மிகவும் ரகசியமாக
எனக்கு பிடித்த லைன் வீடுகளை
நான் நினைப்பதில்லை

கொய்யா மர உச்சியில்
பேயாகி ஒளிவதை
நினைக்காதபடி நகருகிறேன்

சந்திரபோஸ் அண்ணாவைப் போல
ஹீரோவாகி விட நினைத்த இளமையைக்
காணவில்லை

கதை சொன்ன மாமாவை
நான் கதை சொல்லி மிரட்டிய பாட்டியை
"குட்டி" கதையெல்லாம் எழுதுவான் என
பெருமை பேசும் மச்சானை
நினைக்காத நாள் ஒன்று தேவை எனக்கு

சின்ன பாலம் புதைத்துக் கொண்ட
எனது சிவக்குமாரின் சுப்ரமணியின்
வெள்ளைப்பாண்டியின் தோழமையை
எங்கோ தொலைத்து தான் விட்டேன்

கிரேஸ் மேரியைத் தவிர
நான் மீண்டும் பார்த்து விட்ட
தோழிகளில் எவரேனும்
"விஜி"யை காணவில்லை என்றே கூறலாம்

தனித்த என் மடல் ஒன்றை
விழி கொண்டு செதுக்கி
வனம் இனிக்க நடந்தே செய்த
மலைகளில் இன்றும் ஊர்ந்து
கொண்டிருக்கிறது
எனக்கான கொண்டை ஊசி வளைவுகளும்
வழிந்தோடும் என் தேச சிறகுகளும்....

- கவிஜி

Pin It