லூலா என பெரும்பாலும் குறிப்பிடப்படும் லூயிஸ் இனாசியோ லூலா தா சில்வா (Luiz Inacio Lula Da Silva) 3 ஆவது முறையாக பிரேசில் நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஏற்கனவே இருமுறை (2002. 2006,) அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு லத்தீன் அமெரிக்கா முழுவதும் இடதுசாரிகள் வெற்றி பெற உத்வேகம் அளித்தார். அவரது கட்சியான தொழிலாளர் கட்சி (PT - Patidos des Trabalhadoves) யின் வேட்பாளராக அவரது தோழியர் தில்மா ரூஸோ (Dilma Vana Rousseff) இருமுறை (2010. 2014) அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பில் இருந்தார்.

பிரேசில் ஒரு மிகப்பெரும் நாடு. பரப்பளவில் உலகின் 5 ஆவது இடமும் (85 லட்சம் ச.கி.மீ.இந்தியா 33 லட்சம் ச.கி.மீ) மக்கள் தொகையில் 7 ஆவது இடமும் (21.8 கோடி; இந்தியா 138 கோடி) வகிக்கும் நாடு. லத்தீன் அமெரிக்காவின் ஆகப் பெரிய பொருளாதாரம் (ஜி.டி.பி.(ppp) 3.585 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்; சராசரி தனிநபர் ஜி.டி.பி. (ppp) 16,783 அமெரிக்க டாலர்கள். இந்தியா ஜி.டி.பி. (ppp) 11.754 டிரில்லியன் சராசரி தனிநபர் ஜி.டி.பி. (ppp) 8,358, அந்த வகையில் 23 நாடுகள் அடங்கிய லத்தீன் அமெரிக்காவின் அரசியல் பொருளாதார போக்கைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்ட நாடு; லத்தீன் அமெரிக்காவையும் தாண்டி சர்வதேச அளவில் கீழ்க்கண்ட நாடுகள் (Tre Continental Countries) என இப்போது அழைக்கப்படும் ஆகிய. ஆப்பிரிக்க. லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் பொருளாதாரப் போக்கில் பெரும் செல்வாக்கை செலுத்தக்கூடிய ஆளுமை லூலா.lula brazilகியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ, வெனிசூலாவின் சாவேஸ் ஆகியோர் ஆரம்பித்து வைத்த, ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெருமுதலாளித்துவ எதிர்ப்பு ஆகிய பதாகையை உயர்த்திப் பிடிக்கும் வலுவான தலைமையாக உருவானவர் லூலா. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அந்நிய முதலீட்டில் பெரும்பகுதி (சுமார் 75% என சில மதிப்பீடுகள் கூறுகின்றன) இருக்கின்ற லத்தீன் அமெரிக்க நாடுகளைக் கடந்த 200 ஆண்டுகளாக தனது கொல்லைப்புறமாகவே அமெரிக்க ஏகாதிபத்தியம் கருதி வந்தது, கையாண்டும் வந்தது. எனவே லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு கூட்டணியாகவும் தமக்குள் பரஸ்பர பொருளாதார கூட்டுறவில் உதவிக் கொள்பவையாகவும் மாறுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவயிற்றில் கத்தியைப் பாய்ச்சும் செயல். எனவே தான் கியூபாவில் காஸ்ட்ரோவின் ஆட்சியைத் தூக்கு ஏறிய 8 அதிபர்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக பாடுபட்டனர். அவர்கள் முயற்சி வெற்றி பெறவில்லை. 1973 செப்டம்பர் 11அன்று (முதலாவது 9/11) சிலியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட்டான சால்வடார் அலைந்தே அவர்களை அதிபர் மாளிகையிலேயே வைத்து கொலை செய்து, ஆட்சியைக் கலைத்து அகஸ்தோ பினோசேயின் குரூரமான சர்வாதிகாரத்தையும் அதன் படுகொலைகளாகவும் 40 ஆண்டுகாலமாக முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தினர். கியூபாவில் தவறவிட்டதை சிலியில் சாதித்தனர். சாவேஸ் தேர்தலில் வெற்றிபெற்று அதிபரானபோதும் சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் பயன்படுத்தியும் தோல்வி கண்டனர்.

காலம் மாறியுள்ளது; சர்வதேச அளவில் வர்க்கங்களுக்கு இடையேயான சமன்பாடுகள் மாறியுள்ளன; அமெரிக்க; ஐரோப்பிய பொருளாதார நிலை மாறியுள்ளது. சோவியத் எனும் எதிர் துருவம். எதிர்முகாம் இல்லாத நிலையிலும் முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடு ஏகாதிபத்தியத்தை பாதிக்காமல் இல்லை. சிலியில் செய்ததை வெனிசூலாவில் செய்ய இயலவில்லை. வெனிசூலாவிலும், பிரேசிலிலும் இன்னும் பொலிவியா போன்ற நாடுகளிலும் வேறு வழிமுறைகளைக் கையாண்டு ஏகாதிபத்திய எதிர்ப்பை தற்காலிகமாகவாவது தடுத்து நிறுத்த அமெரிக்காவிற்கு சாத்தியப்பட்டுள்ளது. பொலிவியாவின் அதிபர் ஈவா மொரேல்ஸ், 2020 ஆம் ஆண்டு பதவி துறந்து நாட்டை விட்டு வெளியேறி ஏதிலியாக மெக்ஸிகோவில் இருக்கின்ற நிலை உருவானது. லூலாவும், தில்மா ரூஸோவும் சிறை சென்று நீண்ட சட்டப்போராட்டத்தின் முடிவில்தான் வழக்குகளை வென்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிந்தது. பொலிவியாவிலும் 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மொரேல்ஸின் சோசலிசத்திற்கான இயக்கம் (MAS - Movimiento Al Socialismo) கட்சியைச் சேர்ந்த லூயிஸ் அல்பெர்ட்டோ அர்ஸ் கட்டகோரா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தொடரும் இந்தப் போராட்டத்தில்தான் 2021 ஆம் ஆண்டு சிலியில் கேபிரியல் போரிக் அவர்களும் 2022 ஆம் ஆண்டு கொலம்பியாவில் குஸ்தபோ பெட்ரோ அவர்களும் அதிபர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இப்போது இந்த வெற்றிகளின் சிகரமாக பிரேசில் நாட்டின் அதிபராக லூலா தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.

