அவர்கள் இருவருக்கிடையே 
சமீபகாலமாக சண்டையுண்டு என்பதை 
நான்தான் கண்டுபிடித்தேன் 

அதற்கு முன்பு 
அவர்களுக்குள் 
ஆழ்ந்த 
யாருக்கும் தெரியாத 
பெயரிடப்படாத உறவு இருந்ததை
நான்தான் தெரிந்து வைத்திருந்தேன் 

ஒருவர் இரவென்றால் 
இன்னொருவர் 
எப்போதும் நிலவு என்று 
சொல்வதற்கு பழக்கப்பட்டிருந்தார் 

அவர்கள் 
யாருக்கும் தெரியாமல் 
எங்கு சந்திப்பார்கள் 
என்ன பேசிக்கொள்வார்கள் 
அவர்களின்  வீட்டில் 
ஏன் ஏதுமே கேட்பதில்லை 
என்று தினமும் யோசித்தேன் 

இடக்கையால்  தள்ளி 
வலக்கையால் மறைவாகத்தின்னும் 
விநோத பண்டமாக 
அவர்களின் கதை 
ருசித்துக்கொண்டே இருந்தது 

அவர்களுக்குள் எதுவுமே இல்லை 
எல்லாம் கற்பனை 
நேரடியாகப் பார்த்தாயா என்றும் 
நிறைய நாட்கள் எனக்குள் புலம்பினேன் 

நேரடியாகப் பார்த்தால் 
அந்தக் கதைக்குள் ஒருவராக
நானும் மாறிவிடக்கூடும் என்று 
ஒரு போதும் 
அவர்களுடன் சென்றதில்லை 

தனிமையில் 
அவர்களை எப்போதும் 
இணைத்துக் கொண்டே இருந்தேன் 
ஆனால் 
மோதி மோதிச் சிதற ஆரம்பித்தார்கள்.

அவர்கள் 
அவர்களாக 
தனித்தே இருக்கிறார்கள்.
நான்தான் 
அவர்கள் இருவருக்குள்ளும் 
கதையாக 
பரவிக் கொண்டே இருக்கிறேன். 

- இரா.கவியரசு

Pin It