சொற்கள் விறைத்துப்போயிருக்க
மழை சனங்களில் குளித்துக்கொண்டிருக்கிறது.
 
மலக்குழியில் புதைந்து இறந்த சிறுமியின் உடலை
மீட்டு வைத்திருக்கிறர்கள்.
கல்லாற்றில் மிதந்துகொண்டிருக்கிறது
தண்ணீர் நிரப்பும் கலன்கள்.
நிவாரணக் கிராமத்தை நனைத்துக்கொண்டிருக்கிறது மழை.
கூடாரங்களுக்குள் தண்ணீர் நிறைய
குழந்தைகள் மிதந்துகொண்டிருக்கின்றன.
 
மழைக்காடாகிறது
ஒதுக்குப்புறமாக இருக்கிற காட்டுக்கிராமம்.
அள்ளுண்டு போகிறது முட்கம்பிகள்.
களைத்த முகத்தை கழுவி
நிரப்பிக்கொண்டிக்கிறது பெருமழை.
 
திறந்த வெளியில் விளையாடிக்கொண்ருந்த சிறுவர்கள்
மழையில் ஒதுங்கி நிற்கிறார்கள்.
குளித்துக்கொண்டிருக்கிறது கூடாரங்கள்.
அடுப்பு கரைந்து முடிகிறது.
 
விறைத்துப்போயிருக்கிறது மனம்.
பள்ளத்தை நோக்கிச் செல்லுகிறது கூடாரம்.
கால்வாயில் போகும் பாத்திரங்களுக்கு பின்னால்
ஓடிச்செல்லும் அம்மாவின் கால்கள்
மணலில் புதைகிறது.
 
நிலத்தை கழுவிய நீர்
முட்கம்பிகளுக்குள் அலைந்து
கிராமத்தை குளமாய் நிரப்பியிருக்கிறது..
சொற்கள் நனைந்து நீருரிப்போய்க்கிடக்கிறது.
சேற்றில் புதைந்துகொண்டிருக்கிறது ஆறு கிராமங்களும்.
--------------------------------
(13.09.2009 செட்டிக்குளம் தடுப்புமுகாம் கிராமங்கள்)

Pin It