2014 ஆம் ஆண்டு பிரேஸிலின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த தில்மா ரூஸோ பதவிக் காலம் 2018 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்திருக்கும். பிரேசில் நாட்டின் அரசியலைப்புச் சட்டத்தின்படி ஒருவர் இருமுறைக்கு மேல் தொடர்ச்சியாக அதிபர் பதவியில் இருக்க முடியாது. எனவே 2018 தேர்தலில் தில்மா வேட்பாளராக இருக்க முடியாது. ஆனால் பிரேஸில் வரலாற்றில் ஆகப் பெரும் செல்வாக்குப் பெற்ற தொழிலாளர் வர்க்கத் தலைவரான லூலாவை மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்க பிரேசில் தயாராகி வந்தது. எல்லா கருத்துக் கணிப்புகளும் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்றன.

2018 தேர்தலில் அவரை மீண்டும் போட்டியிடச் செய்ய தொழிலாளர் கட்சி தயாராகி வந்தது. லூலாவும் தயாராகி வந்தார். ஆனால் 16 ஆண்டு காலம் இடதுசாரிகள் ஆட்சி தங்களுக்கு கடிவாளம் இட்டு இருந்ததை ஏகாதிபத்தியத்தாலும் பெரு தொழிலாளித்துவத்தாலும் அவர்களது எடுபிடிகளாலும் கத்தோலிக்க மத அடிப்படைவாதிகளாலும் பொறுக்க இயலவில்லை. இத்தனைக்கும் லூலாவின் ஆட்சியும் தில்மாவின் ஆட்சியும் மிகவும் நிதானமான நடவடிக்கைகளையே எடுத்தனர். அவர்கள் மிகவும் அதிகமாக ஆளும் வர்க்க மேட்டுக் குடிகளுக்கும் விட்டுக் கொடுத்துவிட்டனர் என்றே தீவிர இடதுசாரி கட்சிகளும் அறிவுஜீவிகளும் இடித்துரைத்து வந்தனர். ஆனால் சுமார் 500 ஆண்டு காலம் எந்தவித இடையூறும் இன்றி சுரண்டிக் கொழுத்த ஆதிக்க சக்திகளால் தொழிலாளர் கட்சியின் மிகவும் மெல்லிய எதிர் நடவடிக்கையும் தாங்க முடியவில்லை.

2018 தேர்தலில் லூலா மீண்டும் தேர்ந்தெடுக்கப் படுவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த ஆதிக்க சக்திகள் துடித்தனர். ஆனால், தேர்தலில் அவரைத் தோற்கடிக்க இயலாது என்பதையும் உணர்ந்திருந்தனர். 2018 ஆம் ஆண்டு உலகம் 1973 உலகமல்ல என்ற எதார்த்தமும் அவர்களுக்கு புரிந்திருந்தது. 1973. 9/11 என அழைக்கப்படும் நிகழ்வில் அலந்தேயை கொன்றது போன்ற செயல்கள் சாத்தியப்படாது என்பது வெளிப்படை. எனவே வேறு விதிகளில் லூலா பதவிக்கு வருவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தனர்.

2018 தேர்தலில் லூலா போட்டிபோட இயலாது தடுக்க சதி வலை பின்னினர். ஆனால், தில்மா ரூஸோ அதிபராக இருந்தால் இதனை நடத்த இயலாது என உணர்ந்தனர். எனவே 2016 ஆம் ஆண்டே ஒரு போலியான ஊழல் குற்றச்சாட்டில் தில்மா ரூஸோவை பதவி நீக்கம் (Impeachment) செய்ய வழி வகுத்தனர். அன்றைக்கு துணை அதிபராக இருந்த மைக்கேல் தீமெர் (Michel Temer) எனும் பிரேஸில் ஜனநாயக இயக்கக் கட்சி (PDMB - Brazil Democratic Movement Party) தலைவரும் அதற்குத் துணை போனார். அவரது கட்சி இந்தியாவின் மன்மோகன் சிங் காலத்து காங்கிரஸ் போன்ற ஒரு வலதுசாரி தாராளவாதக் கட்சிதான். அவரே பிரேசிலிய எண்ணெய்க் கம்பெனியான பெட்ரோபிராஸ் (இந்தியாவின் ஓ.என்.ஜி.சி ONGC - போன்றது) நிறுவனத்தின் கட்டுமான ஒப்பந்தக் காரர்களிடம் பெருந்தொகையை தனது தேர்தலுக்கு நன்கொடையாகப் பெற்றிருந்தது. 2006 ஆம் ஆண்டிலிருந்தே பிரேஸிலில் இருந்த அமெரிக்க தூதராலயத்திற்கு தகவல்களை அளித்து வந்தது என்பது போன்றவை எல்லாம் ப¤ன்னர் விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்தது. இது தவிர லூலாவிற்கு எதிராக அமெரிக்க தூதராலயத்தோடு இணைந்து திட்டமிட்டு செயல்பட்டு வந்ததும் வெளியானது. இப்படிப்பட்ட சக்திகளையும் இணைத்துத்தான் அதி தீவிர வலதுசாரி ஃபாசிஸ்டு சக்திகளையும் சர்வாதிகார சக்திகளையும் லூலா தலைமையிலான பிரேஸில் இடதுசாரிகள் தடுத்தனர்.

