ஒவ்வொரு நாளும்
நேற்று ஒரு கனவு கண்டேனெனக்
கதைசொல்லியாகிப்போனேன்
நம்புங்கள் 
மலைமீது ஏறிச் செல்கிறேன்
சறுக்காத நினைவுகள் அவை
கருநாகமொன்று சாலையில்
ஊர்ந்து செல்கின்றது
தீண்டாத பயமது
வகுப்பறையில் உட்கார்ந்திருக்கிறேன்
சாளரத்தின் வழியே 
தெருவொன்று ஆட்களேயன்றி
பயணிக்கும்  வேடிக்கையுமுண்டு
இது மட்டுமாவென அரற்றும் 
திகில்ச் சாரல்களும் நீட்சிகளடைய,
யாரோ துரத்துகிறார்கள்
உயிரைப் பணயம் வைத்துத்
துரத்துகின்றேன் என்னை;
இரு விரல்களில் ஏதோ தென்பட
உருட்டிப் பார்க்கிறேன் 
நூலொன்று திரிந்து விடுபடுகிறது
இப்படியே ஒவ்வொரு முறையும்
தப்பித்துவருகிறது கனவு
என்றாவது மாட்டிக் கொள்ளும் போது
எழுப்புகிறதாவென்று 
பார்க்கத்தான் போகிறீர்கள்...!

- புலமி

Pin It