உண்பது நாழி; உடுப்பது இரண்டே;
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
அதனால் செல்வத்துப் பயனே ஈதலெனப்
பதமாய் உரைத்து முடியா வர்க்க
ஒற்றுமைக் காக முயல்வதை விடவும்
முற்றிலும் உடைமை வர்க்கம் ஒழித்து
வண்மை இல்லை வறுமை இலையாலெனும்
திண்மைச் சமூகம் அமைத்திடல் நலமே.

((உலகில் உள்ள பணக்காரர்கள் முதல் ஏழைகள் வரையிலான மனிதர்கள் அனைவருக்கும் தேவைப்படுவது) உண்பதற்கு நாழி அளவு தானியமே; உடுப்பதற்கு (இடுப்பில் கட்டும்) அரையாடை, மேலாடை ஆகிய இரு ஆடைகளே; மற்ற தேவைகளும் அனைத்து மக்களுக்கும் பொதுவே; அதனால் (செல்வர்களிடம்) செல்வத்தின் பயன் ஈதலே என்று பதமாக உரைத்து, (உழைக்கும் மற்றும் சுரண்டும்) வர்க்கங்களுக்கு இடையே (தீர்க்க முடியாத முரண்பாண்டைத் தீர்த்து) ஒற்றுமையை ஏற்படுத்த முயல்வதைக் காட்டிலும், உடைமை வர்க்கத்தை முற்றிலும் ஒழித்து, வறுமை இல்லாத காரணத்தால் வள்ளன்மை இல்லாமல் போயிற்று என்று கூறும்படியான உறுதியான (சோஷலிச) சமூகத்தை அமைப்பதே நலமானது.)

Pin It