புழுதி படிந்திருக்கும் என்
நேற்றைய பிம்பங்களை
என் அறையின்
இடது பக்கச் சுவரில்
சாய்த்து வைத்திருக்கிறேன்.
கனவு கண்டு கொண்டிருப்பதாய்
எனக்கு நானே
பொய் உரைத்துக் கொண்டு
எதிர்க் கோட்டில்
நடந்து கொண்டிருக்கிறேன்.
இருப்பினும்
என் விழி மையத்துக்குள்
நான் செல்லாத திசைகள்
மீதான நிழல்கள்.
காற்றடிக்கும்போது படபடக்கும்
பொய்கள் அத்தனையையும்
ஈர அலைகளுக்குள்
காகிதக் கப்பல்களென
மிதக்க விட்டுவிட்டேன்.
இந்நேரம்
அவை மூழ்கியிருக்கும்.
சுழன்று கொண்டிருந்த
காற்றினடியில்
உருண்டிருந்த மணலுக்குள்
புதைத்து விட்டேன்
உடைந்து விட்ட என் பிம்பத்தை
அப்படியே பிரதிபலித்த
கண்ணாடித் துண்டு ஒன்றை.
என் அறை இருளில்
உருகிக் கொண்டிருக்கும்
மெழுகின் நுனிக்குள்
சிறகு வடிவத்திலொரு
பெருநெருப்பு ஒளிந்திருப்பதாகக்
கற்பனை ஒன்று
வந்த போதுதான்
இடது பக்கச் சுவரில்
நான் சாய்த்து வைத்திருந்த
புழுதி படிந்த
என் பிம்பத்துக்கு
நிழல் ஒன்று
வளர்ந்து கொண்டிருந்தது.

- கிருத்திகா தாஸ்

Pin It