தில்மா பதவி நீக்கம் செய்யப்பட்டபின் லூலாவின் மீது வழக்குத் தொடர்ந்தனர். ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தைக் கட்டினார். அது சம்பந்தமாக தானே ஈடுபடாத ஊழலில் (Passive Corruption) ஈடுபட்டார் என்பது குற்றச்சாட்டு. குற்றம் நிருபிக்கப்படும்வரை யாரும் நிரபராதி போன்ற அடிப்படையான நீதி நெறிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு, லூலா தண்டிக்கப்பட்டார் சிறை ஏகினார். 2018 தேர்தலில் போட்டியிடாது செய்யப்பட்டார். நீதிமன்றம் தீர்ப்புக் கூறும் முன்னரே பெரு முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள பத்திரிகைகள், இதழ்கள், தொலைக் காட்சிகள் வன்மம் கக்கின. தினசரி லூலாவை ஒரு ‘திருடன்’ எனச் சித்தரித்தன. காலங்காலமாக பிரேசிலில் இருந்து வரும் சட்டம் ஒழுங்கு, லஞ்சம், ஊழல், நிர்வாகக் கோளாறுகள் அனைத்திற்கும் லூலாவே காரணம் எனக் குற்றஞ்சாட்டின.

தில்மாவை பதவி இறக்கி அதிபரான மைக்கேல் தீமெர் தேர்தலில் நிற்கவில்லை. 2017லேயே கருத்துக் கணிப்புகளில் அவர் வெறும் 7% வாக்குகள்தான் பெற்றா¢. 78% பேர் அவர் பதவி விலகவேண்டும் என்று கருத்து கூறியிருந்தனர். தீமெர் மேலும் ஊழல் குற்றச்சாட்டு வலுத்து அவரையும் பதவி விலக்க முயற்சி நடந்தது. அது நடக்கவில்லை என்றாலும் அவர் 8 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2017 இல் உச்சநீதிமன்றம் தில்மாவை ‘குற்றம் நிருபிக்கப்படவில்லை' என தீர்ப்பு வழங்கி விடுவித்தது. மைக்கேல் தீமெர் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவதை நாடாளுமன்றம் தடுத்து நிறுத்தியதால் அவர் சிறை செல்லாமல் தப்பித்து அரசியலை தலை முழுகினார்.

2018 அதிபர் தேர்தலில் கடைந்தெடுத்த வலது சாரியும் முன்னால் ராணுவ அதிகாரியுமான ஜயிர் போஸ்ஸோனாரோ, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு கும்பல்களாலும் ஆதரிக்கப்பட்டு போட்டியிட்டார். மற்றொரு முன்னாள் ராணுவ அதிகாரியும் அமெரிக்க பழங்குடியைச் சேர்ந்தவரும் 1964-1985 இன் கொடுமையான இராணுவ சர்வாதிகாரத்தை ஆதரித்து நின்றவருமான ஹமில்டன் மௌரோ துணை அதிபராகப் போட்டியிட்டார். சகல விதத்திலும் மோசமான பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர் கட்சியின் சார்பில் பெர்னாண்டோ ஹட்டாட் அதிபராகவும், பிரேஸில் கம்யூனிஸ்ட் கட்சியின் மானுவெலா அவிலா துணை அதிபராகவும் போட்டியிட்டனர்.

போல்ஸ்னோரா தேர்ந்தெடுக்கப்பட்டதும் கொரோனோ காலம் உள்ளிட்ட பதவி வகித்த காலம் முழுவதும் ஒரு ஃபாசிச அரசை நடத்த முயற்சித்ததும் வரலாறு. தன்னளவில் ஒரு பெரிய ஜனநாயகவாதி அல்ல என்றாலும் துணை அதிபர் மௌரோ போல்ஸ்னோராவின் அதீதங்களைத் தடுக்க முயற்சித்து தோற்றார். அவரது எதிர்ப்பின் காரணமாக 2022 தேர்தலில் அவரை போல்ஸ்னோரா துணை அதிபருக்கு போட்டியிட அனுமதிக்கவில்லை. மற்றுமொரு முன்னால் ராணுவ ஜெனரலான வால்ட்டர் நெட்டோவை துணை அதிபராக அறிவித்தார்.

எல்லாவிதமான தடைகளையும் தாண்டி லூலா அதிபராகவும், ஜெரால்டு ஃபிலோ துணை அதிபராகவும் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் மூலம் லத்தீன் அமெரிக்காவின் அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் அமைந்துள்ளன. இத்தாலியிலும், ஸ்வீடனிலும் தீவிர வலதுசாரி பிற்போக்கு ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில், பிரேஸிலில் இந்த வெற்றி உலகெங்கும் உள்ள இடதுசாரிகளுக்கு நம்பிக்கை ஊட்டும்.

