injustice 314வழக்கு தொடங்கியப்போது
என் மகள் பிறந்தாள்.
இழுத்தடித்து
குற்றவாளி விடுதலையானல்
அவளின் பேத்திக்கு
திருமணம் என்பாள்.

ஜவுளிக்கடை
பொம்மை போலவே
இப்போதெல்லாம்
காட்சியளிக்கிறாள்
நீதிதேவதை

நன்றாகவே பயன்படுகிறதாம்
நீதிமன்ற சுத்தியல்
சட்டங்களை உடைப்பதற்கு

ஏன் நீதிபதிகளே என்னை
விடுதலை செய்ய
சட்டத்தில் இடமில்லையா?
கேட்கிறது நீதிமன்ற
குற்றவாளிக் கூண்டுகள்.

கருப்புச்சட்டை போட்ட நானும்
நீதிபதியே என்று
அவசரத்திற்கு தீர்ப்பு எழுதுகிறது
காக்கா,
சத்தியம் பேசிய
மகாத்மா சிலைத் தலையில்!

சட்டமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும்
பெருத்த வித்தியாசமில்லை
பேசிக்கொண்டே இருப்பார்கள்
பின்பு.
பேசிக் களைத்து
கலைத்துவிடுவார்கள்.

நீதிதேவதையின் கண்கட்டை
அவிழ்த்துவிடாதீர்கள்!
செத்தநீதிகளின் எலும்புக்கூடுகளை
காண நேரிட்டு
பணநாயகத்தின் மெத்தையில்
ஜனநாயக கண்ணீர் வடிப்பாள்
பாவம்..!

- இரா.சந்தோஷ் குமார்

Pin It