தனித்து
விடப்பட்ட
இரவொன்றில்
தவித்துப் போய்
அரற்றியிருக்கிறீர்களா?

துயரம்
அப்பிய பொழுதொன்றில்
தோளணைத்திட
யாருமின்றி
தூரமாய் நின்றபடியே
உங்களை நீங்களே
பார்த்திருக்கிறீர்களா?

அழுவதற்கென
காரணமெதுவுமின்றி
அருவிக் கரையோரம்
ஆர்ப்பரிக்கும் இரைச்சலுக்கிடையே
நின்று அழுது
தீர்த்திருக்கிறீர்களா?

எல்லாம்
இருந்த போதிலும்
ஏதுமற்றோர் போல்
தவிக்கிற தருணத்தை
என்றேனும் கடந்திருக்கிறீர்களா?

அனலாய்
உடல் கொதிக்கையில்
எழும்பிடத் தெம்பின்றி
பாயோடு பாயாய்
படுத்துறங்கியே
பொழுதத்தனையும்
நகர்த்தியதுண்டா?

உயிர் உள்ளவரை
உடன் வருவேன் என்ற
உற்ற துணையொன்று
தக்க தருணத்தில்
தவிர்த்ததையெண்ணி
விட்டம் வெறித்து
வெறுத்து நின்றிருக்கிறீர்களா?

எப்போது
எந்தச் சூழலிலும்
எங்கு கேட்டாலும்
நின்று கேட்கச் செய்கிற
பாடலொன்றை
நில்லாது நிமிடத்தில்
நீங்கியதுண்டா?

இவையெல்லாம்
உங்களுக்கு
நிகழாதிருப்பின்
நானெப்படி
இருப்பேன்
உங்களோடு!

தனிமைக்கும்
தவிப்பிற்கும்
அன்பிற்கும்
ஆதங்கத்திற்கும்
விரக்திக்கும்
வெறுப்புக்குமென
சுவற்றில் அறையப்பட்ட
பந்தென திரும்பாதிருந்தால்
நிச்சயமாய் நீங்கள்
வாழவேயில்லை!
வாழ்வோ
மெல்ல நகர்கிறது.

- இசைமலர்

Pin It