லூலா, 2018, ஏப்ரல் 7 ஆம் தேதி 12 ஆண்டுகள் ‘சிறை தண்டனை’ எனும் தீர்ப்பை ஏற்று சிறை சென்றார். சிறை செல்வதற்கு 2 மாதங்கள் முன்பு 2018 ஜனவரி 31 ஆம் தேதி, இடதுசாரி பத்திரிகையாளர்களும், பேராசிரியர்களுமான இவானா ஜின்கிங்ஸ், கில்பெர்டோ மாரிங்கோணி. ஜூக்கா ஃபூரி, மரியா இனைஸ் நாசிஃப் ஆகியோருக்கு ஒரு நீண்ட நேர்காணல் அளித்தார். லூலாவின் பின்புலம், குடும்பம், வாழ்க்கை, தொழிற்சங்கப்பணி, தொழிலாளர் கட்சியின் தொடக்கம், அரசியல் போராட்டங்கள் அதிபராய் இருந்த அனுபவங்கள். அவருக்குப் பின் தில்மாவை அதிபராக அவர் முன்மொழிந்த காரணங்கள் ஆகியவை அனைத்தையும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றியும் சற்றே நகைச்சுவையுடன் கூடிய சுய எள்ளலோடும் விவரிக்கின்றார்.

அத்தோடு சுதந்திரமான முறையில் பிரேஸிலின் தொழிலாளர் கட்சி எனப்படும் பி.டி (P.T. Partido dos Trabalhadores) ஏனைய இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து வேறுபட்டது என்பதை விளக்குகின்றார். அத்தோடு சர்வதேச அரசியல் நிலை. தன் அரசின் சாதனைகள் முழுமையான தனிப் பெரும்பான்மை இல்லாமல் அரசியல் இருக்கும் போது செய்ய வேண்டிய சமரசங்கள் ஆகியவை குறித்தும் விளக்குகின்றார். அவரும் அவரது கட்சியும் இந்தியாவின் காங்கிரஸ் போன்ற பூர்ஷ்வா ஜனநாயகக் கட்சிகளோடும் வேறு சில சிறிய வலதுசாரி போக்கு கொண்ட கட்சிகளோடும் செய்துகொள்ளும் சமரசம் குறித்து தீவிர இடதுசாரிகளின் விமர்சனத்திற்கும் பதில் அளிக்கின்றார். அவருக்குப் பின் அதிபர் பதவிக்கு வந்து தில்மா ருஸோ காலத்தில் நடந்த தவறுகள் எவ்வாறு தில்மா பதவி நீக்கம் செய்யப்படுவதற்கும், தான் சிறைக்கு செல்ல நேர்ந்திருப்பதையும் குறித்து விளக்குகின்றார். தெளிவான மார்க்சிய. லெனினிய பதங்களில் இல்லையென்றாலும் ஏகாதிபத்தியத்திற்கும், பிரேசிலிய பெரு முதலாளித்துவத்திற்கும் உள்ள உறவுகள், ஆதரவுகள் ஆகியவை குறித்து விளக்குகின்றார்.

பிரேசிலின் பெரு முதலாளித்துவமும் அதனது ஆதிக்கத்தில் உள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் எப்படி தம் வர்க்க நலனுக்காக தொழிலாளர் கட்சியையும் தன்னையும் பற்றி அவதூறும் பொய்ப் பிச்சாரமும் செய்து பெரும்பகுதி மக்களுக்கு எதிரிகளாகவும் சித்தரிக்கின்றார்கள் என்பதை விளக்குகின்றார். இந்த நீண்ட கலந்துரையாடலில் நாம் அறிந்து கொள்ளும் விவரங்களும் புரிந்து கொள்ளும் அரசியலும் ஏராளம். உலகமெங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னடைவையும் தேக்கத்தையும் சந்திக்கும் இந்தக் காலத்தில் அமெரிக்காவின் கொல்லைப் புறத்தில் இருக்கும் ஒரு பெரிய நாட்டில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி வெற்றிகரமாக 5 ஆவது முறை தேர்தலில் வெற்றி பெற்று அரசை அமைக்க முடிகிறது என்பது இந்தியா போன்ற நாடுகளின் இடதுசாரிகளுக்கெல்லாம் முக்கியமான பாடங்களைக் கொண்டுள்ளது எனலாம்.

இந்த நேர்காணலோடு. சிறைக்குச் செல்லும் முன் அவர் ஆற்றிய நீண்ட உரையும், அவரது வாழ்க்கை குறித்த குறிப்புகளும் அடங்கி உள்ளது.

மொத்தத்தில் இன்றைய உலகில் மிகவும் முக்கியமானதொரு நாடு குறித்தும் அதனது வன்னயமான பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்தும் அதனது ஒப்பற்ற தலைவர் குறித்தும் நாம் இதுவரை அறியாத செய்திகளை இந்த நூல் தருகின்றது.

சாதாரணமாக இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகள் பொது வெளியில் பேசத் தயங்கும் உட்கட்சி ஜனநாயக முறையீடுகள் குறித்து கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியில் அவரது நேரடி அனுபவத்தைக் கொண்டே விளக்கியிருப்பது அருமை. அதனை எந்தவித மனத்தடையும் இல்லாமல் லெஃப்ட் வேர்டு பதிப்பகம் வெளியிட்டு இருப்பது நாம் திறந்த மனதோடு இந்த அனுபவங்களை பரிசீலிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றது.

லூலாவின் வாழ்க்கைக் குறிப்பு, உட்கட்சி ஜனநாயக முறைபாடுகள் குறித்த அவரது விளக்கம், பிரேசிலில் தொழிலாளர் கட்சியின் அரசு செய்த சில முக்கியமான சாதனைகள் ஆகியவை தனியே பெட்டிச் செய்திகளாக உள்ளன.

லெப்ட் வேர்ட் (Left Word)

225 பக்கம் ரூ. 350 

- ப.கு.ராஜன், மொழிபெயர்ப்பாளர், மார்க்சிய ஆய்வாளர், ‘புரட்சியில் பகுத்தறிவு’ நூலின் ஆசிரியர்.

