lady in bed 1கனவுகள் துரத்திட
கண் விழிக்கிறேன்...
தூக்கப் பொழுதிலும்
துக்கம் உணர்கிறேன்.

அலைபேசியில் மணி பார்க்க
அதிகாலை 3.20
உன்னை எழுப்பிட மனமின்றி
எழுந்தே சிறிது நடக்கிறேன்.

விடியும் வரை
விழித்தே கிடக்கிறேன்
கலக்கமான வேளைதனில்
காலமும் ஆமைநடை நடக்கிறது!

பதட்டம் தணிக்க
பாடல் கேட்கிறேன்.
பாடலைத் தாண்டியே
பயணிக்கிறது கனவின் நீட்சி!

விடியலின் வெளிச்சம்
வீதியில் உலா வர..
விருட்டென எழுந்து
அழைக்கிறேன் அலைபேசியில்.

முழுதும் அடித்து முடித்தும்
எடுக்கப்படாத அலைபேசி...
இன்னும் சேர்த்தடைகிறது
இமை நிரப்பும் இன்னலை...

நேரங்கெட்ட நேரத்தில்
தூங்கி விழிக்கும் உனக்கு
அழைக்கிற அலைபேசியும்...
அலைபாயும் அலைவரிசையும்..
கேட்கவா போகிறது?

மறுபடியும் முயற்சிக்கிறேன்..
காரணமற்று கலங்கும் மனதிற்கு
ஆறுதல் சொல்லவாவது
அலைபேசியை எடு!

இதோ இன்னுமொரு முறை
"சொல்லு" எனும் உன் குரலால்
உயிர் பெறக்கூடும் மனது
உள்ளடங்கிப் போகும் துர்கனவு!

- இசைமலர்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.