ஆண்டையின் பண்ணையின் சுரண்டல் அரசை
மாண்பெனப் புகழ்ந்து நத்திப் பிழைத்தோம்
சந்தையின் ஆட்சி அமைந்த போது
நொந்தோம் இல்லை முதலியைச் சார
முதலிய வளர்ச்சியில் புவிவெப்பம் உயர்ந்து
உலகை அழிக்க வருகின்ற நிலையைப்
பலவகை யாலும் உண்மை கூறினும்
சந்தையின் அழிவும் சமதர்ம வழியுமே
புந்தியில் தோன்றும் ஒற்றை வழியெனக்
கூறா தும்மருள் இறைஞ்சும் எமக்கு
மாறா துதவிகள் பொழிந்தருள் வீரே

((அறிவு ஜிவிகளாகிய நாங்கள்) அடிமைச் சமுதாயத்திலும் நிலப் பிரபுத்துவச் சமுதாயத்திலும் (ஆதிக்க வர்க்க) சுரண்டல் அரசை மிகவும் சிறப்பான அரசு என்று புகழ்ந்து நத்திப் பிழைத்தோம். முதலாளித்துவ ஆட்சி அமைந்த போது, சிறிதும் வருத்தப்படாமல் முதலாளிகள் பக்கம் சாய்ந்து விட்டோம். முதலாளித்துவ வளர்ச்சியில் புவிவெப்பம் உயர்ந்து உலகம் அழிந்து வருகின்ற நிலையைப் பலவகையாலும் உண்மையைக் கூறினாலும், முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்து விட்டு சோஷலிச உற்பத்தி முறையை ஏற்பது தான் (இந்த ஆபத்தில் இருந்து தப்புவதற்கான) அறிவு பூர்வமான ஒரே தீர்வு என்பதை வெளியே கூறாமல் முதலாளிகளின் அருளை இறைஞ்சி நிற்கும் எங்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்ய வேண்டும்.)

Pin It