***

தொடக்க கால வாழ்க்கை

(நூலிலிருந்து ஒரு சிறு பகுதி)

அக்டோபர் 27. 1945 ஒரு ஞாயிறு. பிரேசிலின் மிகவும் ஏழ்மை நிரம்பிய அதன் வட கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலமான பெர்னாம்புகோவில் கேட்டிஸ் எனும் கிராமப்புறத்தில் லூயிஸ் இனாசியோ படிப்பறிவற்ற விவசாயிகள் குடும்பத்தில் ஏழாவது மகனாகப் பிறந்தார். அவர்கள் அனைவரும் இரண்டு அறைகள், மண் தரை மட்டுமே கொண்ட ஒரு வீட்டில் வசித்து வந்தனர். குழாய்த் தண்ணீர் இல்லை. அவர்கள் ஏழைகள் மாதிரி கூட இல்லை: அதற்கும் குறைவான நிலையில் இருந்தனர். அவர்கள் சபிக்கப்பட்ட பிரேசிலியர்களின் பெரும் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். வாழ்க்கையின் கொல்லைப் புறத்தில் வாழ்கின்றனர்.

சிறுவன் லூயிஸ் இனாஷியோ பிறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் தனது தந்தை அரிஸ்டைட்ஸ் இனாசியோ டா சில்வாவைச் சந்தித்தான். அதுவரை அவனும் அவனுடைய சகோதரர்களும் அம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள். யூரிடிஸ் ஃபெரீரா டி மெலோ டோனா லிண்டு என்று அழைக்கப்படுபவரான அவரது தாயார் லூலாவால் எப்போதும் வணங்கப்பட்டவர்.

அவரது தந்தை சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள சாண்டோஸுக்கு மற்றொரு பெண்ணை அழைத்துச் சென்றார். கர்ப்பிணியான டோனா லிண்டுவை கிராமத்திலேயே விட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்து, கேட்டிஸ் இல் சிறிது காலம் தங்கினார். ஆனால் மீண்டும் சாண்டோஸுக்குச் சென்றார் அவருடன் அவரது மூத்த மகன் ஜெய்ம் உடன் சென்றான். அவன்தான் டோனா லிண்டுவுக்கு உதவிய மகன்; லூலாவையும் அவரது மற்ற சகோதரர்களை கவனித்துக் கொண்டவன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1952 இன் இறுதியில், டோனா லிண்டுவுக்கு ஒரு கடிதம் வந்தது. அது ஜெய்மிடமிருந்து, அவரது தந்தை எழுதியதுபோல வந்தது. படிக்கத் தெரிந்த குழந்தை ஒன்று கடிதத்தைப் படித்து. அதில் அவரது தந்தை, வீட்டை விற்றுவிட்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சாண்டோஸ் நகருக்கு வரச்சொல்லி அவரது தந்தை அறிவுறுத்துவதாக இருந்தது.

அவர்கள் அனைவரும். ஒன்றாகச் சேர்ந்து குரங்கு வண்டி என அழைக்கப்படும் ஒரு டிரக்கின் திறந்த பின்புறம் ஏறி, சாண்டோஸ் சென்றனர். 13 நாட்கள் எடுத்த பயணம், அந்த நேரத்தில், பாவப்பட்ட ஏழைகளுக்கு பஞ்சம் பிழைக்கும் வழியாக இது பொதுவானது. வடகிழக்கு மக்கள் தெற்கே இடம்பெயர வேண்டும்; அவர்கள் "வந்தேறிகள்" என்று அழைக்கப்படுபவர்கள். பாவ் டி அராரா எனப்படும் டிரக் ஒன்றின் பின்புறம் ஏறி வருபவர்கள் ‘குரங்கு வண்டிக்காரர்கள் என்றும் இழிவாக அழைக்கப்படுவர்.

லூலா ‘ஒரு பாவ் டி அராராவாக’ ‘குரங்கு வண்டிக்காரராக’. வந்தேறியாக இருந்தார். இது அவரது உள்ளத்தில் ஆழமாக என்றும் இருந்தது. ஒரு சிறு பையனாக அவர் தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் தொலைதூர துறைமுகத்திற்கு வந்தார் - வறுமையான உள்நாட்டில் இருந்த ஒரு சிறுவனான லூலாவிற்கு. ஒரு நகரத்திற்கு அருகில் கடலில், இவ்வளவு தண்ணீர் இருக்கும் என்றே தெரியாதாம்! இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது அண்ணனோடு சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினார். தெருவில் சிறு பண்டங்களை விற்பது. ஷூ பாலிஷ் போடுவது என பல வேலைகளைச் செய்துள்ளார்.

