மாலையை எழுதலாமென வாசலுக்கு வந்தேன்
வாலாட்டி குருவியொன்று
பாடிக் கொண்டிருந்தது அந்தியை..
முருங்கை மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாக
கொத்தி கொத்தி உதிர்த்தது அந்தச் சூரியனை ..
கூடடையும் அவசரத்தில் திரும்பிக் கொண்டிருந்த மீன் கொத்தியொன்று
சடாரென குட்டையில் குதித்து கவ்விப் பிடித்தது அந்திக்கதிரை..!
தலையை தூக்கி மெல்ல மெல்ல
விழுங்க எத்தனித்து
வாகன அதிர்வில் நழுவவிட்டு பறக்க..
வியர்வை படபடப்பில் சிவந்தது சூரியன் ..
கண்மாயை சுமந்து வீடு பறக்கும் நீர்க்கோழியின் அலகில்
தொங்கியபடி
மேகப்புதர்களில் மறைந்து
ஒதுங்கியது அந்தி..!
எதுவும் எழுதத் தோணவில்லை விட்டுவிட்டேன் இப்படியே ..

- சதீஷ் குமரன்

 

Pin It