தகாத வருணக் கொடுமைகள் நோக்கார்
மகான்கள் எனினும் யாம்வேண் டலமே
அரசியல் ஆன்மிகம் சமூகப் பணியெனப்
பரபரப் பாகப் பலவகை களிலும்
தொண்டுகள் செய்து நல்லவர் என்றே
மண்மீ தினிலே புகழ்பெறு வோரே
வருணக் கொடுமை நீக்கும் செயல்களைப்
பெரும்பணி யாகக் கொள்ளா திருந்தால்
தீர்வைத் தராது உண்மையில் அவையெலாம்
பார்ப்பன அடிமைத் தனமே யாகும்

((உயர்சாதிக் கும்பலினர் திறமை இல்லாவிட்டாலும் உயர்நிலைகளிலேயே வேலை செய்ய வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் திறமை இருந்தாலும் கீழ் நிலைகளிலேயே வேலை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தும்) தகாத வருணக் கொடுமைகள் (நீங்க வேண்டும் என்று அதன்) பக்கம் பார்வையைச் செலுத்தாதவர்கள் மகான்கள் என்று கூறப்பட்டாலும், அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை. அரசியல், ஆன்மீகம், சமூகப் பணி என்று பலவகைகளிலும் பரபரப்பாகத் தொண்டுகள் செய்து இம்மண்ணில் நல்லவர்கள் புகழ் பெற்றுள்ளவர்களே! (நீங்கள்) வருணக் கொடுமைகளை நீக்கும் செயல்களை முதன்மையான பணியாகக் கொள்ளாது இருந்தால் உங்களுடைய பணி (சமூகப் பிரச்சினைகளுக்குத்) தீர்வைத் தராது. உண்மையில் அவையெல்லாம் பார்ப்பன அடிமைத்தனமே ஆகும்)

- இராமியா

Pin It