அவர் தனது தந்தைக்குத் தெரியாமல் தாயாரால் பள்ளியில் படிக்க வைக்கப்பட்டார். தந்தை தனது குழந்தைகளை படிக்கவிடாமல் தடுத்தார். பள்ளிக்குச் சென்றார்; அவரது தாயார். மோசமாக நடத்தப்படுவதைத் தாங்க முடியாமல் அவனது தந்தையைப் பிரிந்தாள்; தனது பதினொன்றாவது பிறந்தநாளில் அவர் தனது தாயுடன் சாவோ பாலோ நகரத்திற்குச் சென்றார். அங்கு இபிரங்காவின் தொழிலாள வர்க்க பகுதியில் சிறு குடிசையில் வசித்தார்கள். அவர் செருப்பு தைக்கும் தொழிலுக்குச் சென்றார். பின்னர் அலுவலகப் பையனாகவும், பின்னர் அவருக்கு பதின்மூன்று வயது வரை, ஒரு சலவை நிலைய உதவியாளராகவும் பின்னர், அவர் புத்தகக் குடௌனிலும் பணியாற்றினார். பின் முதல் முறையாக, 1959 ஆம் ஆண்டு ஒரு நிரந்தர வேலையில் சேர்ந்தார். இனி தற்காலிக வேலைகளில் இருந்து தினசரி வேலை தேட வேண்டாம்! அவர் தனது உண்மையான வேலையைப் பெற்றதில் எவ்வளவு பெருமிதம் கொண்டார் என்பதையும் அந்த ஒளிமிகு மாதத்தையும் ஒருபோதும் மறக்கவில்லை. பின்னர் விரைவில் அராமஸீனஸ் ஜெராயிஸ் கொலம்பியா (Armazéns Gerais Colombia) எனும் தொழிற்சாலையில் தொழிலாளி ஆனார்.

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு. செப்டம்பர் 1960 இல். ஃபேபிரிக்கா டெ பரஃபூசோஸ் மர்டே (Fábrica de Parafusos Marte) இல் அவர் மெக்கானிக் வேலைக்கு அமர்த்தப்பட்டார்; அத்தோடு நமது ஐடிஐ போன்ற கல்வி நிறுவனத்தில் மெஷினிஸ்ட்டாக, டர்னராக கல்வியும் பெற்றார். அந்த தேசிய தொழில் பயிற்சி நிறுவனமான செனாய் அவரது வாழ்க்கைப் பாதையை மீண்டும் மாற்றியது. அதன் பின் தொழிலாளர் சங்கத்தில் இணைந்தது. அதன் தலைவரானது. பின் ‘தொழிலாளர் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரானது. பின் கட்சியின் தலைவரானது. மூன்று முறை அதிபர் தேர்தலில் தோற்று பின் நான்காவது முறை அதிபராக வெற்றி பெற்றது எல்லாம் பெரும் வரலாறு.

***

நேர்காணல்

(நூலிலிருந்து ஒரு சிறு பகுதி)

கில்பர்டோ மரிங்கோனி (Gilberto Maringoni)

மிஸ்டர் பிரசிடெண்ட். நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; நமது உரையாடலின் போது பலமுறை என் மனதில் தோன்றியது: தொழிலாளர் கட்சி (PT) என்ன செய்ய வேண்டும் என நீங்கள் ஆணையிடுவீர்களா?

லூலா

இல்லை. நான் ஆணையிடுவதில்லை. நான் அதனை விரும்பவுமில்லை.castro lulaஜூக்கா (Juca Kfouri)

ஆனால், நீங்கள் கட்சியை இயக்கவில்லை என்றால் நீங்கள் எதை இயக்குகிறீர்கள்? கொரிந்தியர்களையா? [சென்னை சூப்பர் கிங்ஸ் போன்று பிரேசிலின் கால்பந்து அணி; லூலாவின் சாவோ போலோ நகரைச் சேர்ந்தது; அவரால் ஆதரிக்கப்படும் அணி!]

லூலா

PT என்பது வேறு விஷயம். நீங்கள் புரிந்து கொள்வீர்கள். PT "பாரம்பரிய இடது" என்று அழைக்கப்படுபவர்களிடமிருந்து வேறுபட்டது. பாரம்பரிய. வரலாற்றுரீதியான இடதுசாரி கட்சிகளில். அதன் பொதுச் செயலாளர் கிட்டத்தட்ட ஒரு பேரரசர். பொதுச் செயலாளர் பேசினால், மத்திய குழு கீழ்ப்படியும்; அவர் அடிக்கடி மத்திய குழு சார்பில் பேசுவார். ஒரு கட்சிக் காங்கிரஸைத் தொடங்கும் போது, பொதுச்செயலாளர் அவரது உரையை வாசிப்பார்; காங்கிரஸ் அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும். PTஇல் இது போல் நடப்பதில்லை. தொழிற்சங்க இயக்கத்தில். அடிமட்டத்தில் இருந்து வந்த எங்கள் பின்னணிக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வேர் அடிச் சமூகங்கள், சமூக இயக்கங்களில், ஒரு தலைவர் அவர் எடுக்கும் நிலைப்பாட்டிற்காக மதிக்கப்படுவதில்லை எனும் நிலை இருக்கும். அவர் செய்யும் பணிக்காக அவர் மதிக்கப்படுகிறார். PT யில். நீங்கள் கவனமாக இல்லையென்றால். நீங்கள் ஏற்றுக் கொள்ளப்ட மாட்டீர்கள். நீங்கள் ரொரைமாவுக்குச் சென்று [பிரேசிலில் வடக்கு எல்லையில் உள்ள ஏழ்மையான மாநிலம்] அங்கு ஒருமுறை, உள்ளூர் கட்சித் தலைமையுடனான சந்திப்பின் போது நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாகப் பேசினால், ..அவர்கள் அவர்களின் குரலை உயர்த்தி “இல்லை! இங்கே விஷயங்கள் அப்படி இல்லை! இங்கே அப்படி செய்ய வழி இல்லை!" என உங்களிடம் வெட்டொன்று துண்டு இரண்டாகச் சொல்ல தயங்கமாட்டார்கள்.

