டெல்லியில், பல்கலைக்கழக மாணவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, கடந்த நவ.9 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை எழுச்சியான பேரணியையும், பேரணியின் முடிவில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டையும் நடத்தினர். ஜவகர்லால் தேசிய பல்கலைக்கழகம், டெல்லி பல் கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் 500 பேர் - இந்தப் பேரணியில் பங்கேற்று, இலங்கை அரசு நடத்தும் இனப் படுகொலைகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்.

பேரணி டெல்லியில் மண்டி இல்லம் பகுதியில் காலை 10 மணிக்கு தொடங்கி ஜந்தர் மந்தரில் 11 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து, அதே பகுதியில் தமிழர் வாழ்வுரிமை மீட்பு மாநாடு தொடங்கியது. மாநாட்டு அமைப்பாளரும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவருமான கலையரசன் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டில் தமிழர் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரும், மாநிலங்களவை உறுப் பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளருமான டி.ராஜா, பேராசிரியர் சரசுவதி, புதுவை சுகுமார், பல்கலைக்கழக மாணவிகள் பல்லவி, பிரியா, பேராசிரியை விஜயலட்சுமி, ராசாராம் உள்ளிட்டோர் பேசினர். தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத் தின் தீர்மானத்துக்குப் பிறகும் சிங்களப் பேரினவாத அரசு தமிழர்கள் மீதான போரைத் தொடருவதையும், அதை தட்டிக் கேட்காத மத்திய அரசையும், மாநாட்டில் உரையாற்றியோர் வன்மையாக கண்டித்தனர்.

பேராசிரியர் சரசுவதி பேசுகையில், “ஈழத் தமிழர்கள் தேசிய சுயநிர்ணய உரிமையையே வலியுறுத்தி வரு கிறார்கள். தேசிய சுயநிர்ணய உரிமை என்பது அய்.நா. அங்கீகரித்துள்ள சர்வ தேச உரிமையாகும். உலகில் சுய நிர்ணய உரிமைக்காக நடந்த போராட்டங்களை அய்.நா. அங்கீகரித்துள்ளது. இந்த உரிமைக்கு இந்தியாவும், அய்.நா.வில் ஏற்பளித்துள்ளது. எனவே, போர் நிறுத்தப்பட்டு, தேசிய சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான அரசியல் தீர்வுகளை முன்னெடுப்பது ஒன்றுதான் - ஈழத் தமிழர் பிரச்சினைக்கான சரியான தீர்வாக இருக்க முடியும்” என்று குறிப்பிட்டார்.

பிற்பகல் 3.30 மணி வரை மாநாடு நீடித்தது. பின்னர், சிவாஜிலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழர்கள் மீதான போரை நிறுத்தாமல், நிவாரணப் பொருட்களை வழங்கு வதால் எந்தப் பயனும் ஏற்படாது என்றும், போரை நிறுத்துமாறு இந்திய அரசு இலங்கையை வற்புறுத்த வேண்டும் என்றும் கூறினார்.

Pin It