man walkingஆற விட்டு,ஆறவிட்டு
அருந்தி முடிக்கிறேன்

காலம் என்னிடம் கையளித்த
இந்த தேனீர் கோப்பை
தீரும் நேரம்

பழகிப் பழகி பருகியாயிற்று
இனிப்பில் தொடங்கி
கசப்பில் முடிகிறது கடைசித்துளி

நிலைக்க விடாது நிதம்
பின் தொடர்கின்ற
பிணக்குகளை விட்டும்
துரிதமாய் நான் மிக தூரமாவேன்

இப்போது கடக்க இருக்கும் படி
கடைசிப் படியாய் இருக்கலாம்
இந்நொடி உள்ளிழுத்த சுவாசம்
இறுதி மூச்சாய் இருக்கலாம்

எந்த குளிருக்கும் தெரியாத
ஒரு கோடையை
எந்த பகலும் அறிந்திரா
ஒரு இரவை
எந்த பேச்சுக்கும் பதிலற்ற
ஒரு மௌனத்தை
நிரந்தரமாய்
நான் விட்டுச் செல்வேன்!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It