எனவே அவர்கள் பேச வேண்டும்; நீங்கள் கேட்க வேண்டும். இந்த மாதிரி கலாச்சாரம் மற்ற பாரம்பரிய இடதுசாரி அரசியல் கட்சிகளில் இல்லை. நிச்சயமாக இல்லை. PT க்கு நான் ஒரு முக்கியமான நபர். இது வெளிப்படையாகத் தெரிந்த ஒன்று. எனக்கும் தெரியும். என்னுடைய கருத்து முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பதை நான் அறிவேன். ஆனால் நான் சொல்வது எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிடாது.

எடுத்துக்காட்டாக. ஏர்டன் சோரஸ் பற்றிய விவாதத்தில் எனக்கு எதிராக வாக்களித்து என்னைத் தோற்கடித்தனர். 1985 இல் ஏர்டன் சோரெஸ் (அதிபருக்கான மறைமுகத் தேர்தலில் டேன்கிரடோ நெவ்ஸ் விற்கு வாக்களிப்பதற்கு முன்பே தண்டனை). நாம் உண்மையிலேயே நடந்தபிறகே அவர் தண்டிக்கப்பட வேண்டும்; அதுவரை காத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்

ஆனால் கட்சியில் என்நெருங்கிய தோழர் ஜால்மா மற்றும் மற்ற மெட்டல் தொழிலாளர் யூனியன் (ஒரு தொழிலாளியாக லூலாவின் முதல் யூனியன்) உட்பட எனது விருப்பத்திற்கு மாறாக ஏர்டன் சோர்ஸ், பீட் மென்டிஸ் மற்றும் ஜோஸ் யூட்ஸ் ஆகியோரை வெளியேற்ற வேண்டும் என வாக்களித்துத் தீர்மானித்தனர். "உனக்கு என்ன தெரியும். லூலா. நீ நல்லவந்தான். ஆனால் பெரும்பான்மை முடிவு; எடுக்கப்பட்டது; நீ செயல்படுத்து!" என்றனர். நீங்கள் பார்க்கிறீர்களா? கட்சியில் இப்படித்தான் நடக்கிறது. நான் அதைத்தான் ஏற்கிறேன். இதுதான் நல்லது; இதுதான் நல்லது.

நான் ஒருமுறை தோழர். செர்வாண்டஸ் அவர்களோடு கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிற்குச் சென்றிருந்தேன். (செர்வாண்டிஸ் கியூபக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியமானத் தலைவர்; அவர் கியூபாவின் தூதரகத்தில் அரசியல் ஆலோசகராக முக்கியப் பணியாற்றினார். PT கட்சி உருவான போது அதற்கு உதவியுள்ளார்.) அங்கு மூவாயிரம் பிரதிநிதிகள் இருந்தனர். நான் அங்கே அமர்ந்திருந்தேன்.

ஒவ்வொரு வாக்குப்பதிவிலும். ஒரு தலைவர் பேசுகின்றார் (ஸ்பானிய மொழியில் அவர்கள் உச்சரிப்பில் மிமிக்ரி செய்து காட்டுகிறார்): "தொழில்மயமாக்கல் பற்றிய ஆய்வறிக்கையை நாங்கள் இப்போது விவாதிக்கப் போகிறோம். குழு ஒரு முன்மொழிவைத் தயாரித்துள்ளது; நாங்கள் அதை தளபதிக்கு (காமாண்டெண்ட் - ஃபிடல் காஸ்ட்ரோ) அனுப்பினோம் தலைவர் பிடல் காஸ்ட்ரோ அதை ஒப்புக்கொள்கிறார். வாக்களிப்போம்!" (சிரித்து.)

ஒவ்வொரு முடிவும் இப்படி ஒருமனதாக இருந்தது. எனவே நான் சொன்னேன்: “ஹே, செர்வாண்டஸ். PT கட்சியில். பதினோரு பேர் கட்சி நிர்வாகிகள் என்றால் அந்தக் குழு கூடி நாங்கள் ஒரு உடன்பாட்டுக்கு வருவோம். அந்த அறையிலிருந்து நாங்கள் அந்தத் தீர்மானத்தை மத்தியக் குழுவில் முன்மொழிவதற்கு முன்பே வெட்டியும் ஒட்டியும் மாற்றுக் கருத்துகள் உருவாகிவிடும். இங்கு போன்ற ஒத்த கருத்து சாத்தியமற்றது" என்றேன். “வெளிநாட்டுக் கொள்கை பற்றிய தீர்மானம் விவாதத்திற்கு வரும்; அதை தலைமையிடம் இதுவரை விவாதிக்கவில்லை; எனவே அப்போது நிறைய விவாதம் நடக்கும்; நீங்கள் காண்பீர்கள்” என்றார்.

மறுநாள் நான் அங்கு சென்றேன். பழம்பெரும் கம்யூனிஸ்ட் ரஃபேல் காஸ்ட்ரோ கூட்டத்தில் பேசினார்:

"Compañeros y compañeras. (தோழர்களே. தோழியரே) இது. வெளியுறவுக் கொள்கை ஆய்வறிக்கை.. நாங்கள் இந்த அறிக்கையை தலைமைக்குக் கொண்டு செல்லவில்லை. ஆனால் நேற்று நாங்கள் தளபதி பிடல் காஸ்ட்ரோ ரூஸ் அவர்களைச் சந்தித்தோம். நாங்கள் ஒரு உரையை எழுதினோம்; அவர் அதை ஒப்புக்கொள்கிறார். இப்போது வாக்களிப்போம்.” என்றார் (சிரிப்பு) ஒருமனதாக வாக்களிக்கப்பட்டது! நான் இந்த அருமையைக் கண்ணால் கண்டேன்! ஆனால் அது விதிவிலக்கல்ல;

