

 

தினங்களின் பதிவு

அவகாசமின்றி அலையும்
அவசர யுகத்திலும்
அலுக்காது பதிவுகளை
பகிரும் பகல் பொழுதொன்றில்
என் தினங்களின் பதிவை
புரட்டினேன்....

வண்ணங்கள் நிறைபொழுதுகள்
வானவில் வாழ்க்கையை
வரைபடம் காட்டியது..
கவனமாய் கடவுச்சொல்
காத்துநிற்கும் கதவினை
மெல்லத் திறந்தேன்..

மொழிகளற்ற பக்கங்கள்
முழுதுமாய் நிறைத்தன
என் மனவறையை ...
விழிவரிகள் வரைந்த
வலிநிறை பொழுதுகள்
வலிய வலம்வர
வலிந்து மீட்டுக்கொண்டேன்...
வண்ணப் பொழுதுகளில்
என்னைக் கரைத்து கொள்ள...

- அருணா சுப்ரமணியன்

Pin It