நீண்ட காலத்துக்குப் பின்
பேசுகிறோம்...
மௌனங்களை
மொழியாக்க தெரியும் உனக்கு...
அழுகையை சிரிப்பாக்கிய
பழைய ஞாபகம் எனக்கு...
மென்சாரல் சாரளத்தில்
வளைவுகளே தூரங்களாய் இங்கே...
காடுமலை கனவுகளை
அலைபேசிக்குள் அலையவிட்டதாய் அங்கே....
வருத்தம் சோகம் புன்னகை நீ...
நினைவு கிளறல் நிஜம் நான்...
சற்று முன் சுற்றிய பூமிக்கு
வெளியே நம் பால்ய பிம்பங்கள்...
கடந்த கால தேசங்களை
வழித்தெடுத்து இன்று செய்ய
வகையாய் மனம் நிறைய நம்
சொற்கள்...
போதும் என்ற பொருளை
கடந்தே ஞானியான
நம் இருவருக்குள் நாமே
இருவராய்...
யாதும் யாவும் கடக்கும்
என்று என்றோ பேசிக் கொண்டதை
இன்றும் பேசினோம்...
என்றாவது மீண்டும் பேசுவோம்
கடக்கும் யாதும் யாவும் நாமும்
என்று...!

- கவிஜி

Pin It