ஜோ அமேஸானோ (João Amazonas) பிரேசிலியக் கம்யூனிஸ்ட் கட்சி (PCdoB) -ஐ வழி நடத்தியபோது. ..அது அப்படியே இருந்தது. (ஜோ அமேஸானோ 1962-2001 காலத்தில் பிரேசிலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர்] ஜோ அமேஸானோக்கு முன். அது இன்னும் மோசமாக இருந்திருக்க வேண்டும். பழைய பிசிபியிலும் (PCB - 1960 களில் கட்சி பிரிவதற்கு முந்தைய பழைய ’பிரேசில் கம்யூனிஸ்ட் கட்சி’) அது போல்தான் இருந்தது. மற்ற இடதுசாரி அமைப்புகளில்... கிட்டத்தட்ட இதுதான் நிலை. எல்லோரும் PT இன்னும் ஜனநாயகமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள். ஆனால், அவர்கள் ட்ராட்ஸ்கியிஸ்டுகளின் சிறிய குழுக்களை மற்றும் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்ளும் போது. ஜனநாயக ரீதியாக அணுகுவது இல்லை. எனவே, மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், PT என்பது உலகில் ஒரு பெரிய புதிய அரசியல் கண்டுபிடிப்பு.

ஒரு நாள், கியூபாவிலிருந்து வரும் விமானத்தில், நான் கில்ஹெர்ம் பவுலோஸுடன் (Guilherme Boulos - PSOL எனும் இடதுசாரிக் கட்சியின் இளம் தலைவர். அது லூலாவின் PT கட்சியின் கூட்டணிக் கட்சி) பேசிக் கொண்டிருந்தேன். பொடேமாஸ் கட்சியோடு (Podemos - ஸ்பெயினின் வேகமாக வளர்ந்து வரும் ‘புதிய இடதுசாரிகள்’ கட்சி. இப்போது சோசலிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் உள்ளார்கள்) உடன் பேசியதில் கில்ஹெர்ம் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தார்!

நான் சொன்னேன்: “அன்பே கில்ஹெர்ம். நான் உன்னிடம் ஒன்று சொல்கிறேன்,. உனக்கு தெரியுமா PT மற்றும் பொடேமாஸ் இடையே உள்ள வேறுபாடு? PT ஒரு முப்பத்தெட்டு ஆண்டுகள் வயதான முதிர்ந்த மனிதன். போடேமாஸ் இன்னும் டயப்பர்களை அணிந்துள்ள குழந்தை; அதற்கு தவறு செய்ய இன்னும் காலம் கிடைக்கவில்லை. ஏனென்றால் அது பதவியேற்கவில்லை..”

PT. இடதுசாரி கட்சி உறுப்பினர்களை உரிமையுள்ள குடிமக்களாக உணர வைத்தது. ’இடது’ பிரேசிலின் அரசியல் மையத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டு இருந்தது. எல்லா இடங்களிலும் நிறைய சிறிய குழுக்கள் வெளியே தெரியாமல் இருந்தன. திடீரென்று, PT தோன்றியது. ஒரு பெரிய குடை திறக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு இடம் உண்டு கட்சிக்குள். பேச, செயல்பட வாய்ப்பு உள்ளது. PT ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்புக்கு எதிராக இருந்தது. கிட்டத்தட்ட ஏனைய இடதுசாரிகள் - டிராட்ஸ்கியிஸ்ட்டுகள் உட்பட ரஷ்யாவிற்கு சாதகமாக இருந்தபோதும் கூட PT ஆக்கிரமிப்பைக் கண்டித்தது. நான் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக இருந்தேன்; நான் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக இருந்தேன்; அவர்கள் தங்கள் சொந்த வேலையைக் கவனிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனவே PT யால் ஜனநாயக சகவாழ்வை நிறுவ முடிந்தது; வேறுபாடுகள் உள்ள இடங்களிலும் ஜனநாயக சகவாழ்வை நிறுவ முடிந்தது. இவானா என்னைப் போல சிந்திக்க வேண்டியதில்லை. அல்லது என் மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டியதில்லை. என்னைப் போன்று அவர் கொரிந்தியன் ரசிகராக இருக்க வேண்டியதில்லை. அவர் என்ன விரும்புகிறாரோ அதைச் செய்யலாம். ஆனால் நாம் இணைந்து இந்த நாட்டிற்கு ஒரு திட்டத்தை உருவாக்க முடியும். நான் நினைப்பது இது PT-யை மிகவும் சிறப்பானதாக ஆக்குகிறது. அதன் கோட்பாடு எங்களிலிருந்து மாறுபட்டு வித்தியாசமாக சிந்திப்பவர்களை விலக்குவதில்லை.

கால்பந்து ரவுடி [Hooligan] என்றால் என்ன தெரியுமா? PT அந்த ஆள் இல்லை. எங்கள் உருகுவே தோழர். கலியானோ கூறுவார்:” கால்பந்து ரவுடி விளையாட்டைப் பார்க்க மைதானத்திற்குச் செல்லும் பையன் அல்ல; அவன் விளையாட்டிற்குச் சென்று எதிராளியை முறைத்துப் பார்க்கிறான். சண்டையிட விரும்புகிறான்.”அவருக்கு விளையாட்டுதான் முக்கியம். PT ரவுடி அல்ல. PT விளையாட்டைப் பார்க்க விரும்புகிறது. மேலும், நீங்கள் கவனம் செலுத்திப் பார்த்தால் பொது நிர்வாகத்தின் பார்வையில் இந்த நாட்டில் நடந்த முற்போக்கான விஷயங்கள் 1980களில் PT தலைமையில் நகராட்சி நிர்வாகங்கள் வந்தபோது இருந்து தொடங்கியது.

Pin It