வாழ்வின் அழுத்தங்கள்
ஒவ்வொன்றும்
இதயத்தை குத்திக்
கிழிக்கின்றன
ரணங்களை
எதைக் கொண்டும்
ஆற வைக்க முடியவில்லை
மனைவியின் தலைக்கோதல்
குழந்தையின் முத்தங்கள்
அம்மாவின் ஒப்பாரிகளென
எதிலும் லயிப்புமில்லை
அரசியல் குழப்பங்கள்
தற்கொலைகள்
முட்டாள் தனமான தீர்ப்புகள்
போராட்டங்களென
எதிலும் ஈடுபாடில்லை
அர்த்தமின்றி குப்பை சுமக்கும்
பைத்தியத்தைப் போன்று
வெறுமையான நினைவுகளைச்
சுமந்து திரிகிறேன்
நட்சத்திரமணிந்து சுற்றும்
தேவதைகளலையும்
பால் வீதி செல்ல நினைக்கிறது
ரணப்பட்ட மனம்
அறிவுஜீவித்தனம்
அதனையும் தடுக்கிறது
அந்நியமாதலின் சூல் கொண்டு
அல்லல்படுகிறது மனம்.

- துவாரகா சாமிநாதன்

Pin It